மனம் மாறு நீ விழிப்பாயிரு!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்களின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைய முதல் வாசகமானது நாம் எப்படி வாழவேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்பிக்கிறது. இயேசு இன்றைய முதல் வாசகத்தின் வழியாக மனம் மாறவும் விழிப்பாக இருக்கவும் நம்மை அழைக்கின்றார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சக்கேயுவை சந்திக்கிறார். இந்த சக்கேயு சமூகத்தால் பாவி என கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட ஒரு மனிதன். இவரோடு அங்கிருந்தவர்கள் உறவு கொள்வதில்லை. காரணம், இவர் வரி வசூலிக்க கூடிய பணியைச் செய்கிறார். வரி வசூலிப்பவர்கள் மக்களிடம் அதிகமான பணத்தினை வசூலித்து அரசுக்கு சார்பாக இருப்பார்களே தவிர மக்களுக்கு சார்பாக இருக்க மாட்டார்கள். எனவே மக்கள் சார்பாக இல்லாத இவரை மக்கள் வெறுத்தனர். ஆனால் மக்களால் வெறுக்கப்படக்கூடிய ஒரு நபரை ஆண்டவர் இயேசு தேடிச் சென்றார். அவரும் ஆண்டவர் இயேசுவை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். அதன் காரணமாக சக்கேயு, இயேசுவை காண்பதற்காக ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து இருந்தார். சக்கேயுவைப் பார்த்து இயேசு வா! இன்று நான் உன் வீட்டில் விருந்துண்ண போகிறேன் என்று கூறி சக்கேயுவின் வீட்டுக்குச் சென்றார். பொதுவாகக் கூறுவார்கள், நாம் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி 99 அடிகள் எடுத்து வைப்பார் என்று. அதுபோலத்தான் நமது வாழ்விலும். நல்ல செயல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் ஒன்றை துவங்கினால் கண்டிப்பாக அச்செயலைச் செய்து முடிப்பதற்கு தேவையான அனைத்தையும் கடவுள் பல நல்ல மனிதர்கள் வழியாக உதவுவார் என்று கூறுவார்கள். அது போலவேதான் இயேசுவைக் காணவேண்டும் என்ற சக்கேயுவின் விருப்பம் அவரை மரத்தின் மீது ஏறி அமர்ந்து இயேசுவை பார்க்கத் தூண்டியது. சக்கேயுவின் ஆர்வத்தையும், அவருடைய தேடலையும் கண்டுகொண்ட இயேசு, அவரை அழைத்து, அவரோடு சென்று அவர் வீட்டில் அமர்ந்து உணவு உண்டார். சக்கேயுவுடன் இயேசு வீட்டிற்குச் சென்ற போது, சமூகத்தில் இருந்த பலரும் பாவிகளோடு இவர் சேருகிறாரே! பாவியின் வீட்டில் உணவருந்த செல்கிறாரே, என்று இயேசுவை வியப்போடு பார்த்தார்கள். ஆனால் இயேசு எதற்கும் அஞ்சாது, எதையும் காதில் கொள்ளாது மீட்கப்பட வேண்டியவர் சக்கேயு என்பதை உணர்ந்தவராய் அவரைத் தேடிச் சென்றார். அவர் வீட்டிற்கு சென்று அவரோடு அமர்ந்து உணவு உண்டார். பெரிய அளவிற்கு சக்கேயுவிடம் இயேசு மனமாற்றத்தை பற்றி பேசினார் என விவிலியம் கூறவில்லை. ஆனால் இயேசுவை விட சக்கேயு தான் பேசப் போகிறார் என்று சொல்லுகிறார். சக்கேயு தாமாக இயேசுவிடம் இவ்வாறு சொல்கிறார். நான் பாவி. மக்களிடமிருந்து நான் அதிகமாக வரி வசூலித்திருந்தால் வாங்கியதை இரண்டு மடங்காகத் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினார். இயேசு இறுதியாக அவரை பார்த்து இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று என்று கூறி, சக்கேயுவைத் தேற்றுகிறார்.
இன்று நாம் வாழக்கூடிய இந்த சமூகத்தில் யாரேனும் ஒருவர் தவறு செய்கிறார்கள் என்றால் தவறிழைக்கக் கூடியவர்களை நாம் நாடிச் செல்வதில்லை. அவர்கள் தவறானவர்கள் என்று கூறி ஒதுங்கிக் கொள்ளவே விரும்புகிறோம். ஆனால் நாம் ஒதுங்கி கொள்வதற்காக இவ்வுலகில் படைக்கப்படவில்லை. தவறக்கூடிய மனிதன் நம்முடன் இருக்கக்கூடிய ஒரு சகோதர சகோதரியே என்பதை உணர்ந்தவர்களாக, அவர்களும் மீட்படைய வேண்டும். நலமான வாழ்க்கையை அவர்கள் பரிசாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு, அவர்களை சந்திக்கவும் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி அவர்கள் தங்களை மாற்றிக் கொள்வதற்கான சூழலை உருவாக்கித் தர வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் இருக்கிறோம். அவ்வாறு செய்யாது நாம் அவர்கள் தவறும் போது அதை கண்டும் காணாமல் செல்லக் கூடியவர்களாக இருந்தால், கண்டிப்பாக இயேசுவின் விழுமியங்களின்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர்களாக நாம் இருக்க முடியாது. பல நேரங்களில் நமது வாழ்வில் நாம் அத்தகைய தவறுகளை செய்து இருந்தால், இன்றைய நாளில் அவற்றை எல்லாம் எண்ணிப் பார்ப்போம். மனமாற்றம் பெற்றுக் கொள்வோம். நமது கதவருகே நின்று ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று தட்டிக் கொண்டிருக்கிறார். அதாவது நமது மனக் கதவின் முன்பாக நின்று. உன் அருகில் இருக்கக்கூடிய உன் சகோதர சகோதரியை, பாவி, குற்றமற்றவன், நேர்மையற்றவன், அவன் தவறிழைப்பவன், என்றெல்லாம் கூறி அவனை விட்டு ஒதுங்கி நிற்காதே. அவன் மனமாற்றம் பெற நீ அவனுக்கு உதவி செய் என்று கூறிய வண்ணமாக இயேசு நமது கதவை தட்டிக் கொண்டிருக்கிறார். அவரின் குரலுக்கு செவி கொடுத்து கதவை திறந்தால், அவர் நம்மோடு வந்து நம் மகிழ்வில் பங்கெடுப்பார். ஆண்டவர் இயேசு நம் மகிழ்வில் பங்கெடுக்க வேண்டுமாயின், நமது உள்ளத்தில் மாற்றத்தை உருவாக்கி அந்த மாற்றத்தை நமது செயலில் வெளிக்காட்ட இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
மன மாற்றத்தை ஏற்றுக் கொள்ள நமது மனம் எப்பொழுதும் திறந்தே இருக்கட்டும்! நமது மன மாற்றத்தையும் பிறரின் மன மாற்றத்தையும் ஆண்டவரிடம் அர்ப்பணிப்போம்!
பதிலளிநீக்குமனமாற்றம் பெற அன்புடன் அழைக்கும் அருட்சகோதரர் சகாயராஜ் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகிறோம்! ஜெபிக்கிறோம்!
பதிலளிநீக்கு