வியாழன், 29 அக்டோபர், 2020

இதயத்தில் இடம் பெறுவோம்! (30.10.2020)

இதயத்தில் இடம் பெறுவோம்!

 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் உங்கள் அனைவருடனும் இன்றைய வாசகங்களின்  அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் திமொத்தேயுவுக்கு பவுல் எழுதிய கடிதத்தில், கிறிஸ்துவிடம் அங்குள்ள மக்களுக்காக ஜெபிப்பதாக கூறுகிறார். அங்குள்ள மக்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இறைவனிடம் ஜெபிக்க வேண்டும் எனவும் கூறுகிறார். உங்களிடம் காணப்படக்கூடிய நற்செயல்களை எல்லாம் தொடங்கியவர் இயேசு கிறிஸ்து. அதை அவரே உங்களிடமிருந்து நிறைவுறச் செய்வார் என வாழ்த்துச் செய்தியாக கூறி அவர்களுக்கு கடிதம் வழியாக இயேசுவின் இறையாட்சி கருத்துக்களை எடுத்துரைக்கிறார்.

 இன்றைய நற்செய்தி வாசகத்தில் நீர்க்கோவை நோயுற்ற ஒருவரை இயேசு குணமாக்குகிறார். ஆனால் இயேசுவின் செயலை குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர் செய்வது தவறான செயல், ஓய்வு நாளின் போது அவர் சட்டத்தை மீறிவிட்டார் என கூறி, அவர்கள் இயேசுவின் மீது குற்றம் சாட்டுகிறார்கள். ஓய்வு நாள் என்பது யூதர்கள் பின்பற்றிய சட்டங்களுள் மிகவும் முக்கியமானது. கடவுள் உலகைப் படைத்து ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஏழாம் நாளில் யாரும் எந்த வேலையும் செய்யக்கூடாது என்பதில் அவர்கள் கொண்டிருந்த சட்டம். அந்த ஏழாம் நாளான ஓய்வு நாளில் இறைவன் மட்டுமே செயலாற்றுவார் என்பது அவர்களின் எண்ணம். அந்த நாளில் இயேசு ஒரு நோயாளியை குணமாக்கியதை அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இவன் சட்டத்தை மீறுகின்றான் என்று அவர் மீது குற்றம் சுமத்தினார்கள். ஆனால் இயேசுவோ ஓய்வு நாளின் போது உங்கள் குழந்தைகள் கிணற்றில் விழுந்து விட்டாலோ அல்லது உங்களுக்கு உரிமையான ஒன்றைத் தவற விட்டு விட்டாலோ அதை நீங்கள் எடுக்க மாட்டீர்களா? என வாழ்க்கையிலிருந்து இயல்பாக கேள்வியை எழுப்பி அதனால் அவர்களுக்கு பாடம் கற்பிக்க முயலுகிறார். நோயாளி எப்போது நோயிலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையோடு காத்துக்கொண்டு இருக்கக் கூடியவர். அப்படி காத்துக் கொண்டிருந்தவனுடைய காத்திருப்பை அறிந்தவராக இயேசு கிறிஸ்து அவனுடைய நோயை குணமாக்குகிறார். எப்படி பவுல் திமொத்தேயுவில் வாழ்ந்த மக்கள் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக இணைந்து ஜெபித்து கிறிஸ்துவின் மதிப்பீடுகளின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்களோ, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு பவுல் எப்படி கடிதங்கள் வாயிலாகவும்  அவர்களோடு உரையாடினாரோ, அதுபோல நாமும் ஒருவர் மற்றவரின் துன்பத்தையும் அடுத்தவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டவர்களாக அடுத்தவர்களை மதிக்கவும் அடுத்தவர்களுக்கு உதவி செய்யவும் நம்மாலான சிறு சிறு செயல்கள் மூலம் நற்செயல்கள் செய்து வாழ்ந்திட இன்றைய நாளில் வாசகங்கள் வழியாக அழைக்கப்படுகிறோம். நற்செயல் செய்வது எளிது. ஆனால் நல்ல செயலைச் செய்யும்போது பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். பலரும் பல விதங்களில் நம்மீது குற்றம் காட்டுவார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு மனம் கலங்கி விடாமல், தடுமாறாமல், பின்வாங்காமல், இயேசுவை துணையாக கொண்டவர்களாக தைரியத்தோடு முன்னோக்கிச் செல்ல வேண்டும். நல்ல செயல்கள் செய்வதால் இந்த உலகத்தில்  நாம் பலவிதமான துன்பங்களை சந்திக்க நேர்ந்தாலும் துணிவோடு பயணித்து நல்ல செயல்கள் செய்து, அடுத்தவரின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவர்களாகவும், அவர்களுடைய உணர்வுகளையும் அவர்களுடைய தேவைகளையும் அறிந்தவர்களாக நாம் செயல்பட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம். அவ்வாறு இறையருளை வேண்டுவதோடு மட்டுமல்லாமல் நமது சின்னஞ்சிறு செயல்களில் இன்றைய நற்செய்தி வாசகம் தரக்கூடிய மைய கருத்தான அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைச் செயலாக்குவோம். அவ்வாறு செயலாக்குவதால் நாமும் ஆண்டவரின் இதயத்தில் இடம் பெறுவோம். நீங்களும் நானும் ஆண்டவரின் இதயத்தில் இடம் பெற,  இன்றைய நாளில் இணைந்து  செயல்பட்டு நமது வாழ்வை மாற்றிட தொடர்ந்து முயலுவோம். இயேசுவின் பாதையில்,  இதயத்தில் இடம் பெற்றிட.

2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...