இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஒரு பெண்மணி தன்னுடைய பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசுகளை கடவுளுக்காக கொடுத்ததை புகழ்ந்து பேசுகிறார்.
இருப்பதில் கொடுப்பவர்கள் பலர். ஆனால் இருப்பதையே கொடுப்பவர்கள் சிலர் மட்டுமே.
இருப்பதில் கொடுப்பது என்பது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய செயலாக இருக்கிறது. நான் பல இடங்களில் பார்த்திருக்கிறேன், என்னுடைய உறவுகள் எனக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
சிறு வயது முதலே யாரேனும் ஒருவர் யாசகம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்து நின்றால் கையில் சில தொகையினை கொடுத்து அவரிடம் சென்று கொடுங்கள் என்று கூறுவார்கள். சென்று கொடுத்திருக்கிறேன். பல இடங்களில் பார்த்திருக்கிறேன் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கையில் ஒரு சிறு தொகையை கொடுத்து அதை யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கச் சொல்வார்கள். அவர்களும் சென்று கொடுத்துவிட்டு வருவார்கள்.
பல நேரங்களில் ஆலயத்திற்குச் செல்லும்போது கூட பல பெற்றோர்கள் குழந்தைகள் கையில் ஒரு சிறிய அளவு தொகையை கொடுத்து, இதை உண்டியலில் போடு எனக் கூறுவார்கள்.
காணிக்கையாக கொடுப்பது அனைத்ததையுமே இல்லாத ஒருவருக்கு கடவுளின் பணியாளர்களாக இருக்கக்கூடியவர்கள் அதனை பெற்று கொண்டுபோய் சேர்க்கக்கூடிய பணியை செய்கிறார்கள் என்பது முற்றிலும் யதார்த்தமான உண்மை.
ஆனால் ஏன் பெற்றோர்கள் குழந்தைகளின் கையில் பணத்தை, சிறிய அளவு தொகையை கொடுத்து நீ கொண்டு போய்க் கொடுத்து விட்டு வா என சொல்வதும், நீ சென்று உண்டியலில் போடு என சொல்வதும் ஏன்? என்ற கேள்வியை எழுப்பி பார்க்கும் பொழுது, அதில் தான் நம்முடைய பெற்றோரின் வாழ்க்கை பாடத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
அடுத்தவனுக்கு உதவி செய்து நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து வாழ்வோம் என்ற பாடத்தை, ஒவ்வொரு நாளும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு செயல்களின் வழியாக வாழ்க்கை பாடத்தை கற்பிக்கிறார்கள்.
பொதுவாகவே அடுத்தவருக்கு நம்மிடம் இருப்பதை பகிர்ந்து கொண்டு வாழ வேண்டும் என அனைத்து மதங்களும் கூறுகின்றன. நாமும் நமது வாழ்வில் நம்மிடம் இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழுகிறோம். எதுவுமே இல்லை, இச்சமூகத்தில் இவன் மிகவும் நசுக்கப்பட்ட ஏழை எளியவர் எனச் சொல்ல படக் கூடியவர்வர்களும் அவரிடம் யாரேனும் ஒருவர் யாசகம் என கை நீட்டும் பொழுது அவருக்கு கொடுக்கக்கூடிய ஒரு பண்பினைப் பார்க்க முடிகிறது.
