நாளைய பொழுது விடியும் என்ற நம்பிக்கையில் தான் இன்று இரவு உறங்கச் செல்கிறோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாளில் வாசகங்கள் அனைத்தும் நம்பிக்கையை மையப்படுத்தியதாக அமைகின்றன.
இன்றைய முதல் வாசகமானது திருவெளிப்பாடு நூலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
திருவெளிப்பாடு நூல் என்பது பொதுவாகவே நம்பிக்கையின் நூலாக பார்க்கப்படுகிறது. அச்சமுறக் கூடியவர்களுக்கு நம்பிக்கையோடு நிகழ்காலத்தை நடத்துங்கள் என்ற செய்தியை ஆழமாக, அர்த்தத்தோடு உணர்த்தக் கூடிய வகையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
இன்றைய முதல் வாசகத்தில் வானதூதர்கள், கடவுள் அனுப்பிய பணியாளர்களாக இன்றைய முதல் வாசகம் வழியாக இறைவாக்கை படிப்போரும் அவற்றை கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளதை கடைப்பிடிப்போரும் பேறுபெற்றோர். இதோ காலம் நெருங்கி வந்துவிட்டது என்ற செய்தியை நமக்கு உணர்த்துகின்றன.
காலம் நெருங்கி வந்துவிட்டது என்றால், உலகம் முடிவை நோக்கிச் செல்கிறது என்றல்ல. நாம் ஒவ்வொருவரும் அடுத்தவருக்காக நமது வாழ்வை அமைத்துக் கொள்ளக்கூடிய இயேசுவின் விழுமியங்களை வாழ்வாக்கிக் கொள்ளக் கூடிய சூழலானது நெருங்கிவிட்டது என அதனை பொருள் கொள்ளலாம். எதிர்காலத்தை எண்ணி வருந்துவதை விட நிகழ்காலத்தில் நல்ல மனிதர்களாக வாழ்ந்து நம்பிக்கைக்குரிய இயேசுவின் சீடர்களாக மாறிட நமக்கு அழைப்பு தருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற ஒரு நபர், "ஆண்டவரே! தாவீதின் மகனே! எனக்கு இரங்கும் என்று கூக்குரலிடுகிறார். அவரின் கூக்குரலை நிறுத்துவதற்கு முயற்சித்தார்கள். இருந்தபோதும் அவர் விடாது கத்திக் கொண்டே இருந்தார். கடவுள் அவர்வேண்டுகோளுக்கு இணங்கி அவரிடம் வந்து அவரை குணப்படுத்தினார். குணப்படுத்திவிட்டு அவரிடம் கூறினார், உன் நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. என்றார். அந்த மனிதன் நம்பிக்கை கொண்டதால் ஆண்டவர் இயேசு அவ்வழியே சென்றபோது இவரை நோக்கி அழைப்போம் இவர் நமக்கு குணம் தருவார் என்று நம்பியதால் அழைத்தார். ஆனால் சிலர் அவரை அழைக்க விடாமல் செய்வதற்கும் அவருடைய நம்பிக்கையை உடைப்பதற்கும் பலவிதமான முயற்சிகளை எடுத்தார்கள். ஆனாலும் அந்த மனிதன் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழக்காமல் ஆண்டவர் இயேசுவை அழைத்து தான் எதற்காக அழைத்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டார். கடவுளும் அவனிடம் உன் நம்பிக்கை உன்னை குணமாக்கிற்று என்றார்.
நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கை இருந்தால்
எதிலும்
நம்பி கை வைக்கலாம் என்று கூறுவார்கள்.
நம்பிக்கையை கேடயமாக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய நாம் அனைவரும் நம்பிக்கையோடு இறைவனை எதிர்கொள்ளவும், காணும் மனிதர்களிடம் நல்லவர்களாக நாம் வாழ. இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம்.
தற்போது நிலவக்கூடிய இக்கட்டான சூழ்நிலை நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு பெரிய நோய் தொற்று, நோய் தொற்றிலிருந்து இறைவன் ஏன் நம்மை பார்க்க வில்லை? ஏன் பல உயிர்கள் மடிந்து போனது? என்ற கேள்வியை நம் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஆழமாக சிந்திப்போம். ஆனால் நிகழக்கூடிய இந்த நோய்த் தொற்று நமக்கு பலவற்றை நினைவூட்டுகிறது.
கடவுள் ஏதேனும் ஒன்றை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றால் அதை நேரடியாகச் சொல்லி கொடுக்கலாமே! எதற்காக இது போன்ற ஒரு துயரத்தின் வழியாக நமக்கு சொல்லிக் கொடுக்கிறார் என்ற கேள்வியும் உள்ளத்தில் எழலாம். கடைக்குட்டி சிங்கம் என்ற ஒரு படம் சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் இவ்வாறு ஒரு வசனம் இருக்கும். அந்த படத்தின் இறுதியில் சண்டைகளால் பிரிந்து கொண்டிருந்த உறவுகள் எல்லாம் ஒன்றிணையும். அப்போது அப்படத்தில் நடிகர் சத்யராஜ் அவர்கள் கூறுவார் சூழல் சிலவற்றை தாமாக சரி செய்து கொள்ளும் என்று. அதுபோல்தான் இன்று நிலவக்கூடிய இந்த இக்கட்டான சூழலும் நம்மை நாமே சரி செய்து கொள்வதற்காக என்ற ஒரு கண்ணோட்டத்தில் நாம் பார்க்கலாம். ஆனால் நம்பிக்கையோடு நாம் நகரும் போது, அனைத்தும் நலமான செயல்களாக மாறுகிறது. நம்பிக்கை கொண்டவர்களாக நம்பிக்கையோடு நிகழும் இச்சூழலில் இன்று நிலவக் கூடிய இந்த இக்கட்டான சூழலை கண்டு மனம் தளர்ந்து விடாமல் இருக்கவும், புத்துயிர் பெற்றவர்களாகவும் புதிய வேகம் கொண்டவர்களாகவும், நமது வாழ்க்கையில் நாம் தவறிய தருணங்களை எல்லாம் மாற்றிக்கொண்டு இறைவனது அருளை மையமாகக் கொண்டு, நாம் நல்ல செயல்கள் செய்யவும், நலமான பணிகளை முன்னெடுகக் இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். நம்பிக்கையோடு தான் வேண்டியதை பெற்றுக் கொண்ட பார்வையற்ற குருடனைப் போன்றவர்களாய், நம்பிக்கையில்லாமல் பார்வை இருந்தும் குருடர்களாக இருக்கக்கூடிய நம் நிலையை மாற்றிக்கொண்டு நிகழக்கூடிய இச்சூழலிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு நம்பிக்கையோடு நலமான செயல்களை முன்னெடுத்து நலமான பணிகளைச் செய்ய முன்வர இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
நலமான பணிகளை நம்பிக்கையுடன் செய்வோம்!
பதிலளிநீக்குஆண்டவர் இயேசுவின் மீது நமது கண்களை பதிய வைப்போம்! ஒன்று ஆன்மீக ஆழத்திற்கு அழைத்துச் செல்லும் அருட் சகோதரர் சகாயராஜ் அவர்களுக்கு எங்களது நன்றிகளும்! செபங்களும்!