இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளில் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய வாசகங்கள் அனைத்தும் நாம் விழிப்போடு இருப்பதற்கு அழைப்பு தருகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் ஒருவரே என்பதை , யாவே இறைவன் ஒருவரே இறைவன் என்பதை, இஸ்ரயேல் மக்களுக்கு உணர்த்த கூடிய வகையில் முதல் வாசகம் அமைகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய ஆவியானவர் வழியாக நாம் அனைத்தையும் அறிந்து கொள்கிறோம் என பவுலடியார் உணர்த்துகிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை குற்றம் சாட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவரிடம், " வரி செலுத்துவது முறையா? இல்லையா?" என கேள்வியை எழுப்புகிறார்கள்.இயேசு விவேகம் கொண்டவராக சீசருக்கு உரியதை சீசருக்கும் கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் செலுத்துங்கள் என கூறுகிறார். இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்தும் நம்மை விழிப்போடு இருக்க அழைப்பு விடுக்கின்றன.
நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் எப்போதுமே அடுத்தவரை விட நம்மை உயர்ந்தவர்களாக நாம் எண்ணிக் கொண்டும் அடுத்தவரோடு நம்மை ஒப்பிட்டுக் கொண்டும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செருப்பில்லாத ஒருவன் தன் காலுக்கு செருப்பு இல்லையே என வருத்தப்பட்டான். ஆனால் அவன் கால் இல்லாத ஒருவனை கண்டதும் நிறைவு கொண்டான். இன்று மனித வாழ்க்கையில் பலர் அடுத்தவரோடு தம்மை ஒப்பிட்டுப் பார்த்து நாம் அவர்களை விட சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் நாம் நம்மிடம் இருப்பதை கொண்டு நிறைவு காண்பதில்லை. தொடக்க காலத்தில் இஸ்ரயேல் மக்கள் பலவிதமான அடிமைத்தனத்தில் சிக்குண்டு வாழ்ந்த போது அவர்களை மீட்டெடுக்கக்கூடிய பணியினை யாவே இறைவன் மனிதர்கள் வழியாக கையாண்டார். அவர்களை மீட்டெடுத்து வந்தபோது அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என அவர்களுக்கு நெறி முறைகளை கற்பிக்கிறார். ஆனால் மக்கள் கடவுளை மறந்தார்கள். தங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்தவரை மறந்து விட்டு மற்ற தெய்வங்கள் மீது நாட்டம் கொண்டு அவர்களோடு தங்களை ஒப்பிட்டு அவர்களின் பின்னே சென்றார்கள் தங்களின் இயல்பை, சுயத்தை மறந்து போனார்கள். அவர்களின் தவறை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக பல்வேறு தரப்பட்ட இறைவாக்கினர்களை கடவுள் அவர்களிடையே அனுப்பினார். மக்கள் அந்த இறைவாக்கினர்களின் வார்த்தைகளை கேட்டு மனம் மாறினார்கள். ஆனால் சில காலத்திற்கு பிறகு மீண்டும் அவர்கள் தவறான வழிகளைத் தேடிக் கொண்டு சென்றார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்பது போல இயேசுவை எப்படி பேச்சில் சிக்க வைக்கலாம் என ஒரு கூட்டம் அலைந்துகொண்டிருந்தது. அவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அவரை தங்களை விட உயர்ந்தவராக இருக்கிறார், தங்களை விட அறிவில் சிறந்தவனாக இருக்கிறார் அவரை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு அவரிடம் கேள்வி எழுப்பினார்கள், சீசருக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா? என்று கேட்க அவர்களின் உள்ளார்ந்த எண்ணத்தை அறிந்த இயேசு கிறிஸ்து," சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு கூறியதை கடவுளுக்கும் செலுத்துங்கள்", என கூறுகிறார். இன்று நாமும் அவ்வாறு தான் இருக்க அழைக்கப்படுகிறோம்.
நாணயத்தை செலுத்துபவர்களாக அல்ல, நம்மை நாம் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். ஒப்பிட்டுப் பார்ப்பது என்பது நல்லது தான். அதை நேர்மறையாக வைத்து கொள்ள வேண்டும். ஆனால் எப்போதும் எதிர்மறை எண்ணங்களோடு மற்றவரோடு நம்மை ஒப்பிட்டு நம்மையே நாம் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கின்றோமோ அத்தருணங்களை கடவுள் அறவே வெறுக்கின்றார். அத்தகைய நிலையில் இருந்து விடுபட இன்றைய வாசகங்கள் வழியாக நம்மை அழைக்கின்றார் என்பதை நாம் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்போது அவர்கள் இருப்பது போல் அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் . ஒப்பிட்டுப் பார்த்து பிறரோடு உங்களை ஒப்பிட்டுப் பார்த்து உங்களையே நீங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள் என்ற செய்தியை இறைவன் இன்றைய நாளில் நமக்கு வழங்குகிறார்! எப்படியாவது நம்மை சிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பலர் முயலும்போது அவர்களிடையே அறிவு தெளிவோடு விவேகம் கொண்டவர்களாக இருந்து இயேசுவைப்போல பணியாற்றி, நல்ல செயல்களை நாம் வாழும் இச்சமூகத்தில் செய்து விழிப்போடு வாழ்ந்திட இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கின்றார். தூய ஆவியானவரின் துணையை நமக்கு தந்திருக்கிறார்.இந்த தூய ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறார். இவர் நமக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கிறார் எனக் கூறுவது போல நாமும் ஆவியானவரின் செயல்பாடுகளை உணர்ந்தவர்களாக எப்போதும் விழிப்போடு இருந்து இலக்கை அடைய இயேசுவின் பாதையில் பயணப்பட தொடர்ந்து இயேசுவின் பின்னே பயணிப்போம்!
நாம் விழிப்போடு இருக்க தூய ஆவியாரே நமக்கு துணை! தூய ஆவியானவர் என் கரம் கோர்த்து நல்ல எண்ணங்களுடன் அனைவரையும் அரவணைத்து மகிழ்ச்சியாக வாழ்வோம்!
பதிலளிநீக்கு