சனி, 10 அக்டோபர், 2020

விருந்துக்கு வாருங்கள் ... (11.10.2020)


ஒரு குடும்பத்தில் மனைவியிடம் கணவன் தனது மதிய உணவை உண்ட பிறகு அவளின் உணவு அன்று மிக மிக அருமையாக இருந்ததாக தன் மனைவியை பாராட்டுகிறான். அந்த மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. நான் தினமும் சமையல் செய்வது போல தானே இன்றும் சாதாரணமாக சமையல் செய்துள்ளேன். இன்று சிறப்பாக தனது கணவன் தன்னை பாராட்டுவதன் காரணம் என்ன என்று சிந்திக்கத் துவங்கினாள். தனக்குள் விடைகாண முடியாதவளாய் தன் கணவனிடமே கேட்கிறாள். அப்போது அந்த கணவன் கூறுகிறான், இத்தனை நாட்களாக நான் அவசரம் அவசரமாக உனது உணவை விழுங்கினேன். அதனால் அதன் சுவை எனக்கு தெரியவில்லை. இன்று நமது வீட்டில் நிம்மதியாக அமர்ந்து நிதானமாக சாப்பிடுகின்ற வேளையில் உனது சமையலின் கைப்பக்குவத்தின் திறனை கண்டு கொண்டேன் என்று மனைவியை மீண்டும் பாராட்டினான்.


இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு திருமண விருந்து உவமையை குறிப்பிடுகிறார். அரசர் ஒருவர் திருமண விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். பலரையும் அழைக்கின்றார். ஆனால் அவர்கள் யாரும் விருந்திற்கு வரவில்லை. அதன் பிறகு அவர் வழியில் போவோர் வருவோர் என பலரை அழைக்கின்றார். அவர்களெல்லாம் விருந்துக்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுள் ஒருவர் திருமண ஆடையின்றி அமர்ந்திருக்கிறார். திருமண ஆடையின்றி வந்தவரை பார்த்து," நீ ஏன் திருமண ஆடை அணியவில்லை"? என்று கூறி அரசர் அவரை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்தக் கூறுகிறார். இந்த உவமையின் அடிப்படையில் இன்றைய நாளில் நமக்கு இறைவன் தரக் கூடிய செய்தியாக நாம் எதை எடுத்துக் கொள்வது என சிந்திக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன். 

இன்று நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் நம் ஒவ்வொருவருக்கும் திருமண விருந்துக்கு அரசர் ஏற்பாடு செய்தது போல இவ்வுலகத்தில் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதோடு ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து தம்மிடம் இருப்பதை அடுத்தவருடன் பகிர்ந்து கொண்டு தம்முடைய மகிழ்வில் அனைவரையும் இணைத்துக் கொள்ளக் கூடிய ஒரு பெரும் பங்கினை இறைவன் நமக்கு வாய்ப்பாக தந்திருக்கிறார். இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.

 நமது வீட்டில் நடக்கக்கூடிய ஒரு சுப நிகழ்வுக்கு நாம் மிகவும் உயர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். ஆனால் அதே சமயம் நம்முடைய அருகாமையில் நமக்குத் தெரிந்த பல ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோமா?  என்ற கேள்வியை இன்றைய நாளில் நாம் நமக்குள் எழுப்பிப் பார்க்க அழைக்கப்படுகிறோம். 
விருந்து ஒன்று தருவதற்கு வீதி வந்து அழைக்கிறார்...
விரைந்து வாரும் ஏழை நண்பரே .... 
என்ற பாடல் வரிகளை நாம் பல நேரங்களில் பாடுகிறோம். நாம் நமது வாழ்க்கையில் நாம் ஏற்பாடு செய்யக் கூடிய விருந்து என்பது யாருக்காக எந்த நோக்கத்தின் அடிப்படையில் அமைகிறது என சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஒருவேளை நாம் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களாக இருக்கும்போது நாம் விருந்து நடக்கக்கூடிய இடத்திற்கு எவ்வாறு செல்கிறோம்? முதன்மையான இடத்தை நோக்கிய வண்ணமாக செல்கிறோமா? அல்லது அவர்களின் மகிழ்வில் நம்மையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு செல்கிறோமா? 
கானாவூர் திருமணத்தில் அன்னை மரியாவும் இயேசுவும்  திருமண வீட்டிற்கு சென்றார்கள். அங்கு விருந்தில் இரசம் பற்றாக்குறை ஆனபோது அவருடைய குடும்பத்தில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட கூடியவர்களாகத்தான் இயேசுவும் மரியாவும் இருந்தார்களே தவிர முதன்மையான இடம் எது என்பதை பார்த்து அமர்ந்து உண்டு குடித்துக் கொண்டிருக்க கூடியவர்களாக அவர்கள் இல்லை.   நாம் ஒரு விருந்துக்கு அழைக்கப்படுவது என்பது அவர்கள் மகிழ்வில் கலந்து கொள்ளவும் அவருடைய துன்பங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதற்காவும் தான்‌. ஆனால் நாம் அவ்வாறு இருக்கின்றோமா? என சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். 

