இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் என பவுல் முதல் வாசகத்தில் குறிப்பிடுகிறார். நற்செய்தி வாசகத்தில் இயற்கையிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ள ஆண்டவர் கூறுகிறார். இயற்கையிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளக்கூடிய நாம் ஏன் நமது வாழ்க்கையில் காணும் மனிதர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளக் கூடாது? என்ற கேள்வியை நாம் எழுப்பி பார்க்க அழைக்கப்படுகிறோம்.
நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள் எனவும் புனித பவுல் நம்மை அழைக்கின்றார். இவ்வுலகில் இறைவன் யாரையும் வெறுமனே படைக்கவில்லை. நமது சாயலாகவும் பாவனையாகவும், இறைவனால் படைக்கப்பட்ட நாம் ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர் அவருக்கென்று ஒரு சிறப்பான பணியையும் இறைவன் கொடுத்திருக்கின்றார்.
ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு வகையில் நல்லவர்களாக வாழ முற்படுகின்ற பொழுதும், இன்றைய நாளிலே சிறப்பாக
நாம் அனைவரையும் முழுமனதாழ்மையுடன் ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி வழிநடத்த புனித பவுல் வழியாக இறைவன் அழைப்பு விடுக்கின்றார்.
அன்பிற்காக இவ்வுலகில் மனுவுரு எடுத்த ஆண்டவர் இயேசு கிறிஸ்து அந்த அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கின்றார். நமது அன்பு எத்தகையது என்று இன்றைய நாளில் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
உண்மையான அன்பு!
ஒரு முனிவரிடம் சென்று ஒரு பெண்மணி என் கணவன் என்னை அன்பு செய்யவே இல்லை என்று கூறினாள். அவளைப் பார்த்து அன்பு என்றால் என்ன? என்று கேட்டார் அந்த முனிவர். ஆனால் அந்தப் பெண்ணோ பதிலேதும் கூறாமல் அமைதியாக நின்றாள். அவளைப் பார்த்து அந்த முனிவர் கூறினார், எனக்கு உன்னை பிடித்துள்ளது. நீ எனக்கு உரியவன் நானே உன் மீது அதிக உரிமை கொள்வேன். என்னிடம் மட்டுமே நீ பேச வேண்டும். நான் சொல்வதை நீ கேட்கவேண்டும். ஏனென்றால் உன் மேல் நான் அதிக அன்பு வைத்திருக்கிறேன். இப்படி எல்லாம் சொல்வது அன்பா? என்று கேட்டார். அந்தப் பெண்மணி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். முனிவர் கூறினார், நிச்சயமாக இது அன்பு இல்லை. அன்பு என்றால், எனக்கு உன்னை பிடித்திருக்கிறது. உன்னிடம் எனக்கு உரிமை உள்ளது. ஆனால் அந்த உரிமை எப்பொழுதும் உன்னை கட்டுப்படுத்தாது. உனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதே மாதிரி நீயும் செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. என் அன்பை மட்டும் பெற்றுக் கொள் போதும். எதுவும் என்னிடம் பிடிக்கவில்லை என்றால் கூறிவிடு. உனக்காக மாற்றிக்கொள்கிறேன். என்னையும் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடு. நெருங்கி நின்று துன்புறுத்தாமல் விலகி நின்று உன்னை நேசிப்பேன் என்று கூறுவதுதான் அன்பு. அன்புக்கு அடிமையாகத்தான் தெரியும். அடிமைப்படுத்தத் தெரியாது என்று கூறினார். அருகிலோ தொலைவிலோ அன்பை மட்டுமே கொடுங்கள். அன்புடன் வாழுங்கள். உன் வாழ்க்கை அழகாகும் என்று கூறி அந்தப் பெண்மணியை அனுப்பி வைத்தார். முனிவரின் வார்த்தைகளைக் கேட்ட பெண்மணி அன்பு என்றால் அடிமைப்படுத்துவது அல்ல அடிமையாகுவது, அன்பு என்றால் அடிமைப்படுத்துவது அல்ல என்பதை உணர்ந்தவளாய் அங்கிருந்து சென்று தன் கணவனோடு அன்புறவில் வாழ்ந்தாள். இன்று நாம் வாழக்கூடிய உலகில் பலரும் அன்புக்கு அர்த்தம் தெரியாமல், நமது விருப்பப்படி அடுத்தவர் செயல்பட வேண்டும் என்பதையும், நம் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்து அன்பு என்ற பெயரால் அடுத்தவரை அடிமைப்படுத்த முயலுகிறோம். இதிலிருந்து விடுபட்டு உண்மையான அன்பின் மகத்துவத்தை உணர்ந்து செயல்படும் போது வாழ்க்கை அன்பானதாகவும் அழகானதாகவும் அமையும். வாழ்க்கையை அன்பானதாகவும் அழகானதாகவும் ஆக்க இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம். நம் மீது அளவற்ற அன்பு கொண்ட ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றி நாமும் நாம் சக மனிதர்களிடத்தில் உண்மையான அன்போடு வாழ அதன் வழியாக உண்மையானவர்களாய் வாழ இன்றைய நாளில் உள்ளத்தில் நம்மை மாற்றிக்கொள்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக