கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மனித வாழ்க்கையில் நாம் எதை தேடிக் கொண்டிருக்கிறோம்?என்பதை எசாயா இறைவாக்கினரின் செய்திகள் வழியாக இன்றைய முதல் வாசகத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.
அதுபோலவே திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்திலிருந்து நாம் எதை தேட வேண்டும்? என்பதை அறிந்து கொள்ளலாம்.
இறைவன் இந்த உலகத்தில் நட்டு வைத்த திராட்சை தோட்டங்கள் நாம் அனைவரும். நல்லதை நாடவும், தேடவும், நல்லதை சமூகத்திற்கு தரவும் இறைவன் நம்மை இங்கு நட்டு வைத்துள்ளார். ஆனால் நாம் இன்று இந்த உலகத்தில் எதை தேடுகிறோம்? எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்? என்பதை உணர்ந்து பார்க்க எசாயா இறைவாக்கினர் நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
பரபரப்பான இந்த உலகத்தில் நாம் பதவி, பணம், பட்டம் போன்றவற்றின் பின்னால் அலைந்து கொண்டிருக்கிறோம். இவையே நிரந்தரம் என எண்ணி இவற்றின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் இவ்வாறு நாம் சென்று கொண்டிருத்தல் ஏற்புடைமை ஆகாது என்பதை இன்றைய முதல் வாசகம் தோட்டத்தில் நட்டு வைத்த திராட்சை செடியானது நல்ல கனிகளைத் தரும் என்ற எண்ணத்தோடு அதனை நாடித் தேடும் போது அது நற்கனிகளைத் தராமல் இருந்தால் அந்தச் செடியானது பிடுங்கி எறியப் படும். இந்த உலகத்தில் நடப்பட்ட நாம், இயேசு விரும்பக்கூடியவற்றை விரும்பவும். இச்சமூகத்தில் விதைத்திடவும், முன்வர வேண்டும். இல்லையேல் நாமும் பிடுங்கி எறிய படக்கூடிய திராட்சை செடிகளாக மாற நேரிடும்.
இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாக புனித பவுல் நாம் தேட வேண்டியவை எவை என்பதை சுட்டிக் காட்டுகிறார். கண்ணியமானது எதுவோ,
நேர்மையானது எதுவோ,
தூய்மையானது எதுவோ,
விரும்பத்தக்கவை எதுவோ,
பாராட்டுக்குரியவை எவையோ,
நற்பண்புடையவை எவையோ,
போற்றுதற்குரியவை எதையோ,
அவற்றையே நாம் நாடி தேட வேண்டும். நாம் உயிர் வாழக்கூடிய இந்த உலகத்தில் எதை பற்றியும் கவலை கொள்ளாமல் இருக்க, அதாவது எதிர்காலம் குறித்து கவலைப்படாதிருக்க வாசகங்கள் அழைக்கின்றன.
திருவிவிலியத்தில் வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை. ஆனால் அவைகளுக்கு தேவையான உணவை இறைவன் தருகிறார் (மத்தேயு 6 : 26) என நாம் வாசிக்க கேட்டிருப்போம்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நாம் எதிர்காலச் சிந்தனைகளை மனதில் கொண்டு, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பலவிதமான தேவையற்றவைகளை, தேவையானது என எண்ணி தேடிக்கொண்டிருக்கிறோம். இவைகளெல்லாம் எப்போதும் நமக்கு நிறைவைத் தராது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு அழகான உவமை ஒன்றை கூறுகிறார். நிலக்கிழார் ஒருவர் குத்தகைக்கு நிலத்தை விடுகிறார்.அந்த குத்தகைக்கு உரிய கூலியை வாங்கிவர தன் பணியாளர்களை அனுப்புகிறார். அவர் அனுப்பிய பணியாளர்கள் கொல்லப்படுகிறார்கள். மீண்டும் கூடுதலான பணியாளர்களை அனுப்பி தனக்கு வரவேண்டிய வருவாயை கேட்கின்றார். அவர்களையும் கொன்றுவிடுகிறார்கள். இறுதியாக தன் மகனை அனுப்புகிறார். இவனே சொத்துக்கு உரியவன் என்று அவனையும் கொன்று விடுகிறார்கள். இந்த உலகத்தில் நாமும் அவ்வாறு தான். நிலக்கிழாராகிய இறைவன் நம்மை இந்த உலகத்தில் குத்தகைக்கு விடுவது போல, இந்த உலகில் இருந்து மற்றவருக்கு தொண்டாற்றி விளைச்சலை அதிகப்படுத்தி மனித மனங்களை காப்பதற்கு நம்மை இவ்வுலகில் அனுப்பினார். ஆனால் நாமோ அருகாமையில் இருப்பவரின் தேவையை புரிந்து கொள்ளாமல், அடுத்தவர்களின் குறைகளை பெரிதுபடுத்தி, இன்பத்தோடு அவர்கள் வாழ்வதற்கு வழி செய்யாமல் அவர்களிடம் இருப்பதையும் பறித்துக் கொண்டு நாம் வலிமையுள்ளவர்களாக வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபடுகிறோம்.