இருப்பதில் பகிரக் கூடிய மக்களாக நாம் இருக்கிறோம். ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன்னிடம் இருப்பதையே பகிர்ந்த ஒரு பெண்மணியை இயேசு சுட்டிக்காட்டி, அப்பெண்மணியின் ஆழமான நம்பிக்கையை எடுத்துரைக்கிறார். இருப்பதில் பகிரும் போது நம்முடைய தேவைக்கு சில பொருள் நம்மிடம் இருக்கிறது. அதை வைத்து நமது வாழ்வை பார்த்துக் கொள்வோம். ஆனால் இருப்பதையும் பகிரும்போது அடுத்த தேவைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என்ற கேள்வியும் எழுகிறது. அக்கேள்விக்கான விடையாக இயேசு கூறுவது, அப்பெண்ணின் நம்பிக்கை. அப்பெண்மணி தன் பிழைப்புக்காக வைத்திருந்த இரண்டு செப்புக் காசையும் போட்டார் என்ற செய்தி அழுத்தம் தரப்படுகிறது. பிழைப்புக்காக வைத்திருந்ததையும் கொடுத்தார். அதன் அடிப்படை நோக்கம், கடவுள் நம்மை பார்த்துக் கொள்வார். நாம் அடுத்தவருக்கு தருகிறோம் கடவுள் நம்மை அடுத்தவர் வழியாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையின் உச்சம் என அதனை பொருள் கொள்ளலாம். நாம் இருப்பதையே பகிரக் கூடியவர்களாக இச்சமூகத்தில் வாழ்கிறோமா? என்ற கேள்வியை எழுப்பினால், பெரும்பாலும் இருப்பதில் இருந்து பகிரக்கூடியவர்களாகத் தான் நாம் இவ்வுலகத்தில் இருப்போம். அதில் எந்தவித தவறும் அல்ல. ஆனால் இருப்பதிலிருந்து கூட அடுத்தவரோடு பகிராமல், எப்போதும் தான் உண்டு, தன் குடும்பம், தனது உறவுகள் என்ற ஒரு வட்டத்திற்குள் மட்டுமாக நாம் இருந்துகொண்டே இருப்போமாயின், அடுத்தவர் நலனில் அக்கறை கொள்ளாமல், அடுத்தவரின் தேவையை நிவர்த்தி செய்யாமல், நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிராமல் நாம் வாழ்கிறோம் என்றால், நம் வாழ்வுக்கு அர்த்தம் இல்லை.
எப்போதும் இருப்பதை அடுத்தவரோடு பகிர்வோம். என்னிடம் கொடுப்பதற்கு பொருள் இல்லை என பலர் கூறுவார்கள். பகிரப்பட வேண்டியது பொருள் மட்டுமல்ல. அன்பான வார்த்தைகளும்,ஆறுதலாக உடனிருப்பும் தான். நம்மிடம் இருப்பதை நாம் பகிர வேண்டும். நாம் பகிர வேண்டும் என்றால் பொருளாதாரம் நம்மிடம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களிடம் நேரம் இருக்கிறது உங்கள் நேரத்தை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் நேரத்தை கடவுளோடு செலவிடுங்கள். அதுவே நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய காணிக்கையாக இருக்கிறது.
இன்று ஆலயத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆலயத்திற்கு எதற்கு வரவேண்டும்? வீடுகளில் அமர்ந்த வண்ணமே தொலைக்காட்சியில் திருப்பலி பார்த்துக் கொள்ளலாமே! சில நாட்களாக நாங்கள் அப்படித்தான் இருந்தோம் என்று எதார்த்தமாக கூறக்கூடியவர்கள் இன்று ஏராளம். ஆனால் ஆலயங்கள் எதற்காக உருவாகின?
பரபரப்பான இவ்வுலகத்தில் ஓடியாடி அழைந்து கொண்டிருக்க கூடிய மனிதன் சற்று அமைதியில் அமர்ந்து தங்களுடைய செயல்பாடுகளை சிந்தித்துப் பார்த்து, தெரிந்தும் தெரியாமலும் தான் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி அவன் தன் வாழ்வை சரிசெய்துகொண்டு, அடுத்தவரை அன்போடு நோக்கவும், அன்போடு தம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும் வழி வகுக்க வேண்டும். அப்பாடத்தை ஒவ்வொரு நாளும் அவனுக்கு கற்பிக்க வேண்டும். அப்பாடத்தை அவன் உள்வாங்கிக்கொள்ள வேண்டும். ஆறுதலற்று இருக்கக் கூடியவர் ஆறுதல் பெற வேண்டும். இது போன்ற பல நல்ல காரியங்களுக்கு பிறப்பிடமாக அமைந்திருப்பது தான் ஆலயங்கள். இந்த ஆலயங்களில் அமர்ந்து ஜெபிப்பது என்பதும், தொலைக்காட்சியில் ஒரு திருப்பலியை பார்த்து ஜெபிப்பது என்பதும் எந்த ஒரு காலத்திலும் இணையாகாது. ஆலயத்திற்குச் செல்லும்போது பல நபர்களை சந்திக்கிறோம். நாம் பெற்றுக்கொண்ட அமைதியை அடுத்தவரோடு பகிர்கிறோம். நம் ஆண்டவர் இயேசுவின் கல்வாரி திருப்பலியில் அவருடைய பாடுகளில் நினைவு கூர்கிறோம். அவரின் பாடுகளில் அவருடைய வாழ்க்கையில் இருந்து, நமது வாழ்வு காண பாடத்தை கற்றுக்கொண்டுச் செல்கிறோம்.
அன்புக்குரியவர்களே,! இருப்பதை பகிரவும், இருப்பதிலிருந்து பகிரவும் இன்று நாம் அழைக்கப்படுகிறோம். நாம் பகிர்வதற்கு நம்மிடம் பொருள் இல்லை என சாக்குபோக்கு சொல்லுவதை விட்டு விட்டு, நம்மிடம் இருக்கக்கூடிய ஆறுதலான வார்த்தைகளை, நம்மிடம் இருக்கக்கூடிய அன்பான செயல்பாடுகளை, நம்மிடம் இருக்கக்கூடிய நல்ல பண்புகளை, மற்றவரோடு பகிர்ந்து கொள்வோம்.
இறைவன் இயேசுவோடு நமது நேரத்தை பகிர்ந்து கொள்வோம். அவரோடு உறவாடுவோம் உரையாடுவோம். இருப்பதை முழுமையா நாம் பகிரா விட்டாலும் இருப்பதிலிருந்து பகிர்ந்துகொள்ள இன்றைய நாளில் பாடம் கற்போம்.
இருப்பதையே பகிர்ந்த அந்த பெண்மணியிடம் காணப்பட்ட நம்பிக்கையை நம்முடைய நம்பிக்கைகளாக மாற்றிக் கொண்டு, நமது வாழ்வை இயேசுவின் பாதையில் அழகாக்கிக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம்!
தன்னலமில்லாத மனிதரின் நெஞ்சில் கடவுள் இருக்கின்றார்.
நல்ல தர்மம் செய்பவரின் கைகளில் கர்ணன் சிரிக்கின்றான்.
கொடுத்தவன் எல்லாம் சரித்திரத்தோடு சரித்திரமாகின்றான்.
அடுத்தவன் எல்லாம் தெருப்புழு போல கரிப்புகையாகின்றான்.
என்ற நம்ம ஊர் பாட்டுக்காரனின் நயமான வார்த்தைகளின் அடிப்படையில், நம்மிடம் இருப்பதை அடுத்தவரோடு பகிர முயலுவோம். நமது குடும்பத்தில் நமது குழந்தைகளுக்கு நாம் அப்பண்பினை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவர்களாக இருந்தால் தொடர்ந்து அந்த பண்பை கற்றுக் கொடுப்போம். ஒருவேளை நமது குடும்பத்தில் அத்தகைய அடுத்தவருக்கு உதவி செய் என்ற பாடத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்து நாம் தவறி இருந்தால் இன்றைய நாளில் நமது குழந்தைகளுக்கு அந்த பாடத்தை கற்றுக் கொடுக்க துவங்குவோம்.
ஏனென்றால் மனிதன் என்பவன் ஒருவரோடு ஒருவர் தொடர்போடு இச்சமூகத்தில் வாழுகின்றான். நாம் அடுத்தவரோடு இணைந்து வாழவே இவ்வுலகத்தில் படைக்கப்பட்டிருக்கிறோம். தனித்து வாழ அல்ல. எதையும் தனக்கென வைத்துக் கொள்வதைவிட, அடுத்தவருக்கும் அது உரியது என்ற எண்ணத்தோடு இருப்பதை அடுத்தவரோடு பகிர்ந்து அடுத்தவரின் மகிழ்வில் இன்பம் காணக் கூடிய நல்ல மனிதர்களாக உருவாக இறையருளை வேண்டி இணைந்து, இயேசுவின் பாதையில் பயணம் செய்வோம்.
இருப்பதையே கொடுக்காவிட்டாலும் இருப்பதிலிருந்து கொடுப்போம்! இயேசுவுக்காக கொடுப்போம்!
பதிலளிநீக்கு