சனி, 21 நவம்பர், 2020

உங்கள் செயல்... உங்களுடைய பதில் (22.11.2020)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே !
இன்றைய நாளின் வாசகங்கள் அடிப்படையில் என்னுடைய சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

 தலைவர்கள் சிலருக்கு மாலைகள் போட தேதிகள் உண்டு !
சோப்பு போட்டு ஓட்டுகள் வாங்க 
தேர்தல் உண்டு! 
கூட்டணி சேர்ந்து 
பந்துக்கள் நடத்த பிரச்சனைகள் உண்டு! இன்னும் எல்லாமே உண்டு! ஆனால் 
எங்கள் கனவுகள் 
நிஜமாகும் 
நொடிகளை தவிர!!!!!

 புத்தாண்டு சமயத்தில் பத்திரிக்கையில் வந்திருந்த மேற்கண்ட இந்த புதுக்கவிதை வார்த்தைகள் இன்றைய நாட்டு நடப்பை மிகவும் அருமையாக படம்பிடித்து காட்ட கூடிய வகையில் அமைந்திருந்தது. மேல்குடிப் பெரும் தலைவர்களுக்கு எல்லாமே உண்டு. நடுக்குடி பெரும்பான்மையினருக்கு சிலையாவது உண்டு. கீழ்குடி பாமர மக்களுக்கு சாதாரணமானவை கூட, அடிப்படையானது கூட, இல்லை. இது எத்துணை காலத்திற்கு என்ற கேள்வி உள்ளத்தில் எழலாம்.  

இன்றைய நாள் வாசகங்கள் ஆண்டவர் இயேசு இறுதி நாளில் நம்மை எவ்வாறு தீர்ப்பிடுவார் என்பதை குறித்து விளக்குகின்றன. 

இன்றைய முதல் வாசகத்தில் ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளை தேடிச் செல்வது போல,  நானும் என் மந்தையை தேடிப் போவேன் என்ற வார்த்தைகைகள் இடம்பெறுகின்றன. நானே என் மந்தையை மேய்த்து இளைப்பாற செய்வேன் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.  இறுதிநாளில் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, ஓரங்கட்டப்பட்டு அடையாளம் தெரியாதவர்களாகவும், இவர்களுக்கு யாரும் இல்லை என்ற ஒரு கருத்தை மனதில் கொண்டு, தங்களுடைய வாக்கு வங்கிகளாக மட்டுமே அவர்களை பயன்படுத்திக் கொண்டு, மக்களை அநியாய முறையில் ஆட்சி செய்யக்கூடிய ஆட்சியாளர்களையும், மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கை நடத்தக்கூடிய அத்துணை நபர்களையும் இறைவன் கண்ணோக்குவார். இறுதி நாளில் நசுக்கப்பட்ட தன்னுடைய மக்களை ஆண்டவரே தேடிச் செல்வர் என்ற செய்திகளை இன்றைய முதல் வாசகம் நமக்கு விளக்குகிறது. 
ஒரு மனிதர் வழியாக சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே  இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர். ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போல கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர் என்ற வார்த்தைகளின் வழியாக ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அரசராக, நடுநிலை அரசராக, உண்மையான நீதிமானாக இருந்து, இறுதி நாளில் இவ்வுலகில் ஒவ்வொருவரும் செய்த செயல்களுக்கு ஏற்ப நம்மை அவர் கண்காணிப்பார் என்ற செய்தியினை இன்றைய இரண்டாம் வாசகமானது நமக்கு எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் நாம் நினைத்தது எல்லாம் செய்து கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம். நான் வாழ வேண்டும் என்பதற்காக யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தோடு வாழக்கூடிய அனைவருக்கும் இறுதியில் மரணம் நிச்சயம் என்ற செய்தியானது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் மரணிக்கும் வரை எதுவாக இருந்தாலும் அது நம்முடையதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அடுத்தவரை நசுக்கி, அடுத்தவருடைய உழைப்பை உறிஞ்சி வாழக்கூடிய மனிதர்களுக்கு இயேசு, அரசராக இறுதிநாளில் தீர்ப்பு வழங்க வருவார்.  சாவே கடைசிப் பகைவன். அதுவும் அழிக்கப்படும் என்பது போல, இறந்தால் அவர்கள் செய்தது அனைத்தும் முடிந்துவிடும் என்பது அல்ல. அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் செய்த செயல்களுக்கு ஏற்ப மானிட மகனாகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு நீதித் தீர்ப்பு வழங்குவார் என்ற செய்தியை இன்றைய இரண்டாம் வாசகம்  நமக்கு விளக்குகின்றது. 

