சனி, 17 அக்டோபர், 2020

எது இறைவனுக்கு உரியது? (18.10.2020)

சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்துங்கள்.

 அன்புக்குரியவர்களே இன்றைய நாளில் வாசகங்களின் அடிப்படையில் நாம் அனைவரும் கடவுளுக்கு உரியது எது என்பதை பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் வழியாக கடவுள் தாம் மெய்யான கடவுள் என்பதை இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துரைக்கிறார் இன்றைய முதல் வாசகத்தில் அடிப்படையில் விவிலியத்தை புரட்டிப் பார்க்கும் பொழுது நெடுங்காலமாக பழைய ஏற்பாடு முழுவதும் கடவுள் தாம் மெய்யான இறைவன் என்பதை இஸ்ரயேல் மக்களுக்கு பல இறைவாக்கினர்கள் வழியாகவும் பலவிதமான நிகழ்வுகளின் வழியாகவும் தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார். 

கற்பிப்பதில் பல வகைகள் உண்டு ஒன்று தாமே முன்னின்று கற்பிப்பது. மற்றொன்று அடுத்தவர் வழியாக கற்பிப்பது. மற்றொன்று அவர்கள் தாங்களாகவே கற்றுக்கொள்ளவேண்டும் என அதற்கு ஏற்ற சூழ்நிலைகளை உருவாக்குவது.    தாங்களாகவே பட்டு திருந்துவார்கள் எனக் கூறுவது போல சில நேரங்களில் தாங்களாகவே துன்பங்களின் வழியாக துன்பங்களுக்கு மத்தியில் தங்கள் கற்க வேண்டிய பாடத்தை கற்றுக் கொள்ளட்டும் என விட்டு விடுவது என பலவகையான முறைகளில் கற்பிக்கலாம். கடவுளும் தான் மெய்யான இறைவன் என்பதை இஸ்ரயேல் மக்களுக்கு இவ்வாறு பல வழிகளில் கற்பித்துக் கொண்டே இருந்தார். இறுதியாக கற்பித்தலின் உச்சத்தில் தாமே தன்னுடைய மக்களுக்காக இறங்கி வந்து மக்களோடு மக்களாக இருந்து வாழ்ந்து ஒரு மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதை தன்னுடைய வாழ்வில் கற்பித்து இறைவனான கடவுள்  இறை மனிதனாக அவதரித்து மக்களுக்காக மக்களின் சூழ்ச்சிக்கு தன்மையை கையளித்து தன் இன்னுயிரை துறந்து வாழ்க்கை பாடத்தை கற்பித்தார். இதனை வரலாற்றிலிருந்து நாம் உணர்ந்துகொள்ள இயலும்.


மக்களுக்காக இறை மனிதனாக இம்மண்ணில் இயேசு வலம் வந்தபோது அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வை தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்கிறோம். இயேசுவிடம் வந்த சிலர் அவரை எப்படியாவது குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அவர்களின் உள்ளார்ந்த எண்ணத்தை உணர்ந்தவராக இயேசு அவர்களிடம் விவேகத்தோடு சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என பதில் கூறுகிறார்.

சீசருக்கு உரியது எது?  என்ற கேள்வியை நாம் இன்று நம்முள்  எழுப்பி பார்ப்போமாயின் சட்டங்களை கடைப்பிடிப்பதை சீசருக்கு உரியதாக நாம் என்று பொருள் கொள்ளலாம்.

ஆனால் இன்றைய நாளில் நாம் அனைவரும் நம் உள்ளத்திலே கடவுளுக்கு உரியது எது? என்ற கேள்வியை எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.

இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது தொழு நோயாளர்கள் என சமூகத்தால் ஓரம் கட்டப்பட்ட மக்களை தேடிச் சென்றார்.  

இவன் அதிகமாக வரி வசூலிக்க கூடிய பாவி. இவனோடு நாம் யாரும் சமரசம் செய்து கொள்ளவே கூடாது. இவனது வீடுகளுக்கு நாம் செல்லக் கூடாது, அப்படி நாம் சென்றால் நாமும் பாவிகளாக மாறுவோம். எனவே இவன் பாவி இவனோடு நாம் உறவு வைத்துக் கொள்ளவே கூடாது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட சக்கேயுவை தேடிச் சென்றவர் இயேசு.

 ஓய்வுநாளில் எனவே நாம் யாரும் எந்த வேலையும் செய்யக் கூடாது. அது அடுத்தவருக்கு நலன் தர கூடிய செயலாக இருந்தாலும் அதை நீங்கள் செய்யக் கூடாது என சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்தி கொண்டிருந்த யூதர்களை சட்டம் முதன்மை அல்ல மனிதமே முதன்மையானது என்ற கண்ணோட்டத்தில் சட்டத்தின் பெயரால் மக்களை அடிமைப்படுத்த நினைக்கும் யூதர்களுக்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டே இருந்தவர் இந்த இயேசு.

