இளைஞர்களின் ஆற்றல் பற்றி ஆன்றோர் வாக்குகள் : .
உலகமே இளைஞர்கள் கையில் . இறைவா , இளைஞர்களை மட்டும் எனக்குக் கொடுத்து விடும் . திருச்சபையை மாற்றிக் காண்பிக்கிறேன் என்றார் புனித தொன்போஸ்கோ .
பத்து இளைஞர்கள் என் கையில் இருந்தால் இந்தியாவின் சரித்திரத்தையே மாற்றிக் காண்பிக்கிறேன் என்றார் விவேகானந்தர் .
வளரத்துடிக்கும் முல்லைச் செடிக்கு ஊன்றுகோல் ஒன்று வைத்தால்தான் செடி வளர்ப்பவரின் விருப்பப்படி முல்லைச்செடி வளரும் . அதே போல இளைஞர் திசை தெரியாமல் செல்லுகின்ற பருவம் இந்த வாலிபப் பருவம் . தன் விருப்பம் போல ஓடுகின்ற காட்டாற்று வெள்ளத்தை அணைபோட்டுத் தடுத்து நிறுத்தினால் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்படுத்தலாம் . அதேபோல வீறுகொண்டு எழுகின்ற இளைஞர் சமுதாயத்தின் எண்ணங்களையும் ஏக்கங்களையும் சக்தியையும் ஆக்கப்பூர்வமான நல்ல செயல்களுக்குப் பயன்படுத்த வேண்டும் . எனவேதான் தாய்த் திருஅவை இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது . ( எ.கா ) இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகள் பல இடங்களில் இக்கருத்தை வலியுறுத்திக் கோடிட்டுக் காட்டுகின்றன . ஒரு சில பழமைவாதிகளின் கூற்றுப்படி இளைஞர் என்றால் பிரச்சினைக்கு உரியவர்கள் , முரடர்கள் , அடங்காதவர்கள் , தான்தோன்றித்தனமாகத் திரிபவர்கள் , நேற்று முளைத்த காளான்கள் என்றெல்லாம் சொல்வதைக் கேட்டிருக்கிறோம் . ஆதிகாலத் திருஅவை வரலாற்றிலே இளைஞர்கள் தங்கள் திடமான உள்ளத்தினால் திருச்சபைக்காகத் தங்கள் உயிரையே கொடுத்திருக்கிறார்கள் . அதே உணர்வு இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் இருக்கிறது . எனவே இளைஞர்களுக்கு மறைக்கல்வி அவசியம் தேவை .
வரலாற்றில் இளைஞர்களைப் பயன்படுத்திய விதம் பொதுவுடமைக் கொள்கையினர் ( கம்யூனிஸ்ட் ) முதலில் இளைஞர்களைத்தான் தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள் . நாட்டில் நடக்கும் ஒரு சில ஏற்றத் தாழ்வுகளை - ஏழை பணக்காரன் நிகழ்ச்சிகளை சாதிக் கொடுமைகளை மதத்தில் நடக்கும் ஒரு சில தவறுகளை ஆதாயமாக்கிப் பெரிதுபடுத்திக் காட்டித் தங்கள் மாய வலையில் சிக்கவைத்துக் கொள்கிறார்கள் . இன்னும் அப்படியே இளைஞர்களின் அறிவையும் இளமையையும் வீரத்தையும் கண்மூடித்தனமாகத் தீவிரவாத செயல்களுக்கும் சாதி , மதக் கலவரங்களுக்கும் சுயநலத்திற்கும் , பொருளுக்கும் சிற்றின்ப ஆசைக்கும் இளைஞர்களை அடிமைப்படுத்திக் பணத்திற்கும் போதைப் பழக்கத்திற்கும் அழைத்துக் கொண்டுள்ள காலம் இது .
இக்காலத்தில் செய்ய வேண்டியது என்ன ?
உலகில் சமுதாயத்தில் மதத்தில் சாதியில் ஏழை பணக்காரரில் எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன . அவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு இளைஞர்களை அழிவுப் பாதைக்கு அழைத்து செல்கிறார்கள் . இச்சூழலில் திருஅவை வரலாற்றில் இளைஞர்களான மறைசாட்சிகளின் வாழ்க்கைக் குறிப்புகளை இன்றைய இளைஞர்களுக்குப் பாடமாக அமைக்கலாம். அதே இளம் மறைசாட்சிகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகக் கொடுமையான அனுபவங்களில் அவர்கள் கொண்டிருந்த திடமான விசுவாசத்தைப் போல இன்றைய இளைஞர்களும் இருக்க வேண்டுமென ஊக்கம் காட்டுவது சிறந்தது . இன்றையச் சூழ்நிலையில் இளைஞர்கள் சந்திக்கும் சாதி , மத , இன ஏற்றத்தாழ்வுகளை ஆதாரத்துடன் எடுத்துக்கூறி இந்த நிலை உனக்கு ஏற்பட்டால் நீ என்ன செய்வாய் ? என்ற கேள்விகளை எழுப்பலாம். ஏன் சில நேரங்களில் ஆய்வுகளை கூட மேற்கொள்ளலாம் . பட்டிமன்றம் நடத்தலாம் .
