செவ்வாய், 24 நவம்பர், 2020

துன்பமின்றி இன்பம் இல்லை! (25.11.2020)

துன்பமின்றி இன்பம் இல்லை! 
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
இன்றைய முதல் வாசகமானது திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

  இறுதி நாளின் போது மக்களை ஒடுக்கி மக்களை அடக்கி தங்களுக்கு கீழாக நினைத்து அவர்கள் மீது அதிகமான வரிச்சுமையையும் இதர சுமைகளையும் சுமத்திய பல ஆட்சியாளர்களையும், பல அடிமைத்தனத்தை சிரமேற்கொண்டு செயல்பட்ட பலரையும், இறைவன் பயிர்களை அறுவடை செய்வது போல அறுவடை செய்து வெற்றி கண்டார். அவ்வெற்றியின் அடிப்படையில் வானவர் தூதர் அணிகள் அனைவரும் இணைந்து இறைவனுக்கு புகழ் பாடிய நிகழ்வினை இன்றைய முதல் வாசகத்தின் வழியாக நாம் வாசிக்கின்றோம்.


 இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு தரக்கூடிய செய்தி என்னவென்று பார்க்கும் பொழுது,  கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன். உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது எனக் கூறுவதற்கு ஏற்ப, நம் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் நாவன்மையையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது குறித்து சிந்திக்க இன்றைய வாசகங்கள் நமக்கு அழைப்பு தருகின்றன.

 கடவுள் கொடுத்த ஞானமும் நாவன்மையும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதற்கும் எது மக்களுக்குத் தீயது என சிந்தித்து ஞானத்தோடு அதனை கண்டுகொண்டு, அச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கும், அச்செயல்களில்   யாரேனும் ஒருவர் ஈடுபடுகிறார் என்றால் அவர் செய்கின்ற செயல் தவறு எனச் சுட்டிக் காட்டுவதற்கும் தான், இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஞானத்தையும் நாவன்மையையும் கொடுத்திருக்கிறார். ஆனால் நாம் வாழக்கூடிய இந்த உலகத்தில் இதனை உணர்ந்து கொள்ளாமல், பல நேரங்களில் நம்முடைய ஞானத்தையும் நாவன்மையையும், ஆட்சியாளர்களுக்கும் அதிகாரம் செய்யக்கூடியவர்களுக்கும் சார்பாக, அவர்களை புகழ்வதிலும், அவர்களை புகழ்ந்து பேசி அதிலிருந்து கிடைக்கக் கூடிய, அவர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய வெகுமதியில் நமது வாழ்வை நகர்த்தக் கூடியவர்களுமாக இதுவே முன்மதி என சொல்லிக் கொள்ளக் கூடியவர்களுமாக நாம் இருக்கிறோம்.  நாம் செய்கின்ற இத்தவறான செயல்களை நியாயப் படுத்துவதற்கும் இறைவன் கொடுத்த நாவன்மையை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் நாம் உண்மையாகவே இயேசுவின் விழுமியங்களின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வோமாயின் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கக் கூடியவர்களாகவும் அநீதச் செயலில் ஈடுபடக்  கூடியவர்களின் செயல்பாடுகளை குற்றம் எனக் கூறி, சுட்டிக் காட்டக் கூடிய உண்மையான இறைவாக்கினர்களாக இருப்போம். அப்படிப்பட்ட இறைவாக்கினர்களாக நாம் இருக்கும்போது, இன்றைய வாசகத்தில் இடம் பெறுவது போல பெற்றோர் சகோதர சகோதரிகள் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் நம்மை வெறுப்பார்கள். நாம் இயேசுவின் விழுமியங்களின்படி வாழ்கிறோம் என்பதால், அதன் பொருட்டு எல்லோரும் நம்மை வெறுப்பார்கள். இருப்பினும் இறைவன் கூறுகிறார், நமது தலைமுடி ஒன்று கூட விழவே விழாது என்று. தலை முடி ஒன்று கூட விழவே விழாது என்பது வெறுமனே முடியைக் குறித்தது அல்ல. நீங்கள் செய்யக்கூடிய இந்த நல்ல செயல்களால் நீங்கள் துன்பங்களை சந்திக்கிறீர்களென்றால் அந்த துன்பங்களிலிருந்து இறைவன் உங்களுக்கு ஆறுதலைத் தருவார். அத்துன்பங்கள் வழியாக நீங்கள் இச்சமூகத்தின் நீதி நிலைத்திட, நீதி தழைத்தோங்கிட முயலுகிறீர்கள் என்றால், கடவுள் உங்களை நோக்குகின்றார். உங்கள் துயரங்களை அவர் மாற்றுவார். இறுதி நாளின் போது அவர் உங்களுக்கு வெற்றிவாகையை சூடுவார். அப்போது    நாமும் வானதூதர்களோடு இணைந்து ஆண்டவரைப் புகழ்ந்து  பாடுவோம். இறைவன் கொடுக்கக்கூடிய ஞானத்தையும் நம் நாவன்மையையும் நமது நலனுக்காக பயன்படுத்துவதை விட அடுத்தவரின் நலனுக்காகவும் அநீதி இழைக்கப்படக் கூடிய இடங்களில் அவ்வநீதியை  எதிர்க்க கூடியவர்களாகவும் அநீதச் செயலில் ஈடுபடுபவர்களை சுட்டிக்காட்டி அவர்கள் மனமாற்றம் பெறுவதற்கு, நாம் வழிவகுத்து தரக்கூடிய நல்ல இறைவாக்கினர்களாக உருவாகிட இன்றைய வாசகங்கள் வழியாக இறைவன் நம்மை அழைக்கின்றார். இம்மண்ணில் உள்ள ஒவ்வொருவருக்கும் இறைவன் அபரிமிதமான ஞானத்தையும் நாவன்மையையும் தந்திருக்கிறார். அதனை உணர்ந்து கொண்டவர்களாக சமூகத்தில் நடக்கும் அவலங்களை எல்லாம் எதிர்க்கவும், சமூகத்தில்  நடக்கக்கூடிய அவலங்களை எல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடிய உண்மையான இறைவாக்கினர்களாக இவ்வுலகத்தில் வாழ்ந்து இறைவனை நோக்கி பயணிக்க உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

1 கருத்து:

  1. இறைவன் நமக்கு கொடுத்திருக்கும் ஞானத்தையும் நாவன்மையையும் நன்மையான காரியங்களுக்காக பயன்படுத்துவோம்! நமது வார்த்தைகளும் செயல்பாடுகளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு வாழ்வு கொடுப்பதாக அமையட்டும்! என்று கூறி உண்மையான இறைவாக்கினராக வாழ அழைப்பு விடுத்த அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகளும்! செபங்களும்! இறைவன் உங்களை நிறைவாக ஆசிர்வதிக்கட்டும்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...