இன்று நமது தாய் திருஅவையானது ஜெபமாலை அன்னையின் திருநாளை நினைவு கூறுகிறது. இன்றைய நாளில் திருஅவை நமக்கு கொடுத்திருக்கக் கூடிய நற்செய்தி வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாளில் முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் அனைவரும் இணைந்து அன்னை மரியாளோடு மாடி அறையில் தங்கி செபித்தார்கள் என நாம் அனைவரும் வாசிக்கின்றோம் .
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட வானதூதர் இயேசுவின் பிறப்பை மரியாவுக்கு முன்னறிவித்த நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். பொதுவாகவே அன்னை மரியாவை குறித்து திருஅவையில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ளாத பலர் இந்த உலகில் உண்டு. இயேசுவை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அனைவரும் அன்னை மரியாளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது அல்ல, பலர் அன்னை மரியாவை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆனால், அவ்வாறு அன்னை மரியாவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம் அன்னை மரியாள் என்றாலே பல விதமான கருத்து வேறுபாடுகளை கூறுவார்கள் குறிப்பாக பிரிந்து சபையினைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் அன்னை மரியாவிடம் நாம் செபிக்க வேண்டியதில்லை என்று கூறுவார்கள். ஆனால் தொடக்கத்தில் இயேசுவின் சீடர்கள் அன்னைமரியாவோடு அமர்ந்து ஜெபித்தார்கள் என்பதற்கு விவிலியத்தில் பல விதமான தரவுகளும், ஆதாரங்களும் இடம் பெற்றுள்ளன. இயேசுவின் இறப்புக்குப் பிறகு அன்னை மரியாவை இயேசுவின் சீடர்களில் ஒருவரான யோவான் என்பவர் தம்மோடு வைத்து பேணி காத்தார். அதுவும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளின் அடிப்படையில் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. அன்னை மரியாவை பற்றி பெரும்பாலும் விமர்சன கருத்துக்களை கூறக் கூடியவர்கள் அன்னை மரியாவை நாம் கடவுளாக பார்ப்பதாக கூறுவார்கள். அன்னை மரியாவை நாம் கடவுளாக காண்பதில்லை. இயேசுவை அடைவதற்கான ஒரு வழியாக பார்க்கிறோம். நேரடியாக இயேசுவை அணுகமுடியும். எதற்காக இடையில் அன்னை மரியா என்ற கேள்வியை பல நேரங்களில் அவர்கள் எழுப்பலாம். ஆனால்
உண்மையில் அன்னை மரியாள் என்பவர் இயேசுவை நாம் அடைவதற்கு மிகவும் பயனுள்ள ஒரு கருவியாக இருக்கின்றார். ஏனெனில் பலவிதமான தவறுகளுக்கு மத்தியிலும் பலவிதமான அநீதிகளுக்கு மத்தியிலும் வாழக்கூடிய நாம் பல நேரங்களில் நம்மை அறியாமல் பல விதமான தவறுகளில் ஈடுபடுகிறோம். தவறிய உள்ளத்தோடு ஆண்டவர் இயேசுவை நோக்கி செல்ல அஞ்சக்கூடிய உள்ளங்களுக்கு அன்னை மரியாள் ஒரு இணைப்பு கருவியாக உள்ளார் என்பது மறுக்கவியலாத உண்மை. பெரும்பாலும் அன்னை மரியாவை நோக்கி நாம் ஜெபிப்பதை தவறு என கூறக் கூடியவர்கள் விவிலிய வார்த்தைகளால் மக்கள் மனங்களைக் கவர எண்ணுகிறார்கள். நாம் அன்னை மரியாவை நோக்கி ஜெபிக்க கூடிய ஒவ்வொரு வார்த்தையுமே விவிலிய வார்த்தைகள் தான் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் வழியாக நாம் அறியலாம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற வார்த்தை இறைவன் அனுப்பிய வானதூதர் மரியாவுக்குத் சொல்லப்பட்ட வார்த்தையாகும்.
ஆண்டவர் உம்முடனே!
பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே!
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே!
என்ற வார்த்தைகள் எலிசபெத்தம்மாள் அன்னை மரியாவை பார்த்து கூறிய வார்த்தைகள். இவ்வார்த்தைகள் இடம்பெற்றிருப்பதும் விவிலியத்தில் தான். விவிலிய வார்த்தைகளை தேவைக்கு ஏற்றார்போல், இடத்திற்கு ஏற்றார்போல் பயன்படுத்தி கொண்டிருக்கக் கூடிய பல பிரிவினை சகோதரர்களுக்கு மத்தியில் இறைவனது வார்த்தைகளை அனுதினமும் சொல்லி ஜெபிக்க கூடியவர்களாக நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை சிந்தித்து பார்க்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
அருள் நிறைந்த மரியே வாழ்க என்ற செபத்தின் மீதம் உள்ள வார்த்தைகளை எண்ணி பார்க்கும் பொழுது புனித மரியே!
இறைவனின் தாயே!
பாவிகளாக இருக்கிற எங்களுக்காக
இப்பொழுதும், எப்பொழுதும்
எங்கள் இறப்பின் வேளையிலும் வேண்டிக்கொள்ளும்
என்றுதான் நாம் அன்னை மரியாவை நோக்கி ஜெபிக்கிறோம். நமக்காக இறைவனிடத்தில் அன்னை மரியாவை வேண்ட அழைக்கிறோம்.
நமது குடும்பத்தில் யாருக்குகேனும் ஏதேனும் ஒரு தேவை என்றால் அவர்களுக்காக நாம் இறைவனிடத்தில் வேண்டுகிறோம். அது போல நம் ஒவ்வொருவருக்காகவும் இறைவனிடத்தில் வேண்டுவதற்கு அன்னை மரியாவை நாம் அழைக்கிறோம்.
இன்றைய நாள் நற்செய்தி வாசகங்களும் சரி, முதல் வாசகம் சரி, இன்றைய நாளில் நாம் நினைவு கூறக் கூடிய புனித ஜெபமாலை அன்னையின் திருநாளும் நமக்கு கற்றுத் தரக்கூடிய பாடம் இணைந்து ஜெபியுங்கள் என்பதாகும்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இணைந்து ஜெபிக்கும் பழக்கம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்ப்போம். இன்று நம்மிடையே பல குடும்பங்களில் இன்றும் குடும்ப ஜெபம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நமது குடும்பத்தில் நடக்கிறதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப கடமைப்பட்டுள்ளோம். அன்னைமரியா திருத்தூதர்களும் இணைந்து ஜெபித்தது போல நாமும் நமது குடும்ப உறுப்பினர்களும் இணைந்து செபிக்கின்றோமா?
செபிக்கக முயற்சி எடுக்க இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இணைந்து ஜெபிக்கும்போது இறைவன் அங்கே இருக்கின்றார். எங்கே இருவர் மூவர் கூடி செபிக்கிறீர்களோ அங்கே நான் இருக்கிறேன் , என்று கூறிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நமது இல்லத்திற்கு அழைத்து வரக் கூடிய பொறுப்பும் பணியும் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. இணைந்து இறைவனோடு ஜெபிப்போம். ஜெப மாலையை கையில் ஏந்துவோம். நமக்காக எப்போதும் செபிக்க அன்னை மரியாவின் துணையை நாடுவோம். நாமும் ஒருவர் மற்றவருக்காக ஜெபிப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக