விழித்திரு!
நம்பிக்கையில் நிலைத்திரு! இறைவனில் இணைந்திரு!
என்று விழிப்புணர்வின் நிலைகளுக்கு நம்மை அழைக்கிறது இன்றைய வாசகங்கள்.
ஒரு காலத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் நம்பிக்கை அற்றவர்களாகவும் வாழ்ந்திருந்த நீங்கள் இன்று அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கிறீர்கள். அவரில் இணைந்து இருக்கிறீர்கள் என்று கிறிஸ்து நம்மை தம்பால் ஈர்த்துக் கொண்டதை புனித பவுலடியார் கூறுகிறார்.
விழிகளின் மையமாக பார்வை இருப்பது போல வாழ்வின் மையமாக கிறிஸ்து இருக்கின்றார். அவரே கட்டடத்தின் மூலைக்கல்லாகவும் அமைத்திருக்கின்றார். அவரது அடித்தளத்தின் மேல் கட்டப்படும் கட்டிடமாக நாம் உருவாகின்றோம். கடவுளின் குடும்பத்தில் உறுப்பினர்கள் ஆகின்றோம், என்னும் மேன்மையான வாழ்வை இறைவன் நமக்கு அறிவிக்கின்றார். கிறிஸ்துவோடு நாம் கொள்ளும் குடும்ப உறவின் மூலமாக இறைவன் குடிகொள்ளும் கோவிலாக நாம் வளர்ச்சி பெறுகிறோம் என்ற உன்னத நிலைக்கு புனித பவுலடியார் நம்மை அழைக்கின்றார்.
இத்தகைய மேன்மையான உன்னதமான நிலைக்கு நம்மை உயர்த்தி இருக்கின்ற இறைவனின் அருளோடு நம்மை இணைத்துக் கொள்ள நமக்கு விழிப்புணர்வு தேவை என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு குறிப்பிடுகிறார். இறைவனின் உறவில் நாம் இணைந்திட, அவர் நமக்கென பரிமாற இருக்கும் அவரது அருள் விருந்தினை சுவைக்க நம்மை தகுதிப் படுத்திக் கொள்ளும் பாத்திரமே நமது விழிப்புணர்வு நிலை என்பதை உணர்ந்தவர்களாக நமது உடலாலும் உள்ளத்தாலும் இறை உறவில் வளர்ந்திட ஆவல் கொள்வோம். இருகரம் நீட்டி நம்மை அழைக்கும் இறைவனின் கரங்களோடு இணைந்திடுவோம்.
Short & Sweet..
பதிலளிநீக்குNice bro.. 👍