போராட்டமே வாழ்வாகட்டும்!
இறைவன் இயேசுவில்
அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகத்தில் நாம் அனைவரும் எப்போதும் போராடிக் கொண்டே இருக்க வேண்டும். ஆண்டவரோடு இணைந்து நாம் வலிமையும், ஆற்றலும் வலுவூட்டபெறவேண்டுமென இன்றைய முதல் வாசகம் கூறுகிறது. இன்று மனிதர்களாகிய நாம் ஆட்சி புரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின் மீது ஆற்றல் உடையோர் என பலவற்றோடு போராடிக் கொண்டிருக்கிறோம் என முதல் வாசகத்தின் வழியாக நாம் உணர்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட இயேசு தனது பணியை செய்து கொண்டிருக்கும் போது அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு எங்கு தன்னுடைய ஆட்சி அதிகாரம் இவரால் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக இயேசுவின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஏரோது அரசன் அவரை கொல்ல வேண்டும் என்பதற்காக அவரை கைது செய்ய தேடினான் என்ற செய்தியை பரிசேயர் சிலர் இயேசுவிடம் கூற, இயேசு அவர்களுக்கு, அவரிடம் சென்று சொல்லுங்கள் நான் இங்கே இருந்து என் பணியை செய்து கொண்டே இருப்பேன் என்று கூறுகிறார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் அனைவரும் வாசிக்க கேட்கலாம். இன்றைய வாசகங்கள் நமக்கு தரக்கூடிய பாடம் போராட்டமே நமது வாழ்வாக அமையட்டும் என்ற செய்தியாகும்.
மனித வாழ்க்கையில் போராட்டங்கள் இல்லாத வாழ்வே இல்லை. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் பலவிதமான போராட்டங்கள் அனுதினமும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் அனுதினமும் பலவிதமான போராட்டங்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த போராட்டங்களை எல்லாம் மறைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புதிய புதிய வழிகளில் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சிகள் நாளுக்கு நாள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. ஆட்சி அதிகாரமிக்கோரும் வலிமை படைத்தோரும் இன்று பாமர மக்களை அடக்கியாள நினைக்கிறார்கள். ஆனால் நாம் அனைவரும் இயேசுவைப்போல துணிவு கொண்டவர்களாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை கண்டு அஞ்சாது, ஆண்டவரின் பணியை நாம் செய்கிறோம். அடிப்படை தேவையில் இருக்கக்கூடிய மக்களுக்கான பணியை நாம் செய்கிறோம் என்பதை உணர்ந்தவர்களாக நமது உடலில் உயிர் உள்ளவரை போராட்டத்தோடு, போராட்ட குணத்தோடு எங்கெல்லாம் நீதி மறுக்கப்படுகிறதோ அங்கு நீதியை விதைக்கக் கூடியவர்களாக, நீதிக்குக் குரல் கொடுக்கக் கூடியவர்களாக, எங்கெல்லாம் ஏழை எளிய மக்கள் நசுக்கப் படுகிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கக் கூடியவர்களாக, பெயருக்காக போராட்டம் செய்பவர்களாக அல்லாமல் உண்மையாலுமே மனிதநேயத்தோடு, உள்ளார்ந்த உணர்வோடு ,அடுத்தவர்களை நம் அன்பு சகோதரர்கள் என்ற மனப்பான்மையோடு ஒருவர் மற்றவரின் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாக, ஒருவருக்கு ஏற்படக்கூடிய, ஒருவருக்கு இழைக்கப்படக்கூடிய அநீதியை கண்டு குரல் கொடுத்து நீதியை நிலைநாட்டிட, இயேசுவைப் போல துணிவோடு வாழ்நாள் முழுவதும் போராட்டங்களை நாம் கையாள இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் உண்மை சீடர்கள் என நாம் சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது, நமது சொல்லும் செயலும் அதை வெளிப்படுத்த வேண்டும்.
சமீபத்தில் கூட ஆதிவாசி பழங்குடியின மக்களுக்காக போராடிய தந்தை ஸ்டேன் என்பவர் NIA என்ற அமைப்பினால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் என்ற செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த நிகழ்வு இது. ஆனால் அவரை விடுவிக்க வேண்டும் என பல கிறிஸ்தவர்கள், பல பிற மதத்தைச் சார்ந்த சகோதரர்கள், பல தன்னார்வத் தொண்டர்கள், பல மக்கள் உரிமைக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கங்கள் என பலரும் இணைந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அவருக்காக. ஆனால் அவர்களோடு இணைந்து நாமும் குரல் கொடுக்கிறோம். குரல் கொடுப்பது மட்டும் போதாது. அவரை போல ,அந்த அருள்பணியாளரைப் போல நாமும் நசுக்கப்படக்கூடிய மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கக் கூடியவர்களாக உருவாக வேண்டும். அப்படி நாம் உருவாகும் போது நமக்காக கண்டிப்பாக அடுத்தவர் குரல் கொடுப்பார்கள் என்று நம்பிக்கையோடு போராட்டத்தை வாழ்க்கை ஆக்கிக்கொள்வோம். மக்களுக்கு நம்மை சுற்றி இருக்கக் கூடிய மக்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்களாக இருக்க இன்றைய நாளில் உறுதி ஏற்போம். எந்த நிகழ்வாக இருந்தாலும் நம்மை அது பாதிக்காத வரை நாம் அதில் தலையிடக்கூடாது என ஒதுங்கி இல்லாமல் அடுத்தவருக்கு இழைக்கப்படக்கூடிய அநீதி என்றாவது ஒருநாள் நமக்கும் இழைக்கப்படும் என்ற எண்ணத்தோடு எப்போதும் விழிப்பாய் இருந்து ஒருவர் மற்றவரின் உரிமைக்காகவும் உண்மைக்காகவும் நீதிக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய உண்மையான போராட்ட வீரர்களாக இவ்வுலகத்தில் தொடர்ந்து பயணிக்க உங்களை இன்றைய நாளில் அன்போடு அழைக்கின்றேன். வாருங்கள் வாழ்க்கை என்னும் போராட்டத்தில் உண்மைக்கும் நீதிக்கும் அநீதிக்கும் நீதிக்கும் உரிமைக்கும் குரல் கொடுக்கக் கூடியவர்களாக இயேசுவைப்போல துணிவோடு செயல்படுவோம்.
போராட்டமே வாழ்க்கை..
பதிலளிநீக்குநல்லதொரு பதிவு சகோ..👍