இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் வாசகத்தின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய நாளில் முதல் வாசகமும் நற்செய்திவாசகமும் மையமாக குறிப்பிடுவது தூய ஆவியானவரை நாம் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத்தான்.
அருட்சாதனத்தின் வழியாக தூய ஆவியாரை பெற்றுக்கொண்ட நாம், ஒவ்வொருவரும் தூய ஆவியாரின் துணையை கொண்டவர்கள்.
நம்மிடம் இருக்கக்கூடிய தூய ஆவியானவரே நாம் எவ்வாறு புரிந்திருக்கிறோம்? என்பது பற்றி சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
யார் இந்த தூய ஆவியானவர்? என்ற கேள்வியை நம்முள் எழுப்பினால் பலரும் பலவித கருத்துக்களை கொண்டிருக்கலாம்.
தூய ஆவியானவர் மூவொரு கடவுளின் மூன்றாம் நிலையில் இருப்பவர் எனக் கூறப்படுகிறது.
இவரே நம்மை வழி நடத்தும் பணியை செய்பவர் எனவும் கற்பிக்கப்படுகிறது.
இந்தத் தூய ஆவியானவரே நன்மை தீமையை நமக்கு விளக்கிக் கூறக்கூடியவராக இருக்கிறார்.
சிலர் தூய ஆவியானவர் என்பவர் கடவுளின் உயிர் மூச்சு என கூறுகிறார்கள். இந்த மூச்சுக் காற்றை ஊதவே மனிதன் உயிர் பெற்று எழுந்தான் எனவும் சொல்லப்படுகிறது.
இந்த தூய ஆவியானவர் எப்போதும் நம்மை நல்வழிப் படுத்துவதற்காக நமது மனசாட்சியாக இருந்து செயல்படுகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஒருமுறை தனது குஞ்சுகளோடு வலம் வந்து கொண்டிருந்த கோழியை பார்த்து கடவுள் கேட்டார் எப்படி உன் குழந்தைகள் மட்டும் இந்த பூமியில் நல்லதும் கெட்டதும் எனக்கு இரண்டும் இருக்கும் போது, நல்லதை மட்டுமே உண்டு உயிர் வாழ்கிறார்கள் என்றார்.
அதற்கு கோழி கூறியது நான் இந்த நிலத்தில் நல்லதை கண்டால் ஒரு விதமான சத்தத்தை எழுப்புவேன். பூச்சிகளை கண்டால் ஒரு விதமான சத்தத்தை எழுப்புவேன். நஞ்சை கண்டால் ஒரு விதமான சத்தத்தை எழுப்புவேன். சத்தத்தை வைத்து எனது குஞ்சுகள் நல்லதை தேர்வு செய்கின்றன என்றார்.
உடனே கடவுள் கூறினார். எனது குழந்தைகளும் எனது சத்தத்திற்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும் என்று கூறி மறைந்தார்.
வேடிக்கையாக கூறப்பட்ட கதையாக இருந்தாலும், நமது மனசாட்சியே நன்மை தீமையை நமக்கு எடுத்துரைக்கிறது. அந்த மனசாட்சியே தூய ஆவி எனவும் கூறப்படுகிறது.
நம்மை பராமரித்து நல்வழிப் படுத்தக்கூடிய இந்த தூய ஆவியானவரை நோக்கி நாம் என்ன செய்கின்றோம்? இவரிடம் எதை நாடுகிறோம்? இவரை எவ்வாறு பயன்படுத்துகிறோம்? என்பதை எல்லாம் இன்றைய நாளில் சந்திக்க நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
இந்த உலகத்தில் இருக்கக்கூடிய தீய ஆவிகளின் மீது இயேசு அதிகாரம் கொண்டவர் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. கடவுள் நம்மை காப்பார், நல்வழிப்படுத்துவார் என்பதன் அடையாளமே தூய ஆவியானவர்.இந்த ஆவியார் எப்போதும் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்தி வருகிறார். இவரை நம்பிக்கையின் வழியாக பெற்றுக்கொள்ள முடியும் என இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகம் நமக்கு கூறுகிறது. நம்பிக்கையின் அடிப்படையில் அவரைப் பெற்றுக் கொள்ளவும், அவரை கண்டு கொள்ளவும், அவர் வழியாக நல்லதை தேடவும், நல்லதை கேட்கவும், நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.
அழைத்த இறைவனின் குரலுக்கு செவி கொடுக்கக் கூடியவர்களாகிய நாம் நம்முள் இருந்து செயலாற்றும் தூய ஆவியானவரே கண்டு கொண்டு அவர் வழியாக நல்லதை இச்சமூகத்தில் உருவாக்கிட இன்றைய நாளில் உறுதி ஏற்றவர்களாக தூய ஆவியானவரின் துணையுடன் அவரின் இருப்பை உணர்ந்து கொள்ளக் கூடியவர்களாக தூய ஆவியானவரை நோக்கி ஜெபித்து இறை அருளைப் பெற்றுக் கொண்டு நல்வழியில் செயல்பட உங்களை அன்போடு அழைக்கின்றேன். அதற்கான அருளை இன்றைய நாளில் இறைவனிடத்தில் வேண்டுவோம்.
தூய ஆவியானவரின் துணையுடன் கடவுளின் உடனிருப்பை உணர்வோம்! அவரிடத்திலே நல்லதை கேட்கவும் நல்லதைப் பேசவும் நல்லதை பிறருக்குக் கொடுக்கவும் முன்வருவோம் என்று அனைவருக்கும் உற்சாகமூட்டும் அருள் சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்! எங்களின் ஜெபம் என்றும் உங்களோடு!
பதிலளிநீக்குகோழி எடுத்துக்காட்டு அருமை. நானும் அதை கவனித்து இருக்கிறேன் சகோ..
பதிலளிநீக்குதூய ஆவியார் உங்களை என்றும் வழிநடத்துவார்.
நன்றி..