திங்கள், 26 அக்டோபர், 2020

எப்படி இறையாட்சி மலரும்? (27.10.2020)

இறைவன் இயேசுவின் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!
இன்றைய வாசகங்களின் வழியாக இறைவார்த்தையை பகிர்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.


சரியான பெண்ணைத் / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் காதலர் தினம் தான்!

தவறான பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் தியாகிகள் தினம் தான்!

சோம்பேறி பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால்? தினமும் உழைப்பாளிகள் தினம் தான்!

பணக்கார பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் புத்தாண்டு தினம் தான்!

மூளை சரியில்லாத பெண்ணை  / ஆணைத் திருமணம் செய்தால் தினமும் குழந்தைகள் தினம் தான்!

         இன்றைய முதல் வாசகத்தில் வழியாக இரண்டு மனங்கள் இணையும் திருமணத்தை திருஅவைவுடன் புனித பவுல் இணைத்து கூறுகிறார். திருமணம் புதிய உறவுகள் சங்கமிக்கும் இடம். ஒருவருக்காக இன்னொருவர் வாழ்வதாக உறுதி கூறி இறுதிவரை இணைந்து வாழக்கூடிய ஒரு புனிதமான உறவு தொடங்குமிடம்.  இந்த புனிதமான திருமண சடங்கில் ஒருவருக்கொருவர் வாக்குறுதிகள் வாயிலாக பணிந்து இருக்கவும் இணைந்து இருக்கவும் வாக்களிக்கின்றனர்.  இந்த மகத்துவமான உறவில் காணப்படக்கூடிய பணிந்து இரத்தலும் இணைந்திருந்தாலும் திருஅவை யோடு இருக்க வேண்டும் என்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு விளக்குகின்றன.  

மேலும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இறையாட்சியை மிகச்சிறிய கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் இயேசு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
இந்தச் சிறிய பொருட்கள் வழியாக நாம் கற்றுக் கொள்ளக்கூடிய பாடமானது இறையாட்சிக்கு வழிவகுக்கக் கூடியது.  திருஅவையோடு இணைந்திருப்பதும் பணிந்திருப்பதும் திருஅவையோடு இணைந்து அது காட்டக்கூடிய வழிமுறைகளின்படி தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்வதும் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்வதற்கான வழிமுறைகள் என்பதை இன்றைய வாசகங்கள் வழியாக நாம் உணரலாம்.
   
 இறையாட்சி புளிப்பு மாவுக்குஒப்பாகும் என்று குறிப்பிடுவதன் வழியாக சிறிதளவு மாவானது மிகப் பெரிய அளவில் புளிப்பேற்றுவதுப் போல திருஅவை என்ற ஒன்றோடு இணைந்து இருக்கக்கூடிய நாம் அனைவரும் இறைவன் விரும்பக்கூடிய இறையாட்சி இம்மண்ணில் மலர்வதற்கான கருவிகளாக நமது செயல்களையும் சொல்லையும் அமைத்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.  திருமணத்தின் வழியாக உறவுகள் இணைவது போல திருஅவை வழியாக ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ நாம் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.  

ஆனால் இன்று நாம் வாழக்கூடிய சூழ்நிலையை சற்று ஆழமாக சிந்தித்துப் பார்க்கும்போது மதத்தின் வாயிலாக நாம் பெரும்பாலும் பிரிந்து நிற்கிறோம்.  இன்று கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ளாகவே பலவிதமான பிரிவுகளை கொண்டிருக்கிறார்கள்.    இந்தப் பிரிவுகள் பெரும்பாலும் பணத்தின் அடிப்படையில் எழுகின்றன. இன்னும் சில பிரிவுகள் கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் உதயமாகின்றன. சிலர் இறையாட்சி பணியை இம்மண்ணில் செய்வதை வியாபாரமாக்க கூடியவர்களாக மாறியுள்ளனர். கடந்த 2000 ஆண்டுகளை திருப்பிப் பார்க்கும் பொழுது கிறிஸ்தவ மதத்தில் பல விதமான பிரிவுகளும் பிரிவினை சபைகளும் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன.  நகைச்சுவையாக கூறுவார்கள் எத்தனை திருஅவை கிறிஸ்தவத்தில் இருக்கிறது என்பது தூய ஆவியானவருக்கு தெரியாத ஒன்று எனக் கூறுவார்கள். கடந்த பல வருடங்களாகவே நாம் நம்மிடையே கருத்து வேறுபாடுகள் பிளவுகள் மனக்கசப்புகள் காரணமாக தனித்தனியே பிரிந்து சென்று ஜெபிக்க கூடியவர்களாக மாறிக் கொண்டே வருகிறோம்.   பல பன்னாட்டு நிறுவனங்கள் இதுபோன்ற சபைகளை ஊக்குவித்து வருகின்றது என்பது பலரும் அறியாத மறைமுக அரசியலாகவே இருந்து கொண்டிருக்கிறது.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற வார்த்தைகளின் அடிப்படையில் நாம் அனைவரும் ஒரே தந்தையின் பிள்ளைகள் என இயேசு நமக்கு கற்பித்தார். பிள்ளைகளிடையே சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ளவும் அல்லது ஒருவர் கருத்தை மற்றவர் மதிக்கும் அவர்களை ஏற்றுக் கொள்ளவும் நாம் இன்று தவறிப்போய் பிளவுகள், கருத்து வேறுபாடுகள் உதயமானால் பிரிந்து வாழ்வதே இன்பம் என்று எண்ணக்கூடியவர்களாக மாறி வருகிறோம். ஆனால் பெயரளவில் பிரிந்துபோன சகோதரர்களுக்காக நாம் இறைவனிடத்தில் ஜெபிக்கிறோம். கருத்து வேறுபாடுகளுடன் வாழக்கூடியவர்களுக்காக இறைவனிடத்தில் ஜெபிக்கிறோம். ஆனால் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், வெறும் வார்த்தைகளால் மட்டும் இறைவனிடம் வேண்டுவதால் எந்தவித மாற்றமும் இல்லை என்பதை இன்றைய நாளில் நாம் உணர்ந்து ஒருவர் மற்றவரோடு இணைந்து பணிந்து வாழ நாம் அழைக்கப்படுகிறோம். இவ்வாறு நாம் வாழும் போதுதான் இறையாட்சியை இம்மண்ணில் நம்மால் மலரச் செய்ய இயலும்.  இல்லையேல் இறையாட்சி என்பது எப்போதும் பேசும் பொருளாக மட்டுமே இருந்து கொண்டே இருக்கும் அது செயலாகாது. இறையாட்சி இம்மண்ணில் உருவாகுவது நம்முடைய சிறுசிறு செயல்களாலும், தியாகத்தாலும், அன்பாலும், பணிவாலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள நாம் அனைவரும் இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம் .


முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!

முடியுமா? என்று கேட்பது அவநம்பிக்கை!

முடியும் என்று சொல்வது
தன்னம்பிக்கை.
        
                எனவே இன்றைய நாளில் புனித பவுலின் வார்த்தைகளின் அடிப்படையில் இயேசுவின் இறையாட்சி கனவை இம்மண்ணில் நனவாக்கிட ஒருவர் மற்றவரோடு இணைந்தும் பணிந்தும் இறையாட்சியின் உண்மைத்தன்மையை இந்த உலகத்தில் மலரச் செய்ய உண்மையான இறையாட்சி பணியாற்றும் சீடர்களாக இயேசுவை பின் தொடர்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...