இன்றைய இளைஞர்கள் புதுமையை விரும்புகிறார்கள் . எனவே புது அணுகுமுறையில் இளைஞர்களின் மனநிலைக்கேற்ப , அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் பாடத் திட்டங்கள் அமைத்து மறைக்கல்வி வகுப்பு நடத்தலாம் .
ஆலோசனைகள்
1.இளைஞர்களை மறைக் கல்விக்கு வரவழைக்கப் பங்குத் தந்தை , வேதியர் , அருள்சகோதரிகள் முன்வர வேண்டும் . அவர்களைத் தனித்தனியே சந்தித்து உரையாடி இளைஞர்களின் குடும்பச் சூழ்நிலையைப் பற்றி அறிந்து அவர்களுக்குத் தக்கவாறு ஆலோசனைகள் தந்து வழிநடத்தலாம் .
2 . இளைஞர்கள் ஒன்றுகூடிப் பேசவும் விளையாடவும் செபிக்கவும் அவர்களின் திறமைகளை வளர்க்கவும் ஏதுவான இடம் , சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் .
3. பங்குப் பணிகளில் குறிப்பாக , திருவழிபாட்டு நிகழ்வுகளில் இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். அவர்களைக் கவனித்துக் கொள்ளவும் வேண்டும் .
4. மறைக்கல்விக்கு வரும் இளைஞர்களை ஆன்மீகத்தில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அவர்களைச் சமூக சேவையிலும் ஈடுபடுத்த வேண்டும் ( உதா.) . பொது சேவைகள் செய்தல் , சாதி , மதம் கடந்து இப்பணி அமையச் செய்வது நல்லது .
5. கிறிஸ்துமஸ் , புத்தாண்டு , ஈஸ்டர் போன்ற பங்கு விழாக்களில் ஈடுபடுத்த வேண்டும் .
6. இளைஞர் மறைக்கல்வி குழுவிற்குத் தனியே பொறுப்புகளைக் கொடுத்தல் நல்லது .
7. எல்லா இளைஞர்களையும் வழி தவறிச் செல்ல வைக்க ஒரு இளைஞன் போதும் , அப்படி கோணல் புத்தியுள்ள இளைஞரைக் கண்டறிந்து ஆரம்பத்திலேயே களையெடுப்பது ( அ ) திருத்த முயல்வது சிறந்தது .
8. இளைஞர்களைக் கொண்டு ஞாயிறு மறைக்கல்வி , விடுமுறை மறைக்கல்வி வகுப்புகள் நடத்தலாம் . ( இதற்கு முதலில் இவர்களைச் சிறிய பயிற்சிப் பாசறைகளில் பங்கு பெறச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும் ) .
9. இந்த இளைஞர்களுக்குரிய வேலைவாய்ப்புகளையும் எதிர்கால நல்வாழ்விற்கும் ( திருமண வாழ்வு ) வழிகாட்டினால் இன்னும் ஆழமான நட்புறவில் வளரலாம் .
10. பங்குத்தந்தை , வேதியர் , வழிகாட்டிகள் ஆகியோர் குறிப்பிட்ட ஒரு சிலரோடு மட்டும் பழகுவது , அவர்கள் வீட்டிற்கு மட்டுமே செல்வது , இளைஞர்களின் மறைக்கல்வி வகுப்புகளில் தேவையின்றித் தலையிடுவது ஆகியன எதிர் விளைவுகளை உருவாக்கும் .
நிறைவாக
இளைஞர்களை முதலில் முழுமையாய் நம்ப வேண்டும் . அவர்களின் தலைவர்களாக அல்லாமல் நண்பர்களாக இருந்து வழிகாட்ட வேண்டும் .
அவர்களிடம் கொடுக்கப்பட்ட பணிகளில் தேவையில்லாமல் தலையிடுவதைத் தவிர்த்துவிட வேண்டும் .
அவர்களின் ஆலோசனை , விருப்பம் , எதிர்பார்ப்பு இவைகளையும் தெரிந்து கொள்ளவேண்டும் .
அவர்களிடம் அதிகாரத்தைக் காட்டாமல் அன்பைக் காட்டினால் எல்லாக் காரியங்களையும் அவர்கள் வழியாகச் சாதிக்கலாம் .
அடிக்கடி அவர்களின் நல்ல குணத்தை ஊக்கப்படுத்தினால் இனி வளரும் திருஅவை நிச்சயமாகப் புத்தொளி வீசும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக