இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாளில் வாசிக்கக்கூடிய நற்செய்திகள் அனைத்தும் மனதில் ஒரு விதமான கலக்கத்தை தரக் கூடியதாக அமைகிறது.
ஏனெனில் மண்ணுலகிற்கு நான் அமைதியை ஏற்படுத்த வரவில்லை. தீ மூட்டவே வந்தேன் என இயேசுவின் வார்த்தைகள் வெளிப்படுவதை நாம் வாசிக்க கேட்கின்றோம்.
இன்றைய சூழலில் இந்த வார்த்தைகளை எவ்வாறு பொருள் கொள்வது என சிந்திக்கும் போது ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக இருப்பார்கள், என இயேசு கூறுகிறார். இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் பல குடும்பங்கள் அப்படித்தான் இருந்து கொண்டிருக்கின்றன.
திருமணத்தின் போது இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாக இருப்பேன் என வாக்குறுதி கொடுத்து பலரின் முன்னிலையில், கடவுளின் முன்னிலையில், கடவுளின் பணியை செய்யக்கூடிய அருள்பணியாளர்கள் முன்னிலையில், இச்சமூகத்தில் குடும்பமாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒவ்வொருவரின் முன்னிலையிலும் வாக்குறுதியை கொடுத்து இணைய கூடியவர்கள். குடும்பத்தில் எப்போதும் இணைந்து இருக்கிறார்களா? என சிந்திக்கும் போது பல நேரங்களில் பல விதமான காரணங்களால் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு பேசாமல் இருக்கக் கூடிய சூழல் இன்று அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இத்தகைய சூழலில் இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திக்க அழைக்கின்றன. இந்த உலகில் நான் அமைதி அல்ல தீயை மூட்ட வந்தேன் என்கிறார் இயேசு.
எண்ணங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபட்டது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான எண்ணத்தைக் கொண்டவர்கள். எண்ணங்கள் எப்போதும் நிலையாக இருப்பதில்லை. சூழலுக்கு ஏற்றவாறு, நேரத்திற்கு ஏற்றவாறு நேரத்திற்கு ஏற்றவாறு இந்த எண்ணங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எண்ணிக் கொண்டே இருப்பதால் தான் மனிதன் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் என தத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த எண்ணங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டு இருப்பதன் அடிப்படையில் தான் நம்மிடையே பல விதமான கருத்து முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இவைகளை கருத்து முரண்பாடுகளாக பார்ப்பதை விடுத்து நாம் அடுத்தவர் மீதான ஒரு வகையான கோபமாக பார்க்கக் கூடிய சூழ்நிலை அதிகமாகிவிட்டது.
ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் இணைந்து ஒரு காரியத்தைப் பற்றி தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். கணவனுடைய பார்வை ஒன்றாக இருக்கிறது. மனைவியின் பார்வை வேறாக இருக்கிறது. இருவரும் மாறி மாறி தங்களுடைய பார்வையை தெரிவிக்கிறார்கள் ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையில் சண்டையில் எழுகிறது. நான் சொல்வது தான் சரி என்கிறார்கள் ஆண்கள். சில நேரங்களில் பெண்கள் நான் சொல்வது தான் சரி என்கிறார்கள். இவ்வாறு ஏற்படக் கூடிய கருத்து மோதல்கள் உறவை பிரிக்கின்றன. கருத்து மோதல்கள் உறவை பிரிப்பதை கண்டுணர்ந்து கொள்ள இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். எண்ணங்கள் வேறுபட்டு இருப்பதன் அடிப்படையில் தான் பலவிதமான சிக்கல்கள் எழுகின்றன. எண்ணங்கள் எப்போதும் இணைந்தே இருக்கும் என எண்ணுவதும் தவறான ஒன்று. எனவே நாம் வாழக்கூடிய இந்தச் சூழலில் ஒருவருடைய எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும், அடுத்தவரின் எண்ணங்களை மதிக்கக் கூடியவர்களாகவும், அடுத்தவரின் பார்வையை புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் வாழ்வதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். அவ்வாறு நாம் வாழும் போதுதான் இவ்வுலகில் அமைதி நிலவும். அதை விடுத்து எண்ணங்களை, அடுத்தவர்கள் உணர்வுகளை, அவர்களின் பார்வைளை, அடுத்தவரின் எண்ணங்களை மதிக்கத் தவறி என்னுடைய கருத்து தான் சரி! நான் சொல்வதே சரி என்ற எண்ணத்தோடு நாம் இணைந்திருக்கும்போது நம்மிடையே ஒற்றுமை என்பது இருக்காது. மாறாக நம்மிடையே சண்டைகளும் சச்சரவுகளும் தான் தீயாக வெடித்துக் கொண்டிருக்கும். இதையே இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக இறைவன் உணர்த்துவதாக பொருள் கொள்ளலாம்.
இன்றைய முதல் வாசகத்தில் அனைவரும் இணைந்து ஒரே குடும்பமாக இருப்பதற்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்கிறார் பவுல். அவரின் வார்த்தைக்கு ஏற்ப குடும்பங்களுக்காக நன்றி கூறுவோம் . பலவிதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இன்றும் பல குடும்பங்கள் குடும்பங்களாக தான் இருந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் கூட்டுக் குடும்பமாக இருந்தோம். கூட்டுக்குடும்பம் என்றால் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, ஆகியோர் இருப்பார்கள். ஆனால் இன்று கணவன் மனைவி இணைந்து இருப்பதுதான் கூட்டுக் குடும்பம் என்ற நிலை உருவாயிற்று. சமீபத்தில் பார்த்த ஒரு செய்தி. ஒரு இல்லத்தின் பெயர் அன்னை இல்லம்.ஆனால் அன்னை இருப்பதோ அனாதை இல்லம். இத்தகைய சூழல்தான் நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே நாம் அனைவரும் நம்முடைய செயல்பாடுகளை சிந்திக்க அழைக்கப்படுகிறோம். பல கருத்து வேறுபாடுகள் நம்மிடையே இருந்தாலும் இன்றும் பல குடும்பங்களில் அடுத்தவர்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் கருத்துக்களையும் மதிக்கக் கூடிய நபர்கள் அதிகம். அதனால் தான் குடும்பங்களாக நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறோம். ஒரு குடும்பம்தான் குழந்தைக்கு பல காரியங்களை கற்றுக்கொடுக்கிறது என்று கூறுவார்கள். ஒரு குழந்தையின் முதல் பள்ளிக்கூடம் தாயின் மடி தான் என்று கூறுவார்கள். தாயின் மடியில் இருந்துதான் குழந்தைகள் பலவற்றைப் கற்றுக் கொள்கிறார்கள். நமது குடும்பம் நல்ல குடும்பங்களாக இருப்பது என்பது நாம் விட்டுக் கொடுக்கக் கூடியதிலும், பிறருடைய கருத்துக்களையும் எண்ணங்களையும் உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் கூடியவர்களாக இருக்கும்போதுதான் நல்ல குடும்பங்களாக அமைதியான குடும்பங்களாக நாம் இருக்க முடியும். எனவே எண்ணத்தால் நாம் தனித்து இருந்தாலும், மாறுபட்டு இருந்தாலும் உள்ளத்தால் உணர்வால் ஒன்றிணைந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.
இறைவனின் வார்த்தைகள் அச்சுறுத்துவது போல இருந்தாலும் அச்சுறுத்தும் வார்த்தைகள் தரக்கூடிய ஆழமான கருத்துக்களை புரிந்து கொண்டு நல்ல குடும்பங்களாக இச்சமூகத்தில் நாம் வலம் வர இன்றைய நாளில் இறையருளை நாடுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக