நீங்கள் இயேசுவின் சகோதரர்களா?
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நற்செய்தி வாசகம் மற்றும் இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் எனது சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அவரது தாய் தேடுகிறார். அப்போது இயேசுவிடம் வந்த சிலர் கூறுகிறார்கள், உங்கள் தாயும் சகோதரர்களும் உங்களை தேடுகிறார்கள். உங்களைப் பார்ப்பதற்காக வெளியே காத்திருக்கிறார்கள். உடனே இயேசு கூறுகிறார், யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்? என கேள்வி எழுப்பிய பிறகு அவரே கூறுகிறார், விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரரும் சகோதரியும் ஆவார் எனக் குறிப்பிடுகிறார். யார் என் தாய் என்ற இக்கேள்வியை பல பிரிவினை சபையைச் சார்ந்த சகோதரர்கள் மரியாவை இயேசு, யார் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே மரியாவை நாம், நினைவு கூற வேண்டிய அவசியம் இல்லை. இந்த அன்னை மரியாள் நம்முடைய திருஅவைக்கு தேவையற்ற ஒன்று என்று கூறிக்கொண்டு அன்னை மரியாவின் காரணம் காண்பித்து, திருஅவையோடு உறவை முறித்துக் கொள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவின் இந்த கேள்வியையும் இயேசுவினுடைய பதிலையும் இன்றைய நாளில் ஆழமாக ஆராய்ந்து பார்க்க நாம் அழைக்கப்படுகிறோம். யார் என் தாய்?, யார் என் சகோதரர்?. இயேசு தான் இந்த கேள்வியை எழுப்புகிறார். அவரே இந்த கேள்விக்கு பதிலையும் தருகிறார். விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும், சகோதரரும் சகோதரியும் ஆவார் என இயேசு குறிப்பிடுகிறார். விண்ணுலகில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்று சொல்லும்போது, அன்னை மரியாள் விண்ணிலுள்ள தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றியவர் என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் இயேசு இங்கு விளக்கிக் கூறுகிறார்.
கபிரியேல் வானதூதர் அன்னை மரியாவிடம் வந்து, அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்! என்று கூறி இயேசுவின் பிறப்பை அறிவித்த போது, இது கடவுளின் திருவுளம் என்பதை உணர்ந்த அன்னை மரியாள் உமது விருப்பப்படியே எனக்கு ஆகட்டும் என கூறி விண்ணகத் தந்தையின் திருவுளத்திற்கு தன்னையே கையளித்து, அதனை நிறைவேற்றக்கூடிய பெண்மணியாக இச்சமூகத்தில் வலம் வருகிறார்.யூதச் சமூகத்தில் திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் கருவுற்று இருந்தால் அப்பெண்ணை கல்லால் எரிந்து கொல்ல வேண்டும் என்பது மோசேயின் சட்டம். மோசே கொடுத்த சட்டத்தை அப்படியே பின்பற்றி வந்த யூதர்களுக்கு மத்தியில் மரியா ஒரு வீரப் பெண்ணாக, துணிச்சல் மிக்க பெண்ணாக, ஆண்டவரை மட்டுமே அடைக்கலமாக கொண்டு, அவர் மீது முழு நம்பிக்கை வைத்த வண்ணம், துன்பங்கள் பட்டாலும் பரவாயில்லை, விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவது என் நோக்கம் என்பதை உணர்ந்தவராக இயேசுவை தன் வயிற்றில் சுமப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். விவிலியத்தில் எத்தனையோ பெண்களைப் பற்றி நாம் காணலாம். ஆனால் இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சியிலிருந்தே, அன்னைமரியா ஒரு வீரப் பெண்ணாக திகழ்ந்தாள். விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தை செயலாக்கப்படுத்தி காட்டுகிறார். இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தும் வண்ணமாகவே இறைவன் இயேசு நேரடியாகவும் மறைமுகமாகவும் யார் என் தாய்? என்ற கேள்வியை எழுப்பி, தன் தாய் எப்படிப்பட்டவர் என்பதை இங்கு விளக்கிக் கூறுகிறார். என் தாய் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவர் என்பதை நயமாக இங்கு தன்னுடைய சீடர்களுக்கு கூறுவதன் மூலம், சீடர்களுக்கும் அங்கு சூழ்ந்திருந்தவர்களுக்கும் நீங்களும் என் தாயைப் போல விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்தால் நீங்களும் என் சகோதரர்களும் சகோதரிகளுமாக மாறுவீர்கள் என்ற செய்தியை அவர்களுக்கு வழங்குகிறார். இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் நம்முடைய செயல்கள் அனைத்தும் நல்ல செயல்களாக இருக்கின்றனவா? நாம் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற கேள்வியை நமக்குள் எழுப்பிப் பார்ப்போம். நாம் அனைவரும் விண்ணகத் தந்தையின் திருவுளமான அடுத்தவரை அன்பு செய்வது, அடுத்தவர் மீது இரக்கம் காட்டுவது அடுத்தவரின் துன்பத்தில் அவரோடு துணை நிற்பது, அடுத்தவருக்கு நம்மாலான உதவிகளை செய்வது என, சின்னஞ்சிறு செயல்கள் மூலம் சின்னஞ் சிறிய அன்பு செயல்கள் மூலம் நாம் விண்ணகத் தந்தையின் திருவுளத்தை இந்த மண்ணுலகில் நிறைவேற்றக் கூடியவர்களாக உருமாறிட இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார். விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிய அன்னை மரியாவை திருஅவையின் பாதுகாவலியாக கொண்டிருக்கக்கூடிய நாம் அனைவரும் அன்னை மரியாவை முன்மாதிரியாகக் கொண்டு விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி, இயேசுவின் உண்மையான சகோதர சகோதரிகளாக மாறிட இன்றைய நாளில் முயலுவோம். இதற்கான அருளை நாம் இறைவனிடத்தில் வேண்டுவோம். வேண்டுவது மட்டுமே என்றும் தீர்வாகாது. நமது வேண்டுதல்கள் நமது செயலில் வெளிப்பட வேண்டும். விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றக் கூடியவர்களாக நமது செயல்கள் அமைந்திட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றவர்களாய், இயேசுவின் சகோதரர்களாக மாறிட புறப்படுவோம்.
சின்னஞ்சிறிய அன்பு செயல்கள் செய்வோம்! இயேசுவுக்கு பிடித்தமான சகோதரர்களாக வாழ்வோம்! அருமையான கருத்துகளை வழங்கிய அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு நன்றிகள் பல!
பதிலளிநீக்கு