வாருங்கள் பயணம் செய்வோம்!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஒரு மனிதன் தன் கையில் இரண்டு குடங்களை வைத்திருந்தான். இரண்டு குடங்களை பயன்படுத்தி தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து கொண்டு கோவிலுக்கு வருவது வழக்கம். அவ்வாறு ஒவ்வொரு நாளும் செய்து வந்தான். ஒரு நாள் அவரது கையில் இருக்கக்கூடிய ஒரு குடம் அவனிடத்தில் பேசத் தொடங்கியது. அந்த குடம் அவனிடத்தில் சொன்னது, நான் உங்களுடைய கையில் இருக்கிறேன். ஆனால் என்னிடம் சிறிய அளவு ஒரு துளையானது இருக்கிறது. அந்தத் துளையின் காரணமாக நீங்கள் கடினப்பட்டு தண்ணீர் எடுத்துச் செல்லும் பொழுது பாதி நீரானது வெளியேறிவிடுகிறது. எனவே உங்களுடைய உழைப்புக்கான முழுமையான பலனை நீங்கள் அடைய முடியாமல் போகிறது. ஆனால் மறுபுறமோ முழுமையாக தண்ணீரை கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமைந்து இருக்கிறது, என்று கூறி வருத்தப்பட்டது. ஆனால் அந்த நபர் அந்த குடத்தை பார்த்து, உன்னிடம் இருக்கக்கூடிய சிறு துளையை நான் என்றோ கவனித்துவிட்டேன். இருந்த போதும் நான் உன்னை அப்படியே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறேன். காரணம் நான் நாளை தண்ணீர் எடுத்துச் செல்ல உன்னை பயன்படுத்தும் போது நீ வரக்கூடிய பகுதிகளை உற்று நோக்கு, என்று கூறினார். அந்த குடமும் உற்று நோக்கியது. அப்போது அந்த ஓட்டை குடம் இருக்கக் கூடிய பகுதி மிகவும் வளமையாக இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்பகுதி வளமையற்று இருந்தது. அப்போது அந்த குடம் அவனிடத்தில் எப்படி இது? என்று கேட்டதற்கு, அந்த நபர் கூறினார், உன்னுடைய ஓட்டைக் குடத்தில் இருந்து விழக்கூடிய நீர் படக்கூடிய இடங்களில் நான் சிறிய விதைகளை தூவினேன். அந்த விதைகள் எல்லாம் வளர்ந்து இன்று நிறைய பூக்களை தருகின்றன. அந்த பூக்களை கொண்டு தான் நான் அனுதினமும் ஆலயத்தில் வழிபாடு செய்து வருகிறேன் என்று கூறினார்.
இன்றைய முதல் வாசகமும் இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு தரக்கூடிய செய்தி, வாருங்கள் பயணம் செய்வோம் என்பதாகும்.
இன்றைய முதல் வாசகத்தில் பவுல் நற்செய்தி பணியாற்றுவதற்காக அவர் இருந்த இடத்தில் இருந்து பல இடங்களுக்கு கடல்வழிப் பயணத்தை மேற்கொள்கிறார். பயணத்தின்போது அவர் சந்தித்த இன்னல்களையும் அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் அவர் எங்கு தங்கியிருந்தார் என்பதனையும் பற்றியதாக இன்றைய முதல் வாசகம் அமைந்திருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நற்செய்தி பணியாற்றுவதற்காக மற்றொரு ஊருக்கு செல்கின்றார். பயணங்கள் எப்போதும் சுகமாக இருப்பது இல்லை. பயணங்கள் பல விதமான பாடங்களை நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. நாம் ஒரு பயணத்தை மேற்கொள்ளும் போது அந்த பயணத்திற்கு என ஒரு நோக்கம் இருக்கும், ஒரு இலக்கு இருக்கும். அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
மேற்கூறப்பட்ட கதையில் நாம் காணும் குடத்தைப் போல நாம் நிறைவான பாத்திரங்களாக இருந்தாலும், குறைவான பாத்திரங்களாக இருந்தாலும், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றும் கருவிகளாக, அவரது பணியை செய்யக்கூடியவர்களாக வாழ்ந்திட இறைவன் இன்றைய வாசகங்கள் வழியாக நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
குறையோடு இருந்த குடம் தன் நிலையை நினைத்து வருந்தியது போல இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் சந்திக்கின்ற பேதுருவும் தன்னை சூழ்ந்திருக்கும் எதிர்மறையான காற்று வீசுகின்ற சூழலைக் கண்டு அஞ்சியவராக கடலுக்குள் மூழ்குவதை நாம் பார்க்கின்றோம்.
துளை கொண்ட குடத்தின் தண்ணீரால் செடிகள் வளர்த்து மலர்களை இறைவனுக்கு அர்ச்சனை ஆக்கிய அந்த மனிதனைப் போல இறைவனும் நமது வாழ்வில் ஏற்படுகின்ற தடைகளை ஏற்ற இறக்கங்களை ஏமாற்றங்களை அவரது பணியின் படிகளாக மாற்றுவார் என்பதை புனித பவுலின் கடல் பயணத்தின் துன்பங்கள் வழியாக, தனித்து விடப்பட்ட சூழலிலும் அவர் ஆற்றிய நற்செய்திப் பணியின் வழியாக நாம் அறிந்து கொள்கின்றோம்.
மனிதனின் எண்ணங்களை விட இறைவனின் எண்ணங்களை உயர்ந்தவை உன்னதமானவை என்பதை ஆண்டவர் இயேசு புனித பேதுருவிடம் கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருந்து வெளிவரும் அனுபவத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார்.
இயேசு தந்தையோடு இணைந்து ஜெபித்து அதன் வழியாக இறை வல்லமையை இறை ஞானத்தை பெற்றுக் கொள்கின்றார். நமது நற்செய்தி பணி வாழ்வில் நமக்கு அடித்தளமாக இருப்பது ஜெபம். ஜெபம் ஒருவருக்கு ஆற்றலை தருகின்றது. அளவற்ற ஞானத்தை தருகின்றது. நாம் முன்னெடுக்க வேண்டிய காரியங்களை நமக்கு சுட்டிக் காட்டி வழி நடத்துகின்றது என்பதை இன்றைய நாளில் நாம் உணர்ந்து கொள்வோம்.
இயேசுவைப்போல இறை அருளோடும் இறை ஞானத்தோடும் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம். ஒவ்வொரு நாளும் இந்த மண்ணகத்தில் இருந்து நாம் விண்ணகம் நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த உலகத்தில் நல்ல ஒரு பணியை செய்து கொண்டு செல்ல கூடியவர்களாக நாம் இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஒரு பேருந்தில் ஏறுகிறோம். நாம் பலவிதமான மனிதர்களை சந்திக்கிறோம். ஆனால் அவர்களிடம் இருந்து பலவற்றை நாம் கற்றுக்கொள்கிறோம் அவர்களிடம் நாம் எத்தகைய நல்ல வார்த்தைகளை உற்சாகமூட்டும் எண்ணங்களை விதைத்து விட்டுச் செல்கிறோம் என சிந்திப்போம்.
இன்றைய நாளில், நாம் நமது வாழ்வில், பவுலைப் போலவும் இயேசுவைப் போலவும், நற்செய்தியை செய்ய, நலமான நல்ல காரியங்களைச் செய்வதற்கான பயணத்தை மேற்கொள்ள உள்ளத்தில் உறுதி ஏற்று இயேசுவின் பின்னால் பயணம் செய்வோம்.
ஒவ்வொரு நாளும் இயேசுவோடு பயணம் செய்வோம்! இயேசுவின் பயணம் செய்வோம்! இயேசுவாகவே நாமும் வாழ்வோம்!
பதிலளிநீக்கு