உளி விழும் என்று அழும் கற்கள் சிலை ஆவதில்லை!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் வாழ்வின் ஆழமான அர்த்தங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் தனது இன்ப துன்பங்களை போலவே மாற்ற மனிதருக்கும் இன்ப துன்பங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக, அடிமை நிலையில் உள்ளோர், கடன்பட்டு இருப்போர், ஆகியோரின் துன்ப நிலையினை அவர்களின் உடல் உள்ள கஷ்டங்களை, போராட்டங்களை, புரிந்துகொள்ளவும் அவர்களும் இவ்வுலகில் வாழ தகுதியுடன் பிறந்த மனிதர்களே என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ளவும் மனிதர்களை மனிதர்களாக மதிக்கவும் இன்றைய முதல் வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
அன்று மனிதனைப் படைத்த கடவுள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்ற கடவுள், இந்த உலகில் மனிதர்கள் அனைவரும் மேன்மையான வாழ்வு வாழ வேண்டும் என்று விரும்பினார். ஆனால் இன்று இவ்வுலகில் அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றும் பணக்காரர் ஏழை என்றும் ஆண் பெண் வேறுபாட்டு அடிப்படையிலும் ஜாதிய பாகுபாடுகளும் மனிதர்கள் மனிதர்களாலே கொடுமைக்கு உள்ளாகும் நிலை இன்றும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கு நாம் எந்த வகையில் பொறுப்பேற்கிறோம்? நம் அருகில் வாழக்கூடிய மனிதர்களிடத்தில் எவ்வாறு சமத்துவம் பேணுகிறோம் எவ்வாறு நீதியை நிலைநாட்டுகிறோம்? இன்று நமது உள்ளத்தினை ஆழ்ந்து சிந்திப்போம்.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் அந்த மக்களிடம் இறை வார்த்தை மீது இருந்த அளவற்ற ஆர்வத்தை எடுத்துரைக்கிறார். துன்பங்களும் துயரங்களும் அவர்களை வாட்டிய பொழுது இறைவார்த்தையின் வழியாக அவர்கள் ஊக்கம் அடைந்ததையும், உள்ளத்தின் ஆழத்தில் தூய ஆவியின் வழியாக பெற்றுக்கொண்ட மகிழ்வையும் புனித பவுலடியார் எடுத்துக் கூறுகிறார்.
ஆண்டவரைப் போல நடக்கின்ற மக்கள் என்று இந்த தெசலோனிக்க மக்களை புனித பவுல் பெருமையுடன் கூறுகின்றார். மணமகனுக்கு தலைசாய்க்க இடமில்லை என்று கூறிய இயேசு ஆண்டவரின் வாக்கிற்கு இணங்க, அவரைப்போல பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது உடல் மன இயல்புகளை
துன்பங்களை பொருட்படுத்தாமல் ஆண்டவரைப் போல வாழ்ந்திட தன்னையே அர்ப்பணித்த தெசலோனிக்கர் மக்கள், தாங்கள் சந்தித்த துன்பங்களில் மத்தியிலும் இயேசு ஆண்டவருக்காக உறுதியான உள்ளத்தோடு வாழ்ந்ததைப் போல நாமும் நம்முடைய சுயநலமிக்க போக்கினை களைந்து ஆண்டவர் இயேசுவுக்காக உழைக்க உள்ளத்தில் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கும் தூய ஆவி என்னும் அருட்பெரும் ஜோதியை உள்ளத்தில் அணையாது பாதுகாத்துக் கொள்வோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் உலகை மீட்க இவ்வுலகிற்கு வந்த இயேசுவை சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட நூலில் சிறந்த கட்டளை எது? என்று பரிசேயர் அவரிடம் கேட்கின்றனர்.
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனதோடும், உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு செலுத்துவாயாக என்று கூறுவதன் வழியாக இயேசு ஆண்டவர் முழுமுதல் தலைவனாகிய நம் கடவுளை முதலில் வைக்கவும் நமது வாழ்வில் இறைவனுக்கு முதலிடம் கொடுக்கவும் அழைப்பு விடுக்கின்றார். நம்மையே நாம் முழுமையாக இறைவனுக்கு கொடுக்கின்ற பொழுது நாம் இறைவனுக்குள் இணைந்து விடுகின்றோம். அவராகவே மாறிவிடுகின்றோம். எனவே நம்மை நாம் இறைவனிடத்தில் முழுமையாக நம்மை அர்ப்பணிக்கும் பொழுது இறைவன் நம்மை ஆசீர்வதிக்கின்றார்.
உளி விழும் என்று அழும் கற்கள் சிலை ஆவதில்லை.
உடைக்க படுவோம் என்று அழும் விதைகள் மரமாவது இல்லை.
மண்ணுக்குள் மறைந்து இருக்கிறோம் என்று கவலைப்படும் வேர்கள் மரத்தை தாங்குவதில்லை.
என்பதை உணர்ந்தவர்களாக இன்றைய நாளில் நான் சந்திக்கக்கூடிய அனைத்துவித இடர்பாடுகளின் மத்தியிலும் ஆண்டவரின் அன்பு மகனாக, அன்பு மகளாக வாழ்ந்திட உள்ளத்தில் உறுதி கொள்வோம்!
Nice bro.. 🙏
பதிலளிநீக்குஅருமையான விளக்கம் மகிழ்ச்சி அடைகிறேன்
பதிலளிநீக்கு