வியாழன், 5 நவம்பர், 2020

நமக்கோ விண்ணகமே தாய்நாடு! (6.11.2020)

நமக்கோ விண்ணகமே தாய்நாடு! 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!

இன்றைய இறை வார்த்தையின் வழியாக
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவோடு உறவாட உங்களை அன்போடு அழைக்கின்றேன்!

மன்னரின் தோட்டத்தில் ரோஜா மலர்கள் மிக அழகாக, மென்மையாக, கண்ணைக் கவரும் வகையில் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அவ்வழியாக வந்த சிறுவன் ஒருவன் அந்த ரோஜாவின் அழகில் மயங்கியவனாய் அந்த ரோஜா மலர்களில் சிலவற்றை பறித்து தன்னுடைய வீட்டிற்கு கொண்டு சென்றான். ரோஜா மலரின் மணம் எங்கும் பரவ ஆரம்பித்தது. அப்போது தோட்டத்திற்கு வந்த அரசி தோட்டத்தில் மலர்கள் பறிக்கப்பட்டு இருப்பதை கண்டாள். உடனே காவலர்களை அழைத்து அதனை பறித்தது யார்? என கேட்டாள். உடனே காவலர்கள் அந்த ரோஜா மலர்களை பறித்த நபரைத் தேடி நகருக்குள் செல்ல துவங்கினர். அப்போது அந்த சிறுவனின் வீட்டில் ரோஜாவின் மணம், அனைவரையும் கவர்ந்தது. அண்டை வீட்டார் கூட அந்த மணத்தை ரசிக்க அந்த சிறுவனின் வீட்டிற்குள் வந்தனர். இந்த மணத்தை முகர்ந்தபடியே அங்கு வந்த காவலர்கள் அந்த மலர்களை தன் கையில் வைத்திருந்த சிறுவனை பிடித்துக்கொண்டு அவனுக்கு தண்டனை கொடுப்பதற்காக அரண்மனைக்கு இழுத்துச் செல்ல துவங்கினர். அப்போது செய்வதறியாது அந்த சிறுவன் அழத் துவங்கினான். தன்னை எப்படி காப்பாற்றுவது என்று அவனுக்கு தெரியவில்லை. அவனது தந்தையையும் தாயையும் பார்த்து, "என்னை காப்பாற்றுங்கள்" என்று கத்தினான். அப்போது அவனை பின்தொடர்ந்து வந்த அவனுடைய தந்தை, "வாயுள்ள பிள்ளை பிழைக்கும்" என்று கூறினார். இதே வார்த்தையை இரண்டு மூன்று முறை அவர் கூறக்கேட்ட அந்த சிறுவன், சற்று யோசிக்கத் துவங்கினான். வாய்க்கும் தன்னை காப்பாற்றுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று சிந்தித்தான். அவன் அரண்மனையை நெருங்குவதற்கு முன்பாகவே தனது கையிலிருந்த ரோஜா மலர்களை ஒவ்வொன்றாக வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டான். அரண்மனைக்குச் சென்றபோது அவனது கையில் எந்த மலர்களும் இல்லை. மன்னரின் முன் கண்கலங்கி நின்ற அந்த சிறுவனை பார்த்த மன்னர் காவலர்களிடம் ரோஜா மலர்களை காட்டுங்கள் என்று கேட்டார். அப்போது அவனது கரங்களை விரித்த காவலர்கள் அங்கு ஒன்றும் இல்லாததை கண்டு திகைத்தனர். அவனது கரங்களில் ஒன்றும் இல்லாததை கண்ட மன்னர் அந்த சிறுவனை விடுவித்தார். முன் மதியோடு செயல்பட்ட அந்த சிறுவன் வெளியே வந்து ஓடிச்சென்று தந்தையை கட்டி அணைத்து கொண்டவனாய் தன்னுடைய வீட்டிற்கு திரும்பினான். 

இன்று புனித பவுல்,
நமக்கோ விண்ணகமே தாய்நாடு. அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம்,  நமது தாய் நாடாகிய விண்ணகத்தில் நாம் ஆண்டவரை முகமுகமாய் தரிசிப்போம். அங்கு அனைவரோடும் இணைந்து தூயவர் தூயவர் தூயவர் என்று இறைவனை புகழ்ந்து பாடுவோம், என்று விண்ணகத்தின் மகிழ்வை நமக்கு வெளிப்படுத்துகின்றார். விண்ணக மகிழ்வில் நாம் பங்குபெற முன்மதியோடு, விழிப்போடு செயல்பட நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.

மேலும் அவர், தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்ற வல்லவர். எனவே,ஆண்டவரோடுள்ள  உறவில் நிலைத்திருங்கள் என்று கூறுகிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் கூட இயேசு, அவரைப்போல,  அவரோடு இணைந்து, முன்மதியோடு செயல்பட நமக்கு அழைப்பு விடுக்கின்றார். 
                      ஆண்டவர் இயேசு இருக்கும் இடத்தில் நமக்கு சோர்வு இல்லை.  
                        ஆண்டவர் இயேசு இருக்கும் இடத்தில் நமக்கு பயம் இல்லை. 
ஆண்டவர் இயேசு இருக்கும் இடத்தில் நமக்கு கோபம் இல்லை. 
ஆண்டவர் இயேசு இருக்கும் இடத்தில் நமக்கு துன்பமில்லை, காரணம் ஆண்டவராகிய இறைவனின் ஞானம் அனைத்தையும் விட வலிமையானது என்று விவிலியத்தில் வாசிக்கிறோம்.

ஞானம் நிறைந்த ஆண்டவரை நாம் முன்மதியோடு கண்டுகொள்ள, அவரில் நம்மை இணைத்துக்கொள்ள இறையருளை இறைஞ்சுவோம்!

1 கருத்து:

  1. ஆண்டவரோடு நம்மை இணைத்துக் கொள்வோம்!
    விண்ணகத்தை பரிசாக பெற்றுக் கொள்வோம்!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...