இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மார்த்தா மரியாவின் வீட்டிற்கு செல்கிறார். மார்த்தா பலவிதமான பணிகளில் ஈடுபடுகிறார். மரியாவோ, இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மார்த்தா தன்னை மரியா தனிமையில் விட்டு விட்டாள். எனக்கு உதவி செய்ய அவளிடம் கூறுங்கள் என இயேசுவிடம் கூறும் போது, இயேசு மார்த்தாவை பார்த்து கூறுகிறார், மார்த்தா! நீ பற்பல பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இருக்கிறாய். ஆனால் மரியாவோ நல்லதை, நேர்மையானதை, நல்ல பங்கை தேர்ந்து கொண்டார், எனக்கூறி மரியாவின் செயலை சுட்டிக்காட்டுகிறார்.
இன்றைய முதல் வாசகத்தில் கூட திருத்தூதர் பவுல் தான் யூத மறையைப் பின்பற்றிக் கொண்டிருந்த போது இயேசு என்பவரை ஏற்றுக் கொண்டவர்களை தேடிச் சென்று கண்டுபிடித்து அவர்களை கொலை செய்த தான் எப்படி இன்று இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் ஒரு தூதனாக இருக்கின்றேன் என தன் வாழ்க்கை பாடத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்வதாக அமைகிறது.
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? என்பதை பற்றி சிந்திக்க இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.
மத்தேயு என்பவரை பற்றி நாம் அறிந்திருப்போம். சுங்கச்சாவடியில் அமர்ந்து வரி வசூலிக்கும் பணியை செய்து கொண்டிருந்தவர்தான். ஆனால் அவர் இயேசு அழைத்தபோது அழைப்பின் குரலுக்கு பதில் கொடுத்தவராய், தன் பணியை விட்டு இயேசுவைப் பின்தொடரத் துவங்கினார். அவரின் வாழ்வு மாற்றம் பெற்றது.
சக்கேயுவை பற்றியும் நாம் அறிந்திருப்போம். வரி வசூலிக்க கூடிய அவர், ஒரு பாவி என கருதப்பட்டவர். ஆனால், இயேசுவை காண வேண்டும் என்ற ஆவல், அந்த ஆவலை உணர்ந்துகொண்ட இயேசு, அவரை அழைத்து அவரோடு சென்று அவர் வீட்டில் அமர்ந்து அவரோடு உணவு உண்டார். சக்கேயுவின் மனமாற்றத்தின் அடிப்படையில் அந்த வீட்டிற்கு அன்று மீட்பு உண்டாயிற்று என்ற செய்தியை வழங்குகிறார்.
இன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க கூடிய இந்த உலகத்தில் நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்? என்று சிந்திப்போம். எதையோ தேடி அனைவரும் மிகவும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் தேட வேண்டியது எது? எதற்காக நாம் நேரம் செலவிட வேண்டும்? என்பதை சிந்திக்க இன்றைய வாசகங்கள் இன்று நம்மை அழைக்கின்றன.
மார்த்தாவை போல இன்று நம்மில் பலர் பரபரப்பாக பல பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அருகாமையில் உள்ள உறவுகளை கண்டு கொள்ள மறந்து போகிறோம். முன்பெல்லாம் ஒரு திருமண நிகழ்வு என்றால் உறவினர்கள் அனைவரும் ஒரு வீட்டில் கூடி இருந்து இரண்டு, மூன்று நாட்கள் தங்கி அனைவரும் இணைந்து சென்று தேவையானவைகளை எல்லாம் வாங்கி அந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக கலகலப்பாக, மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். இதை சிறு வயதில் நானும் என் வாழ்வில் பல இடங்களில் பல நேரங்களில் அனுபவித்திருக்கிறேன். அதுப்போலவே ஒருவரது இறப்புச் சடங்கு என்றாலும் கூட உடனடியாக அந்த இறப்புச் செய்தி கேட்ட வண்ணமே அங்கு சென்று அவர்களின் துயரத்தில் அவர்களோடு மூன்று, நான்கு நாட்கள் என அவர்களோடு தங்கி அவர்களுக்கு ஆறுதல் கூறி, பிறகு தங்கள் பணியை தொடர கூடியவர்களாக இருந்தவர்கள் தான் நாம் என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால், இன்று இந்த பரபரப்பான உலகில் இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை. திருமணம் பத்து மணிக்கு என்றால் ஒன்பதரைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லக்கூடியவர்களாக மாறிவிட்டோம். இறப்புச் சடங்கு என்றால் போய் தலையைக் காட்டிவிட்டு வந்துவிடவேண்டும் உடனடியாக என்று சென்றுகொண்டிருக்கிறோம். உண்மையில் மனித மனங்கள் ஏங்குவது அன்பிற்காகவும் உறவுக்காகவும். இந்த உறவுக்கு நாம் மதிப்பு கொடுக்கின்றோமா?