ஒருவேளை விருந்துக்கு  அழைக்கப்பட்டவர்களாக இருந்தும் அழைப்பின் குரலை உணராதவர்களாக இருக்கும் போது கடவுள் மீண்டும் பலவிதமான வாய்ப்புகளை நமக்கு உருவாக்கித்தருகிறார். அதைத்தான் வழியில் செல்வோர், போவோர் வருவோர்,  எனக் காண்போர் அனைவரையும் அழைப்பதாக பொருள் கொள்ளலாம். அவ்வாறு அழைக்கப்படக் கூடியவர்களாக நாமும் சில நேரங்களில் இருக்கலாம். அப்படி நாம் செல்லும் போது எந்த நல்ல பண்பினை அவர்களுக்கு விட்டுச் செல்கிறோம் என்பதை இன்றைய நாளில் சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இந்த திருமண விருந்து உவமையில் கூட பலர் அழைக்கப்பட்டார்கள். அழைக்கப்பட்டவர்கள் சென்றார்கள். சென்றவர்கள் எல்லோருக்கும் திருமண ஆடை இருந்தது. ஆனால் ஒருவன் திருமண   ஆடையின்றி இருந்தான். அவனை அவ்விடத்தை விட்டு அப்புறப்படுத்த ஆணையிடுகிறார். பிறகு அந்த அரசன் ஏன் அவரை  அழைக்க வேண்டும்?  என எண்ணலாம்! ஆனால் யூத மரபு படி திருமண நிகழ்வு என்றால் அந்த காலத்தில் திருமண வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக அவர்களுக்கு திருமண ஆடையானது கொடுக்கப்படும். அந்தத் திருமண ஆடையை கூட வாங்கி அணிந்து கொள்ளாதவர்களாய், அவர்கள் இருந்தார்கள்.
நாம் அதுபோன்ற இடத்திற்குச் செல்லும்போது நாம் நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்கிறோமா? என்பதை சிந்தித்துப் பார்ப்போம். ‌அழைக்கக்கூடிய இறைவன் இந்த பரந்த உலகத்தில் நாமக்கு  பலவிதமான வாய்ப்புகள் தந்திருக்கிறார். வாய்ப்புகளை பயன்படுத்துகிறோமா? அல்லது எதிர்பாராத நேரங்களில் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை பயனுள்ள  விதத்தில் அமைத்துக் கொள்கிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.

இன்றைய முதல் வாசகத்தில் கூட கடவுள் விருந்து தருவதாக எசாயா இறைவாக்கினர் குறிப்பிடுகிறார். தொடக்க காலத்திலிருந்தே  ஏழைகளாக ஒடுக்கப்பட்டவராக இருந்த இஸ்ரேல் மக்களை கடவுள் தேடி எடுத்து அவர்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்து பலவிதமான இன்னல்களில் இருந்து அவர்களைக் காத்து வழிநடத்தி வந்தார்‌ . திருமணத்திற்கு அழைக்கப்பட்டு வராமல் இருந்தவர்கள் போல இஸ்ரயேல் மக்களும் கடவுளின் அழைப்பையும் அவருடைய உடனிருப்பையும் புரிந்து கொள்ளாமல் அவரை விட்டு விலகி பல நேரங்களில் சென்றார்கள் என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறியலாம்.
 இருந்தாலும் கடவுள் விட்டுவிடவில்லை.   மீண்டும் அழைத்தார். அதை தான் திருமண விருந்து உவமையிலும் அழைத்தவர்கள் வராவிட்டாலும் பரவாயில்லை. மீண்டும் சென்று காண்போரை எல்லாம் அழைத்து வாருங்கள் எனக் கூறக்கூடிய அரசராக நாம் இங்கு இறைவனை காணலாம். அழைக்கப்பட்டவர்கள் தவறான பாதைக்கு செல்லக்கூடிய நேரங்களில் அவர்களை நல்வழிப்படுத்த எண்ணுகின்றார். நாமும் அவ்வாறு அழைக்கப்பட்ட இறைவன் குரலுக்கு செவி கொடுத்து செல்லும் போது நம்மை தகுதி உள்ளவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் .
அவ்வாறு மாற்றிக் கொள்ளவில்லை என்றால் நாமும் அன்று திருமண ஆடை இல்லாமல் ஒருவன் அப்புறப்படுத்தப்பட்டது போல நாமும் அப்புறப்படுத்தப்பட கூடியவர்களாக மாற நேரிடலாம்.  நமது வாழ்வை நல் வாழ்வாக அமைத்துக் கொள்ள இறைவன் தரக்கூடிய விருந்தில் இன்முகத்தோடு தகுதி உள்ளவர்களாக பங்கெடுக்க  இன்றைய நாள் வாசகங்கள்  நமக்கு அழைப்புத் தருகின்றன.  அழைக்கும் இறைவனின் குரலினிலுக்கு செவிகொடுக்க கூடியவர்களாக நாம் இருக்கலாம். ஆனால் குரலுக்கு செவி கொடுப்பது மட்டும் முக்கியமல்ல. அதற்கு தகுதியுடையவர்களாக மாற்றிக்கொள்ளவேண்டும். தகுதியுடையவர்களாக மாற்றிக்கொண்டு ஆண்டவரின்  விருந்தில் பங்கேற்க செல்வோம் வாருங்கள்!

2 கருத்துகள்:

  1. ஆண்டவரின் அழைப்பிற்கு ஆர்வத்தோடு செவிமடுத்து அவரின் பிள்ளைகள் அனைவரும் இணைந்து அன்புடனே விருந்தில் பங்கேற்போம்!

    பதிலளிநீக்கு
  2. உங்களுடைய சிந்தனை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...