கடுமையான நோய் தங்களின் நோய் குணமாகாது என்ற எண்ணத்தோடு வாழ்ந்த மக்களை தேடிச்சென்று அவர்களின்  நோய்களை குணமாக்கி நம்பிக்கையின் வடிவமாக திகழ்ந்தவர் இந்த இயேசு.

உண்மையை அறிவிப்பதே என் பணி எனக் கூறி தன் வாழ்நாள் முழுவதும் உண்மையை எடுத்துரைத்து வாழ்ந்தவர் இந்த இயேசு.

 
 படித்தவர்கள் மட்டுமே முதன்மையானவர்களாக கருதப்பட்ட காலத்தில் தன்னுடைய பணிக்கு ஏழைகள் செல்வாக்கற்றவர்கள் மீனவர்கள் என பாமர மக்களை தன் சீடர்களாக அழைத்துக்கொண்டு சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இந்த இயேசு.

உன்னை நீ அன்பு செய்வது போல அடுத்தவனையும் அன்பு செய். பகைவனையும் அன்பு செய் என வாழ்க்கை பாடத்தை கற்பித்தவர் இந்த இயேசு.

இயேசு இந்த  மண்ணில் வாழ்ந்த போது தான் கற்பித்த அனைத்தையும் வெறும் வாய் வார்த்தைகளாக மட்டும் கொண்டிராது தான் உயிர் துறக்கும் நேரத்திலும்  தன் கற்பித்த அனைத்தையும் தனது வாழ்வில் செயல்படுத்திக் காட்டியவர்.

இவர் கற்பித்த நெறிமுறைகளின்படி நமது வாழ்வை அமைத்துக் கொள்வதுதான் என்று இறைவனுக்கு உரியதாக இருக்க முடியும்.

இன்று பலவிதமான பணிகளுக்கு மத்தியில் நாம் முதன்மையானது என பலவற்றை எண்ணி ஓடிக் கொண்டிருக்கக் கூடிய இந்தச் சூழலில் சில நிமிடங்கள் நமது ஓட்டத்தை நிறுத்தி சற்று ஆழமாக யோசிப்போம். நாம் இறைவனுக்கு உரியவை இறைவனுக்கு கொடுத்து இருக்கின்றோமா? என்று.

நாம் இம்மண்ணில் உயிர் வாழும் வரை இழந்தால் மீண்டும் பெற முடியாத ஒன்று நேரம் என்பார்கள். நாம் இறைவனோடு எவ்வளவு நேரத்தை செலவிட்டு இருப்போம் என சிந்திப்போம்.  குடும்பத்தில் உள்ளவர்களோடு நம்மால் நேரம் செலவிட முடியவில்லை இதில் இறைவனோடு நேரமா? என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம். ஆனால் நமது வாழ்வை சரிசெய்துகொண்டு இறைவனுக்கு உரியதை இறைவனுக்கு தர இன்றைய நாள் வாசகங்கள் நம்மை அழைக்கின்றன.  

இறைவனுக்கு உரியதை இறைவனுக்கு தர வேண்டும் என எண்ணி அவரை போல நாம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ளும்போது  கண்டிப்பாக இயேசுவைப் போல நாம் அடையக்கூடிய துன்பங்கள் ஏராளம். உதாரணமாக தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆதிவாசி பழங்குடியின மக்களுக்காக தன்னுடைய பணி வாழ்வில் 30 ஆண்டு காலங்களை செலவழித்த அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமி அவர்கள் NIA என்ற அமைப்பினரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். 


இயேசுவைப் போல் மக்கள் பணியில் ஈடுபடும் போது பலவிதமான இன்னல்களை நாம் சந்தித்தாலும் மன உறுதியோடு தொடர்ந்து இயேசுவின் பணியை செய்ய நாம் அனைவரும் முன்வர வேண்டும்.  அப்போதுதான் நாம் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கு கொடுத்தவர்களாக மாறிவிட முடியும். இப்படி வாழ்ந்த பல எண்ணற்ற இயேசுவின் உண்மை சீடர்கள் இன்றும் பலரின் வாழ்க்கையில் ஒளி விளக்காக சுடர் விட்டு வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல நமது வாழ்வையும் ஒளிமிக்க வாழ்வாக அமைத்துக் கொள்ள இன்றைய நாளில் இறைவனுக்கு உரியதை இறைவனுக்கு கொடுக்கக்கூடிய உண்மை சீடர்களாக மாறிட நமது  வாழ்வை இயேசுவின் வாழ்வாக  மாற்றிட முயல்வோம்.  


2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...