வெள்ளி, 2 அக்டோபர், 2020

இறையன்பின் சாட்சிகளாவோம் (03.10.2020)

ஒருமுறை ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவனிடம் ஒரு கடிதத்தை கொடுத்து அதை அவனுடைய தாயிடம் கொடுக்கச் சொன்னார். அதை வாங்கிப் படித்த அவனுடைய தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனே மகன் அதில் என்ன எழுதி இருக்கிறது அம்மா ?என்று கேட்டான். அந்த தாய் அவனிடம் உனது ஆசிரியர் நீ அறிவாளி என்பதால் உன்னுடைய அறிவிற்கு ஏற்றபடி அவரால் பாடம் நடத்த கடினமாக இருக்கிறதாம். எனவே உன்னை நூலகத்திற்குச் சென்று உனது அறிவிற்கு ஏற்ற புத்தகங்களை படித்து உன்னை மிகச் சிறந்த அறிவாளி ஆக்கும்படி கடிதம் எழுதி இருக்கிறார் என்று கூறினார். அவர்தான் மின்விளக்குகளை கண்டுபிடித்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். தனது தாயின் மறைவிற்குப் பின் அவளது அறையை சுத்தம் செய்த போது அந்த ஆசிரியர் அன்று கொடுத்த கடிதத்தை அவர் படிக்க நேர்ந்தது. அதில் உங்கள் மகன் மிகவும் மோசமான ஒரு முட்டாள். ஆகவே அவனை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். அவனால் எதையும் புரிந்துகொள்ள இயலாது என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த தாமஸ் ஆல்வா எடிசன் இவ்வாறு கூறுகிறார், "ஒரு சாதாரண ஏழைத்தாயின் ஊக்கமூட்டும் வார்த்தைகள்தான் ஆசிரியரால் முட்டாளாக்கப்பட்டவனை இவ்வுலகின் மிகச்சிறந்த விஞ்ஞானி ஆக்கியது".

அன்பிற்கினியவர்களே! வார்த்தைகள் உணர்வு மிக்கவை. வார்த்தைகள் அதிர்வு மிக்கவை. அன்பின் வார்த்தைகள் அனைவரிடத்திலும் அன்பின் அலைகளை பரவச் செய்யும். உற்சாகமூட்டும் வார்த்தைகள் நம்மை வெற்றிகளை நோக்கி அழைத்துச் செல்லும். நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் வாழ்வில் முன்னேற ஆவலைத் தூண்டும்.

அதேவேளையில் கோபத்தின் வார்த்தைகள் வேதனைகளை ஏற்படுத்தும். வெறுப்பின் வார்த்தைகள் உறவுகளை முறித்து விடும். அவநம்பிக்கையின் வார்த்தைகள் வாழ்வையே வீழ்த்திவிடும். 

சாதாரண மனிதர்களாகிய நமது வார்த்தைகள் இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றால் வல்லமை நிறைந்த இயேசுவின் பெயர் அற்புதங்களையும் அதிசயங்களையும் காணச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய வாசகத்தில் அனுப்பப்பட்ட சீடர்கள் திரும்பிவந்து இயேசுவிடம் அவரது பெயரால் தாங்கள் பேய்களை ஓட்டியதையும் நன்மைகள் பல புரிந்ததையும் மகிழ்ச்சியோடு கூறுவதை நாம் பார்க்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயர் எவ்வளவு வல்லமை வாய்ந்தது என்பதை அன்று சீடர்கள் புரிந்து கொண்டார்கள்.

 "நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன், என்று யோவான் 16: 23ல் நாம் வாசிக்கின்றோம்." 

 உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். ஏனென்றால், அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார், என்று 1 பேதுரு 5:7ல் கூறப்படும் வார்த்தைகள் இறைவனுக்கும் நமக்குமான ஆழ்ந்த உறவையும் வெளிப்படுத்துகின்றன. தாய் மடியில் தவழும் குழந்தை என உள்ளத்தில் அமைதியும் உறவுகளில் சமாதானமும் நிலவ, இறைவன் நமக்காக அனைத்துக் கவலைகளையும் தன்மேல் ஏற்றுக்கொள்கிறார் என்னும் வார்த்தைகள் நமக்கு விடுதலை அளிக்கின்றன.

ஆகவே,
 இயேசுவின் பெயர் நமக்கு வாழ்வளிக்கும். 
இயேசுவின் பெயர் நம்மை வழி நடத்தும். 
இயேசுவின் பெயர் வலிமை தரும்.
இயேசுவின் பெயர் சுகம் தரும்.
இயேசுவின் பெயர் நம் வாழ்வை உயர்த்தும்.
இயேசுவின் பெயர் விண்ணக மகிழ்வை நமக்கு பெற்றுத் தரும்.
இயேசுவின் பெயர் நம்மை அன்பில் வளர்த்திடும். 
               என்பதை உணர்ந்தவர்களாய், இயேசுவின் நாமத்தை நமது வாழ்வின் நங்கூரம் ஆக்கிக்கொள்வோம். இயேசுவின் பெயரால் ஆற்றல் பெறுவோம். இயேசுவின் பெயரால் இறையன்பின் சாட்சிகளாவோம்!

2 கருத்துகள்:

  1. "வார்த்தைகள் உணர்வுமிக்கவை".. ஆம்.. உண்மையே..
    தினமும் உணர்வுமிக்க வார்த்தைகளால் வலையொழி வாயிலாக சிந்திக்க வைக்கும் சகா சகோவுக்கு வாழ்த்துகள்..
    இறை இயேசுவின் ஆசீர் என்றும் உம்மோடு..��

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...