வியாழன், 15 அக்டோபர், 2020

STAND WITH FR. STAN

அன்புக்குரிய நண்பர்களே! வணக்கம்! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்தியானது பரவலாக பலரால் பேசப்படுகிறது.

 சமீபகாலமாக  STAND WITH FR. STAN என்ற வார்த்தையானது அதிகம் பலரால் பேசப்படுகிறது. அதாவது அருள் தந்தை ஸ்டேன் உடன் துணை நிற்போம்  என்ற வாசகமானது இணைய தளத்திலும் பல இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. 

யார் இந்த அருள் தந்தை ஸ்டேன் என்று பார்க்கும் பொழுது, இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடிக்கு அருகில் இருக்கக்கூடிய விரகாலூர் என்ற ஊரைச் சேர்ந்தவர். இவர் ஒரு இயேசு சபை அருள்பணியாளர். இவர் தன்னுடைய படிப்பை தூய வளனார் கல்லூரியிலும் அதன் பிறகு திண்டுக்கல் பெஸ்கி கல்லூரியிலும் தன்னுடைய படிப்புகளை எல்லாம் நிறைவு செய்து இயேசு சபை அருள்பணியாளராக திருப்பொழிவு செய்யப்பட்டவர். 83 வயதான இவர் குருத்துவ வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கக்கூடியவர். 

இவர் தன்னுடைய பணிவாழ்வில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆதிவாசி பழங்குடியின மக்களின் நலனுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்க கூடியவர். ஆள்வோரின் செயல்பாடுகள் ஆதிவாசிகளின் நிலத்தை ஆக்கிரமிப்பார்களுக்கும் அப்பகுதியில் இருந்த இயற்கை வளங்களைச் சுரண்டுபவர்களுக்கும் துணை போவதால் ஆதிவாசி மக்களின் நில உரிமையை தக்கவைக்கவும் அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு சட்டங்கள் வழங்கும் பாதுகாப்ப அடிப்படையாகக் கொண்டு பணி செய்து வந்தவர் .

இத்தகைய அருள்தந்தையும் அவருடன் சேர்த்து 15 நபர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பாக - நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி என்ற அமைப்பானது  கைது (08.10.2020) செய்திருக்கிறது. இந்த நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி அமைப்பினை சுருக்கமாக NIA என்று குறிப்பிடுவார்கள்.
 இதன் தலைமையிடம் மும்பையில் இருக்கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய இந்த  அமைப்பானது உள்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய அமித்ஷா அவர்களுடைய  கட்டுப்பாட்டிற்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இந்த அருள் தந்தை மீது பல விதமான பொய் வழக்குகளின் அடிப்படையில் இவரை கைது செய்து மும்பையில் இருக்கக்கூடிய சிறையில் அடைத்திருக்கிறார்கள். இந்த அருள் தந்தைக்கு ஆதரவாக துணை நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று பல இடங்களில் பலர் இவருக்காக அமைதி வழி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

ஒரு சமூகத்தில் அநீதி இழைக்கப்படும் போது அதை தட்டிக்கேட்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. ஆனால் சூழல் காரணமாக அனைவரும் தட்டிக் கேட்க முன்வருவதில்லை.  எங்கேனும் யாராவது ஒருவர் அத்தகைய முயற்சியில் ஈடுபடுகிறார் என்றால் அவர்களின் சார்பாக நின்று அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அதனடிப்படையில் ஆதிவாசி பழங்குடியின மக்களின் சார்பாக  30 ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்த தந்தை ஸ்டேன் அவர்களின் கைதை எதிர்த்து  அவருடன் துணை நிற்க நாம் அனைவரும் நம்மால் முடிந்த வழிகளில் அழைக்கப் படுகிறோம். 

இன்று நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் மத்தியில் இணையவழியில் நமது எதிர்ப்புகளை தெரிவிக்கவும், தந்தை அவர்களுக்காக  முன்னெடுக்கக் கூடிய அமைதிவழிப் போராட்டங்களில் நம்மால் முடிந்தால் பங்கெடுத்து நமது உடனிருப்பை தெரிவிக்க  நாம் அனைவரும் முன்வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

நிகழக்கூடிய இந்த சூழ்நிலையில் இவர் ஒரு அருள்தந்தை, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர் என கருதாது,   மக்களின் நலனுக்காக குரல் கொடுத்தவர் என்ற இவரின் மனித நேய செயல்களை முன்னிறுத்தி தந்தை அவர்களுக்கு துணையாக சிறை கதவுகள் திறக்கப்படும் வரை  அரசின் கதவுகளை தட்டி கொண்டிருக்கவும் மனிதநேய முறையில் அருள்தந்தை அவர்களுக்கு துணை நிற்கவும் முயலுவோம்.

2 கருத்துகள்:

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...