ஞாயிறு, 11 அக்டோபர், 2020

எது நம் அடையாளம்...? (12.10.2020)


இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவிடம் பலர்அடையாளம் கேட்கின்றார்கள். அடையாளம் கேட்பவர்களுக்கு ஆண்டவர் இயேசு," உங்களுக்கு அடையாளம் தரப்படாது" எனக் கூறி  எச்சரிக்கின்றார். இன்றைய முதல் வாசகத்தில் கலாத்திய நகர மக்களுக்கு பவுல்,  நாம் அனைவரும் அடிமைப் பெண்ணின் மக்களல்ல. உரிமைப் பெண்ணின் மக்கள் என்று ஆபிரகாம், சாராள், ஆகார் ஆகியோரின் வாழ்விலிருந்து நாம் அனைவரும் உரிமை பெண்ணின் மக்கள் என நம்மை அடையாளப்படுத்துகிறார். 

 ஆனால் இயேசுவோ இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக அடையாளங்களை தேடாதீர்கள். அடையாளங்கள் உங்களுக்கு வழங்கப்படமாட்டாது என கூறுகிறார். இயேசு இவ்வாறு கூறுவதன் நோக்கம் என்ன?  என ஆராயும் போது இயேசு எத்தனையோ அரும் அடையாளங்களையும் அருஞ் செயல்களையும் செய்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு அதை காண வேண்டும்,  அதை கண்டு ,  அவரை சோதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான்  அவரைச் சுற்றி கூடியிருந்தவர்கள் அவரிடம் அடையாளம் ஒன்றை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ உங்களுக்கு அடையாளம் தரப்பட மாட்டாது என கூறுகிறார் .

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் நமது வாழ்வை இந்த அடையாளங்கள் என்ற வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்க அழைக்கப்படுகிறோம். மனிதனாக வாழக் கூடிய ஒவ்வொருவருமே அடையாளத்தை விரும்புகிறோம். குறிப்பாக அடையாளங்கள் என்பது இச்சமூகத்தில் நாம் மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். பதவி, பட்டம் என செல்வாக்காக நாம் இருக்க வேண்டுமென   விரும்புகிறோம்.  இவைகளை நாம் அடையாளங்களாக கருதுகிறோம். 
அடையாளங்களைத் தேடி தான் இன்று இச்சமூகத்தில் பலரும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். பலர் பல இடங்களில் முதன்மை என்ற அடையாளத்தை பெற வேண்டும் என எண்ணுகிறார்கள். ஆனால் இயேசுவோ அடையாளங்கள் என்பது உங்களுக்கு தரப்பட மாட்டாது என்பதை இன்று வெளிப்படையாகக் கூறுகிறார். 
அடையாளங்களை சார்ந்து இருப்பது அல்ல மனித வாழ்வு. நாம் எவ்வாறு இருக்கிறோமோ அதே நிலையில் இருந்து அடுத்தவரை நேசிக்க வேண்டும் என்பதுதான் உண்மையான மனித வாழ்வின் அர்த்தம் ஆகும். இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் பலவிதமான அடையாளங்களை பல நேரங்களில் நாம் கொண்டிருக்கிறோம். உதாரணமாக மொழியின் பெயரில் அடையாளம் வைத்திருக்கிறோம். நான் இந்த மொழி பேசுபவன், நான் திராவிடன், நான் தமிழ் தேசியவாதி, நாங்கள் கருப்பர்கள், நாங்கள் வெள்ளையர்கள் என நிறத்தின் அடிப்படையில் கொள்கைகளின் அடிப்படையில் அடையாளப்படுத்திக் கொண்டு இச்சமூகத்தில் வாழ்பவர்களாக நாம் இருக்கிறோம். அடையாளங்களை நம்பி அடையாளங்களைத் தேடி பல அடையாளங்களுக்கு பின்னால் நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். நாம் நாமாக இருக்க எண்ணுவதில்லை. நாம் அடுத்தவரையும் அவர்கள் இருப்பது போல ஏற்றுக் கொள்ள விரும்புவதில்லை. அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய அடையாளத்தை மையப்படுத்தியே நாம் சார்ந்து இருக்க விரும்புகிறோம். 

இன்று மொழியின் ரீதியாகவும், சாதியின் ரீதியாகவும், இனத்தின் ரீதியாகவும், பொருளாதாரத்தின் அடிப்படையிலும் பலவிதமான அடையாளங்களை நாம் கொண்டிருக்கிறோம். இந்த அடையாளங்கள் எப்போதும் நம்மை அடுத்தவரிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. வேறுபடுத்திக் காட்டுவதன் விளைவாகத்தான், அடையாளங்களை பின்பற்றக்கூடிய நாம், அடையாளத்திற்குள் மறைந்திருக்கக் கூடிய,. 
 "அவனும் மனிதன், நானும் மனிதன்",
  "அவனும் கடவுளின் படைப்பு,  நானும் கடவுளின் படைப்பு" 
அவனைப் போலவே நானும் இருக்கிறேன் என்ற உண்மைகளை உணராது, அடுத்தவனை விட நான் உயர்ந்தவன் என்ற போட்டி பொறாமையின் காரணமாக அடையாளங்களை நாடி சென்று கொண்டிருக்கிறோம்.

 இன்றைய நாளில் நாமும் நமது வாழ்க்கையில் எத்தகைய அடையாளங்களை நாடிக்கொண்டு இருக்கிறோம்?
 எத்தகைய அடையாளங்களால் நம்மையே நாம் உயர்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டிருக்கிறோம் என சிந்திப்போம். நாம் நம்முடைய அடையாளங்களை தூக்கி எறிந்து வாழவும்,  நாம் இருப்பதை இருப்பது போல ஏற்றுக்கொள்ள இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக இயேசு நம்மை அழைக்கிறார்.  

இயேசுவை சோதிக்கும் நோக்குடன் அவரிடம் அடையாளம் கேட்டவர்கள் எல்லாம் அடையாளம் தெரியாமல் போனார்கள். ஆனால் உங்களுக்கு அடையாளமே இல்லை என்றவர் இன்று மிகப்பெரிய அடையாளமாக மாறி இருக்கிறார்.  அவரை பின்பற்றி செல்லக்கூடிய நாம் அனைவரும் அவரைப் போல அவர் அடையாளங்களை நாடாமல் இருப்பது போல, அடுத்தவரை நேசிக்கவும் ஏற்றுக் கொள்ளவும், அடையாளங்களை நாடாமல்,  அன்பின் அடிப்படையில் அனைவரையும் அரவணைக்க,  இயேசுவின் வழியில் பயணப்படுவோம்.

1 கருத்து:

  1. உங்களுக்கு அடையாளம் தரப்படாது என்று கூறியவர் இன்று மிகப்பெரிய அடையாளமாகத் திகழ்கிறார் என்ற கருத்து மிக மிக அருமை! தனது உண்மையான வாழ்வால் மிகப் பெரிய அடையாளமாக இன்று திகழ்கின்ற இயேசு ஆண்டவரைப் போல நாமும் நமது வாழ்வில் நமது நற்பண்புகளால் இயேசுவின் சாயலாக அவரின் அடையாளமாக திகழுவோம்! அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...