வெள்ளி, 30 அக்டோபர், 2020

எனக்கு எது முக்கியமாக உள்ளது? (31.10.2020)

எனக்கு எது முக்கியமாக உள்ளது?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய இறைவார்த்தை அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!

பில் பிரைட் என்பவர் இயேசுவும் அறிவாளிகளும் என்ற பெயரில் ஒரு வித்தியாசமான நூலை எழுதியிருக்கிறார் அதில் அவர் ஒரு அதிசயமான புள்ளிவிவரத்தை கொடுத்திருக்கிறார்.

1923 இல் சிக்காகோவில் எட்ஜ் வாட்டர் பீச் ஹோட்டல் என்ற இடத்தில் ஒரு முக்கியமான கூட்டம் நடந்தது. அதில் உலகத்திலேயே மிகப் பெரும் பணக்காரர்கள் 9 பேர் கலந்து கொண்டனர்.

மிகப் பெரிய தனியார் எஃகு நிறுவனத்தின் உரிமையாளர் சார்லஸ் ஷ்வாப்.
 
மிகப்பெரிய நிதி நிறுவனத்தின் தலைவர் சாமுவேல் இன்சில் 

மிகப்பெரிய எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஹேவார்ட் ஹாப்சன் 

மிகப்பெரிய கோதுமை வணிகர் ஆர்தர் காட்டன்

 நியூயார்க் பங்குச் சந்தையில் மிகப்பெரிய தலைவர் ரீச்செட் விட்னி

அமெரிக்க ஜனாதிபதியின் அமைச்சரவையில் ஒருவரான ஆல்பர்ட்ஃபால் 

அமெரிக்காவிலேயே மிகப்பெரிய வங்கி ஒன்றின் தலைவரான லியோன் பிரேசர்

வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய பங்குச் சந்தை வர்த்தகர் ஜெஸ்ஸி லிவர்மோர் 

பெரிய ஏகபோக நிறுவன முதலாளி ஐவர் குரூகர் 

இவர்கள் 9 பேரும் 25 ஆண்டுகளுக்கு பிறகு 

சார்லஸ் ஷ்வாப் இறப்பதற்கு முன்பு 5 ஆண்டுகள் கடன் வாங்கி பிழைத்தார். இறுதியில் திவாலாகி இறந்தார் 

சாமுவேல் இன்சில்  தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து தப்பிக்க வெளிநாட்டுக்கு ஓடி அங்கேயே கையில் காசு இல்லாமல் இறந்துபோனார்.

ஹேவார்ட் ஹாப்சன்  பைத்தியமாகி இறந்தார்.


ஆர்தர் காட்டன் திவாலாகி வெளிநாட்டில் இறந்து போனார்.

ரீச்செட் விட்னி நியூயார்க் நகரில் மிக மோசமான சிங் சிங் சிறையில் கடுங்காவல் கைதியாக காலம் கழித்தார்.

ஆல்பர்ட்ஃபால் பெரிய ஊழல் புரிந்து மாட்டிக்கொண்டார். 

லியோன் பிரேசர், ஜெஸ்ஸி லிவர்மோர் , ஐவர் குரூகர்  ஆகியோர் தற்கொலை புரிந்து கொண்டனர்.

இவர்கள் அனைவரும் எப்படி சம்பாதிப்பது என்பதை நன்றாக கற்று இருந்தார்கள். ஆனால் எப்படி வாழ்வது என்பதை கற்றுக் கொள்ளவில்லை. வாழ்வதற்காக பொருள் வேண்டும் ஆனால் இவர்களோ பொருள் ஈட்டுவதற்காக வாழ்க்கையை இழந்து விட்டார்கள்.
வாழ்க்கையை அனுபவிப்பதற்காக தான் பணம் ஆனால் இவர்களோ பணத்துக்காக வாழ்க்கையை விட்டு விட்டார்கள். பணம் இருந்தால் உயர்வு பெறலாம் என்ற எண்ணம் இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் பலரின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 

இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல் கிறிஸ்து இயேசுவை குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைவதையும், கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிக்கப்படுவதில் அவருக்கு இருக்கும் மிகுந்த ஆர்வத்தையும் நாம் காண்கிறோம். கோணலான பாதைகளையும் இறைவன் நேராக்குவார். கோணலான வரிகளிலும் கூட இறைவனின் வார்த்தை நேர்த்தியானதாக அமையும் என்பதற்கேற்ப நற்செய்தி அறிவிப்பவர்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி அறிவிக்கப்படுவதே முதன்மையானது என்று புனித பவுல் கூறுகிறார்.