நம் வீட்டிற்கு பல நேரங்களில் பலர் விருந்தினர்கள் வருகிறார்கள். விருந்தினர்களை நாம் உபசரிக்கின்றோம். உபசரிப்பின் அடையாளம் உணவளிப்பது மட்டுமல்ல. அவர்களோடு அமர்ந்து உரையாடுவதும். இன்று நாம் உரையாடல் நடத்துகிறோமா? நம்மிலும் பலர் பல நேரங்களில் நம்மை தேடி வருபவர்களை நம்மோடு இழுத்துக் கொண்டு நாம் பலவிதமான பணிகளில் ஈடுபடுகிறோமே ஒழிய வந்தவர்களோடு அமர்ந்து அவர்களின் நிறை குறைகளை கேட்டு அவர்களோடு நேரம் செலவிட இன்று நாம் மறந்து கொண்டே இருக்கிறோம். எத்தனையோ பெற்றோர்கள் இன்று வீட்டில் தங்கள் குழந்தைகளிடத்தில் கூட முறையாக நேரம் செலவிடாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதே பெற்றோருக்கு தெரியாத வண்ணம் இருக்கிறது. அனைவரும் நான்கு சுவர்களால் சூழப்பட்ட ஒரு வீட்டுக்குள் தான் இருக்கிறோம். ஆனால் அனைவரும் ஏதோ வேறு ஒரு நாட்டில் இருப்பது போல ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய தாயும் தந்தையும் குழந்தைகளும் வேறு எங்கோ ஒரு அயல் நாட்டில் இருப்பது போல, பிரிந்து போனவர்கள் போல் இருந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு மரியாவை போல இயேசுவின் அருகில் அமர்ந்து இயேசுவோடு உரையாடிய மரியாவைப் போல நாமும் அருகில் நமது குடும்பத்தில் உள்ளவர்களோடு அமர்ந்து உறவாடி உரையாட இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன. கீரனூர் பங்கின் கிளைப்பங்கான இலட்சுமணன்பட்டி என்ற ஒரு ஊர் உள்ளது. அந்த ஊருக்கு களப்பணிக்குச் செல்லும் பொழுது பல நேரங்களில் நான் கண்டு வியந்த ஒரு செய்தி. ஒரு குடும்பம் இருக்கிறது அந்த குடும்பத்தில் தந்தை இல்லை. தாய்க்கு மூன்று மகன்கள். மூன்று மகன்களும் படிக்கிறார்கள். தாயோ வேலை செய்து அந்த குடும்பத்தை காத்துக்கொண்டிருக்கிறார். இவர்களிடம் எனக்கு பிடித்த ஒரு நிகழ்வு என்ன தெரியுமா? இந்த மூன்று குழந்தைகளும் காலை கண்விழிப்பதற்கு முன்பாக உணவு சமைத்து வைத்து விட்டு பணிக்குச் செல்வாள். மீண்டும் வீடு திரும்பி வரும்போது குழந்தைகள் உணவு தயாரித்து வைப்பார்கள். மூன்று குழந்தைகளும் தாய்க்காக காத்திருப்பார்கள். தாய் வந்த பிறகு அவர்களோடு உணவு அருந்துவார்கள். இன்று நமது குடும்பத்தில் எத்தனை நபர்கள் ஒன்றாக அமர்ந்து உணவருந்துகிறோம்? காலம் மிகவும் விரைவாகச் செல்கிறது என கூறிக்கொண்டு நாமும் விரைவாக கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறோமே ஒழிய, நமது அருகாமையில் இருப்பவரோடும் அண்டை வீட்டாரோடும், நேரம் செலவிட மறந்து போகின்றோம். இன்னும் குறிப்பாக நகரங்களில் பக்கத்து வீட்டில் இருப்பவர் யார் என்றுகூட தெரியாத வண்ணம் பலர்இருக்கிறார்கள் என்பதை நாம் அறியலாம் . ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பார்த்தால் பலர் இருக்கிறார்கள். ஆனால் பக்கத்து வீட்டில் இருப்பவர் யார்? என்பதை கூட அறியாமல் இருப்பவர்களும் இன்று இவ்வுலகில் உண்டு என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. இத்தகைய சூழ்நிலைகளை எல்லாம் சரி செய்து கொள்ள வேண்டும் என்பதே இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நமக்குத் தரக்கூடிய செய்தியாக உள்ளது.
அன்புக்குரிய இறைச்சமூகமே மரியாவைப்போல் நம் அருகில் இருப்பவர்களோடு நேரம் செலவிடுவோம். மார்த்தாவின் பணி தவறானது அல்ல, பல பணிகள் இருக்கிறது வந்தவர்களை உபசரிக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. அதேசமயம் அதிலும் முக்கியமானது, வந்த உறவினரோடு உரையாடுவது. இன்று நமது குடும்ப உறுப்பினர்களோடு உரையாடலை தொடங்குவோம். இறைவன் நம்மை ஆசிர்வதிக்கவும், உறவுகள் பலப்படவும் இன்றைய நாளில் உரையாடல்கள் மூலம் உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள இன்றைய நாளில் ஒவ்வொருவரும் உள்ளத்தில் உறுதியேற்று உரையாடல் நடத்துவோம்.....
நமது குடும்பத்தில் தொடங்கி உலகில் உள்ளவர்கள் அனைவரோடும்.
நாளுக்கு நாள் உங்களுடைய கருத்துப்பதிவுகள் மென்மேலும் மெருகேறிக்கொண்டே இருக்கின்றன சகோ.. 👍வாழ்த்துகள்.. 🙏
பதிலளிநீக்குவாங்க உரையாடலாம்... 😌
Thanks
பதிலளிநீக்கு