நாம்மில் பலர் பார்த்திருப்போம், காலா என்ற ஒரு திரைப்படம். அதில் வில்லனாக சித்தரிக்கப்படக்கூடிய நபர் கூறுவார், இந்த உலகத்தில் எதையும் நான் எடுத்துக் கொண்டு செல்லப் போவதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஒரு நாளாக இருந்தாலும் அந்த நிலம் என்னுடையதாக இருக்க வேண்டும் என்று கூறுவார்.
இன்று இந்த மோகத்தின் அடிப்படையில்தான் பலர் பல நேரங்களில் அடுத்தவரிடம் இருப்பதை கூட அபகரித்துக் கொள்ள எண்ணுகிறோம். அடுத்தவர் நிலத்தை அபகரித்துக் கொள்ள எண்ணுகிறோம்.
விவிலியத்தில் கூட (1 அரசர்கள் 21: 1-29) நாம் வாசிக்க கேட்கலாம்,ஆகாபு அரசன் தன்னுடைய அரண்மனைக்கு அருகாமையில் இருக்கக் கூடிய நாபோத்தின் தோட்டத்தை தன்னுடையது ஆக்கிக்கொள்ள வேண்டும் என எண்ணுகிறான். ஆனால் நிலத்தின் உரிமையாளன் நாபோத்து அதை தர மறுக்கிறான். எனவே மன வருத்தத்தோடு அமர்கிறான் அரசன். அப்போது ஈசபேல் அரசி சூழ்ச்சி செய்து அந்த நிலத்தின் உரிமையாளரை
கொன்று இந்த நிலத்தை எடுத்து அரசனிடத்தில் வைத்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கொடுக்கின்றார்.
இதேபோன்ற ஒரு நிகழ்வை (2 சாமுவேல் 12:1-14) இல் நாமான் இறைவாக்கினர் தாவீது அரசனுக்கு கூறுகிறார். நிலக்கிழார் ஒருவரிடம் பலவிதமான சொத்துக்களும் மந்தைகளும் இருந்தன. ஆனால் அடுத்தவரின் ஆட்டுக்குட்டியை அபகரித்துக் தனது விருந்தாளிக்கு விருந்து படைத்தான் என்று கூறிய போது, தாவீது, யார் இப்படி செய்தது? அவனை நான் கொன்றே தீருவேன் என்று கூறுகிறார். ஆனால் அதை செய்தது நீ தான். அரசனாகிய உனக்கு எல்லாம் இருந்தும் அடுத்தவன் மனைவி மீது மோகம் கொண்டாய், என்று அவனது தவறைச் சுட்டிக் காட்டினார். இன்று இந்த உலகத்திலும் இறைவார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நமக்குச் சுட்டிக் காட்டுவது இதுதான். நாம் தேவையானது, நமக்கு உரியது என எண்ணி.... இதுவே நிலையானது, நிரந்தரமானது என எண்ணி, தேடிக்கொண்டிருக்கும் கூடியது எல்லாம் நிலையானது அல்ல. நாம் தேட வேண்டியது எவை என்பதை பவுலடியார் சுட்டிக்காட்டுவது போல நன்மையானதையும், அடுத்தவருக்கு பயன் உள்ளதையும், பாராட்டுதலுக்குரியதையும், அதாவது அடுத்தவரின் துயரத்தை துடைக்க கூடியதையும், அடுத்தவரையும் சகோதரனாக அரவணைத்துக் கொள்ளக் கூடிய அந்த அன்பையும், அடுத்தவருக்காக தன் உயிரையே கொடுக்க முன்வந்த, நமக்காக தன் இன்னுயிரை கொடுத்த இயேசுவைப்போல் அடுத்தவருக்காக நம்மையே இழக்கத் தயாராக இருக்கக் கூடிய, அந்த மனப்பான்மையையும் தான் நாம் தேட வேண்டியதாகும். அதை நாம் தேடி இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்ய வேண்டும். இதை மறுக்கும் போது கண்டிப்பாக நிலத்தின் உரிமையாளராகிய நிலக்கிழார் அந்த பணியாளர்கள் தனக்கு தரவேண்டிய கூலியை தராது தான் அனுப்பியவர்களை எல்லாம் கொன்று போட்டவர்களை இறுதி நாளில் இரக்கம் காட்டாமல் கொன்று போடுவது போல, நாமும் இறுதி நாட்களில் இறைவனது இரக்கத்தைப் பெற முடியாதவர்களாகப் போக நேரிடும். இறைவனது இரக்கத்தைப் பெற இந்த மண்ணில் இருக்கும் வரை இரக்கத்தோடு இரக்கச் செயல்கள் செய்து அடுத்தவரை அரவணைத்து அடுத்தவரின் துயர் துடைத்து அனைவரையும் நம்முடையவர்கள் என எண்ணி இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ இன்றைய நாளில் இறைவார்த்தை வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து நம்மை அழைக்கிறார்.
அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவிகொடுத்தவர்களாய் இறையாட்சியின் மதிப்பீடுகளை நாடித்தேடக்கூடியவர்களாய் நாம் இயேசுவின் பாதையில் தொடர்ந்து பயணித்து இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்வோம்.
Superb bro.. great.. 👌👍
பதிலளிநீக்குCongrats Thambi God bless you continue to write
பதிலளிநீக்குAmma 💐💐