வாழ்விலும் சாவிலும் முழு துணிவுடன் நான் கிறிஸ்துவை அறிவிப்பேன். கிறிஸ்துவை பெருமைப்படுத்துவேன் என்று புனித பவுல் கூறுவதன் வழியாக நமக்கெல்லாம் முன்மாதிரிகையாக தன்னை வெளிப்படுத்துகின்றார். நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே. நான் இறந்தாலும் கிறிஸ்துவோடு இணைவதால் அது எனக்கு ஆதாயமே, என்று கூறும் புனித பவுல் இறைவார்த்தையை அறிவிப்பதன் வழியாகவும், கிறிஸ்துவோடு விண்ணகப் பேரின்பத்தில் இடம்பெற தான் கொள்ளும் ஆவலை வெளிப்படுத்துவதன் வழியாகவும், தனது வாழ்வில் இயேசு கிறிஸ்துவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை வெளிப்படுத்துகின்றார். அவரைப்போல கிறிஸ்து இயேசுவுக்காக, நற்செய்திப் பணிக்காக, நம்மை அர்ப்பணிக்க இன்றைய வாசகத்தின் வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 
 
இன்றைய நாளில் நம் அருகில் இருப்பவர்களுக்கு இறைவார்த்தையை எடுத்துரைக்க நாம் தயாராக இருக்கின்றோமா ? என சிந்திப்போம்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம்மை தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர், தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்று கூறுகிறார். 

உன்னை ஒருவர் தாழ்த்திப் பேசும் போது நீ அமைதியாக இரு. அது உனது வீரம். 
உன்னைத் உயர்த்தி பேசும் போது நீ கவனமாக இரு. அது உனது விவேகம் என்பார்கள்.
ஆனால் இன்று இயேசு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள அழைப்பு விடுக்கின்றார். பெற்றோர் முன் பிள்ளைகள் தங்களை தாழ்த்திக் கொள்கிறார்கள் ஆசிபெற. வயலில் விளையும் தானியங்கள் கூட தம்மைத் தாழ்த்திக் கொள்கின்றன, அவை பக்குவமடைந்ததை காண்பிக்க. இன்று இயேசு நம்மை தாழ்த்திக் கொள்ள அழைக்கின்றார். எதற்காக என்று சிந்திப்போம்!

"நான் குறைய வேண்டும் அவர் வளர வேண்டும்" என்று கூறிய திருமுழுக்கு யோவான் கிறிஸ்துவுக்கு முன் தன்னை தாழ்த்தி கொள்கின்றார். அது போலத்தான் இன்றைய முதல் வாசகத்தில் கூட புனித பவுல் கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாக, தன்னைத் தாழ்த்தி கொள்கின்றார்.

இன்று நாமும் புனித பவுலை போலவும், புனித திருமுழுக்கு யோவானை போலவும், கிறிஸ்து இயேசுவுக்காக நம்மை எவ்வாறு தாழ்த்தி கொள்ளலாம் என்று சிந்திப்போம்! 

கிறிஸ்து இயேசுவின் நற்செய்தியை இன்றைய சூழலில் எவ்வாறு நாம் அறிவிக்க முடியும் என்பதை சிந்திப்போம். 

இன்று இந்த கொரோனாவின் காலகட்டத்தில் உணவு இல்லாமல் தவிக்கும் ஏழையருக்கு சிறிது உணவு கொடுத்து அவர்களின் பசியை ஆற்றி இறைவனை முன்னிலைப்படுத்துவோம்.

நாம் கல்வி கற்றவர்களாக இருந்தால் கல்வியில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பதன் வழியாக அறிவொளியோடு இறை ஒளியையும் ஏற்றுவோம். 

ஆறுதலற்ற முதியவருக்கு நமது இதமான வார்த்தைகளால் ஆறுதல் கூறி வலுவூட்டுவோம்!

இவ்வாறு நமது வார்த்தைகளும் அன்புச் செயல்களும் நற்செய்தியாய் மலரட்டும்! மலரும் ஒவ்வொன்றிலும் மனிதநேயத்தையும் இறைவனையும் முன் நிறுத்துவோம். 

1 கருத்து:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...