அன்பு செய்!
பிறகு அனைத்தையும் செய்!
என்கிறார் புனித அன்னை தெரசா!
அன்பு தன்னைப் போல பிறரையும் நேசிக்கும்!
அன்பு இருக்கும் இடத்தில் ஆற்றல் பெருகும்!
தென்கொரியா நாட்டிலே சீயோல் என்ற இடத்திலேயே நடந்த நிகழ்வு ஒன்று. ஒரு தாய் பத்தாவது மாடியில் நின்று கொண்டிருந்த பொழுது அவள் கையில் இருந்த காசோலை ஒன்று தவறுதலாக கீழே தரைதளத்தில் விழுந்துவிட்டது. உடனே அந்த காசோலையை எடுக்க அந்தப் பெண் ஓடிச் சென்றாள். பத்து மாடிகள் இறங்கி தரை தளத்திற்கு வந்து அந்த காசோலையை எடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தாள், அவளுக்கு ஒரே அதிர்ச்சி. அவளுடைய இரண்டு வயது குழந்தை பத்தாவது மாடியிலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தில் யாரையும் அழைப்பதற்கு நேரமில்லை. உடனே தனது இரு கைகளையும் விரித்து குழந்தையை நோக்கி கைகளை நீட்டினாள். மேலிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த குழந்தை அவளது கைகளில் பட்டு அவள் மேல் விழுந்து உயிர் பிழைத்தது.
அந்தக் குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற அந்த தாயின் எண்ணம் அந்தக் காசோலையை விட தனது குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்த செயலாக மாறி அவளுடைய குழந்தையை காப்பாற்றியது.
இன்றைய வாசகத்திலும் கூட நமது உடலும் மனமும் விரும்பிய வண்ணம் செயல்பட்டு கடவுளுக்கும் மற்றவருக்கும் எதிராக நாம் தீயன புரிந்த போதும் கடவுள் தமது இரக்கத்தால் நமது குற்றங்களை மன்னிக்கிறார். நம் மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார். அந்த அன்பினால் நமது குற்றங்களில் இருந்து நமக்கு மன்னிப்பு அளித்து நம்மை தம்மோடு இணைத்துக் கொண்டுள்ளார். பாவத்தால் இறந்த நமக்கு புத்துயிரும் புது வாழ்வும் அருள்கின்றார். கடவுளின் கைவேலைப்பாடாகிய நாம் அனைவரும் நற்செயல்கள் புரிவதற்கேன்றே, பிறரை அன்பு செய்வதற்கென்றே கடவுளால் படைக்கப் பட்டிருக்கிறோம் எனவும் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து இருக்கிறோம் எனவும், இன்றைய வாசகத்தில் புனித பவுல் குறிப்பிடுகின்றார். கிறிஸ்து இயேசுவோடு இணைந்த இந்த உறவை ஒவ்வொரு நாளும் நாம் புதுப்பித்துக்கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட மிகுதியான அருளை அளிப்பவராக இறைவன் இருக்கின்றார். மிகுதியான ஆசீர்வாதங்களையும் மிகுந்த விளைச்சலையும் அந்த மனிதருக்கு ஆண்டவர் கொடுக்கின்றார். ஆண்டவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்ட அந்த மனிதர் தனது சக மனிதரை நோக்காமல் தன்னை மட்டுமே நோக்கியதாக தனது களஞ்சியங்களை இடித்து பெரிதாகக் கட்டி அவற்றில் தானியங்களை சேமித்து அதன் மத்தியில் அமர்ந்து கொண்டு பல்லாண்டுகள் உண்டு குடிக்க தனது உள்ளத்தில் பேராசை கொள்கின்றார்.
நற்செயல்கள் புரிவதற்கு படைக்கப்பட்ட அந்த மனிதர் தனது சுயநலத்தால், பேராசையால், தன்னை மட்டுமே நோக்கியவராக இருந்த காரணத்தினால் "எல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக" என்று கூறிய இயேசு ஆண்டவர், அனைவரையும் அன்பு செய்யும் இயேசு ஆண்டவர், அந்த சுயநல மனிதனின் சுயநலத்திற்கு முடிவுகட்டுவதை எடுத்துரைக்கின்றார். இன்று இரவே உனது உயிர் உனது உடலை விட்டுப் பிரிந்து விட்டால் நீ என்ன செய்வாய்? என்று கேட்கின்றார்.
நமது வாழ்வில் பல்வேறு வித செல்வங்களை நாம் சேர்த்து வைக்கலாம். பல்வேறு திறமைகளை நம்மில் வளர்த்துக் கொள்ளலாம்.
ஆனால் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட இத்தகைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் பிறரோடு பகிர்ந்து கொள்வதற்காகவும், பிறரின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களை ஆண்டவரோடு இணைப்பதற்காகவும் என்பதை உணர்வோம்.
"விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. கெட்டுப் போகிறவன் விட்டுக் கொடுப்பதில்லை"
என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டிருப்போம்!
தோண்டத் தோண்ட ஊறும் மணற்கேணி போல நாம் பிறருக்கு நம்மை அதிக அதிகமாக வழங்கும் பொழுது, அது நமது செல்வம் ஆனாலும் சரி, நமது திறமைகள் ஆனாலும் சரி, நமது அன்பான வார்த்தைகள் ஆனாலும் சரி, இறைவன் அவற்றை ஆசிர்வதித்து நமக்கு பலமடங்கு அவற்றை நிறைவாக வழங்குவார் என்பதை உள்ளத்தில் உணர்ந்தவர்களாக,
நமது எண்ணங்களால், நல்ல செயல்பாடுகளால், பிறரின் வாழ்வில் நம்மால் இயன்ற வகையில் ஒளியேற்ற இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்!
இறைவனால் படைக்கப்பட்டு அவரது சாயலை தாங்கியிருக்கும் நாம் அவரைப் போலவே நன்மைகள் செய்து வாழ்வோம்! தம்பி சகாயராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும்! பாராட்டுக்களும்! தங்களின் பணிகள் சிறக்க ஜெபிக்கிறோம்!
பதிலளிநீக்குஉன்மை
பதிலளிநீக்குஇறைவனிடமிருந்து நாம் பெற்ற அனைத்து கொடைகளையும் பிறரிடம் பகிர்வோம் பலமடங்கு கடவுள் நம்மை ஆசிர்வதிப்பார் என்ற கருத்து சிறப்பு......
பதிலளிநீக்கு👍👏
பதிலளிநீக்குஎல்லோரும் ஒன்றாய் இருப்பார்களாக.🙏