நமது செயல்களுக்கு நாமே சாட்சிகளாவோம்!
இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நாளில் முதல் வாசகத்தில் பவுல் நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, இயேசுவின் பணியை இவ்வுலகில் செய்யக்கூடிய ஒவ்வொருவருக்கும் எந்தவிதமான துன்பங்கள் நேரிடும் என்பதைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறார். மேலும் நல்லது செய்பவர்களை தடுக்கக்கூடிய செயலானது தவறு என்பதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நம்முடன் இயேசு உரையாடுகிறார்.
இன்றைய நாளில் நாம் அனைவரும் நமது செயல்களை சிந்தித்துப் பார்க்க அழைக்கப்படுகிறோம். பல நேரங்களில் நல்ல விதமான செயல்களை பலர் செய்ய முன்வரும் போது அவர்களை அப்பணியைச் செய்ய விடாமல் தடுக்கக் கூடியவர்களாக பல நேரங்களில் நாம் இருக்கிறோம். ஏன் நம்மில் பலர் நல்லதை செய்ய முயலும் போது நம்மைப் பலர் தடுக்கும் போது நாம் பல நேரங்களில் கோபம் கொள்கிறோம்.
ஆனால் தெரிந்தும் தெரியாமலும் பலர் நல்லது செய்ய விடாமல் தடுத்து கொண்டிருக்கிறோம். சமூகத்தில் ஒரு விதமான அநீதி இழைக்கப்படுகிறது என நமக்குத் தெரிந்தும் அது தெரியாதவர் போல இருக்கிறோம். பல நேரங்களில் கண்ணிருந்தும் காணாதவர்களாகவும் காது இருந்தும் கேட்காதவர்களாகவும் துன்பப்படுவர்களைக் கண்டும் காணாதவர்கள் போலும் துன்பப்படுபர்களின் துன்பத்தை கேட்டும் கேட்காதவர்களாக நடந்து கொண்டிருக்கிறோம். நமது செயல்பாடுகளை சீர்தூக்கி பார்க்க இன்றைய நற்செய்தி வாசகத்தில் வழியாக இறைவன் நமக்கு அழைப்பு விடுக்கிறார்.
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் நாம் தான் பொறுப்பாளர்கள். நமது செயல்களை வைத்தே அனைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.
எனவே நாம் இன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய செயல்களை நினைத்து பார்ப்போம். நாம் நல்ல விதமான செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்வோம். அதே சமயம் நாம் அறிந்தோ அறியாமலோ நமது செயல்களால் பலவிதமான நன்மைகள் தடுக்கப்பட்டு இருக்குமாயின் அவற்றை எண்ணி மனம் வருந்துவோம். மன்னிப்பு வேண்டுவோம்.
இனி வரக்கூடிய காலங்களில் நலமான செயல்களை நல்ல மனதுடன் தொடர்ந்து செய்திடவும் நம்மை காண்பவர்களும் நல்ல செயல்கள் செய்திட ஈர்க்கப்படவும் இறையருளை வேண்டுவோம். நமது செயல்களால் இறைவனுக்கு ஏற்புடையவர்களாக நாம் மாறிட இன்றைய நாளில் இறையருளை வேண்டியவர்களாய் தொடர்ந்து இயேசுவின் பாதையில் பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக