வியாழன், 12 நவம்பர், 2020

நன்றியுடன் வாழ்வோம்! (13.11.2020)


ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்…
உழைத்துச் சாப்பிடாமல், நீ ஏன் பிச்சை எடுக்கிறாய்? 
அதற்கு அந்தப் பிச்சைகாரன், நான்  வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக் கொடுங்கள், என்று கேட்டான்.


“ உனக்கு ஒரு வேலை கொடுக்கிறேன். உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப் போகிறேன்.

எனக்குச் சொந்தமாக பல நூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது. 
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம். 
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் நான் தருகிறேன். 
நீ செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்குப் பங்கு தர வேண்டும். அவ்வளவு தான் !” என்றார்.
எவ்வளவு பங்கு தரவேண்டும் என்று பிச்சைக்காரன் கேட்டான்.
 நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தால் போதும், என்றார் பணக்காரர்.
இவர்கள் செய்துக் கொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெறத் துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம் புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்துச் செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துக் கொண்டான். 

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ்னஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக் கொண்டான்…

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வருவது இல்லையே. இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப் பணக்காரனாகி விட்ட பழையப் பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

 எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரணும்? எனக்குத் தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால்????????

இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்…
நாம் தான் அந்த புதுப்பணக்காரன்…

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய முதல் வாசகத்தில் புனித யோவான் நம்மை உண்மையின் வழியில் அன்பின் வழியில் வாழ அழைக்கின்றார். ஏமாற்றுவோரை இனம் கண்டு அவர்களை விட்டு விலகி உண்மை இறைவனைக் கண்டு கொள்ள அழைக்கின்றார். கிறிஸ்துவின் போதனையில் நிலைத்திருந்து ஆண்டவருக்காக உழைக்கவும் நமது உழைப்பின் பயனை முழுமையாக பெற்றுக்கொள்ளவும் அழைக்கின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு, மானிட மகனின் வருகையின் போது, இறைவன் இவ்வுலகில் நேர்மையை காண்பாரோ? என எண்ணுவதை நாம் பார்க்க முடிகிறது. மக்கள் தாங்கள் விரும்பியபடியே உண்டும் குடித்தும் தங்களது ஊனியல்பின் ஈர்ப்புகளுக்கு ஏற்ப வாழ்ந்தால் அவர்களின் வாழ்வு சோதோம் கொமோரா நகர மக்களின் வாழ்வைப் போல அழிவுக்கு உள்ளாகும் என்று கூறுகிறார்.
அன்பிற்குரியவர்களே!

இறைவன் நமக்கு, இந்த வாழ்க்கையை, ஒவ்வொரு நொடியும்,
நாம் விடும் உயிர் மூச்சை,
ஐம்புலன்களை நமக்குக் கொடுத்து, அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்திருக்கிறார். மேலும் 
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்களைக் கொடுத்திருக்கிறார். 
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிடத் துவங்கினால் அது முடிவே இல்லாமல் தான் போய்க் கொண்டிருக்கும். 
இன்றைய நாளில் இறைவன் நம் மீது கொண்டிருக்கும் முழுமையான அன்பை உணர்வோம்.  இறைவன் நமக்கு அளித்திருக்கும் வாழ்வு என்னும் கொடையை நினைத்து அவருக்கு நன்றி கூறுவோம்.  இவ்வளவு தந்த இறைவனிடத்தில், அவர்
 நமக்கு அளித்த 
உயிரையும், உடலையும், 
உறுப்புகளையும் அவர் கூறிய வழியில், அவர் விரும்பிய வழியில் நடந்து, 
இறைவனுக்கு நாம் நன்றியுடன் வாழ்வோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...