 இன்றைய நற்செய்தி வாசகத்தில்
கிறிஸ்து அரசராகிய இயேசு கிறிஸ்து,  அரசராக அமர்ந்திருந்து நீதி வழங்கும் போது, ஏழை எளியோருக்கு செய்த உதவிகளை எல்லாம் அவருக்கு செய்த உதவிகள் எனக்கூறி, நேர்மையாளர் பலரையும் அழைத்து, உதவி செய்த நேர்மையாளர்கள் எல்லாம் சிறப்பு செய்வார். இந்த ஏழை எளிய மக்களை கண்டும் காணாமல், அவர்களின் குரலைக் கேட்டும் கேட்காமல், தங்களின் விருப்பப்படி, தங்களின் நலன் மட்டுமே முக்கியம், தங்களின் சுற்றத்தார் நலன் மட்டுமே முக்கியம், என்ற எண்ணத்தோடு அடுத்தவரை அழித்து, அடுத்தவரின் உழைப்பில் மகிழ்ந்து கொண்டிருந்த, நேர்மையற்ற ஆட்சி செய்த பல தலைவர்களையும்,  ஏழைகளுக்கு உதவ மறுத்த பல மனிதர்களையும், இறைவன் நீதியோடு நீங்கள்  உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவாதது என்பது,  எனக்கு உதவி செய்யாதது என்பதாகும் என்ற வார்த்தைகளை கூறி, நீங்கள் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு இரக்கம் காட்டாத போது எனக்கு இரக்கம் காட்டாமல் இருந்திருக்கிறீர்கள். அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யாத போது, என்னுடைய தேவைகளையும் நீங்கள் நிவர்த்தி செய்ய வில்லை. அவர்களை பசியில் வாட விட்ட போது, என்னையும் நீங்கள் பசியில் வாட விட்டீர்கள். நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ளாமை யின் விளைவு, நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்ற அடிப்படையில் அவர்களை தண்டிப்பது போன்ற உருவகக் செய்தியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இருந்து நாம் உணருகிறோம். இறுதி நாள் அது எப்போது வரும் என யாரும் அறியாது இருக்கிறார்கள். இறுதி நாள் எப்போது வரும் என்பது யாரும் அறியாத ஒன்று. ஆனால் மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் மரணிக்க வேண்டும் என்பது நிச்சயம். மரணிக்கக் கூடிய ஒவ்வொருவரும் கண்டிப்பாக இறுதி நாளில் இறைவன் அவர்கள் செய்த செயல்களுக்கு ஏற்ப தீர்ப்பு வழங்குவார் என்பது உண்மை. இவ்வுலகில் பல மதங்கள் இருக்கின்றன. அனைத்து மதங்களும் சுட்டிக்காட்டும் ஒரே செய்தி, நீ செய்கின்ற செயலுக்கு ஏற்ற தண்டனையை இறைவன் உனக்கு தருவார் என்பதாகும். இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய நாம் நம்முடைய செயல்கள் எப்படிப்பட்ட செயல்களாக இருக்கின்றன?  அவை அறச் செயல்களா?  அடுத்தவருக்கு நலன் தரக்கூடிய செயல்களா? அடுத்தவர் மீது இரக்கம் காட்டக் கூடிய செயல்களா? சிந்தித்து பாருங்கள்.

 உங்கள் செயல்களை இறுதி நாளில் இறைவன் தனக்கு செய்தது என கூறி உங்களை பாராட்ட கூடிய செயல்களாக இருக்கிறதா? அல்லது நீங்கள் செய்த செயல்களால் என்னை துன்புறுத்தினீர்கள் எனக்கூறி இறைவன் நம்மை தண்டிக்கக் கூடியவராக இருப்பாரா? என்ற கேள்வியை உங்களுக்குள் எழுப்பிப் பாருங்கள்.

 "எந்த ஒரு மாற்றமாக இருந்தாலும் அந்த மாற்றத்தின் முதல் விதையாக நீ இரு"  என்ற காந்தியடிகளின் காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு ஏற்ப,  இந்த நேரத்தில் நமது செயல்கள் பல நேரங்களில் அடுத்தவருக்கு நலம் தரும் செயலாகவோ, பல நேரங்களில் அடுத்தவர் குரலுக்கு செவி கொடுக்காதவர்களாகவோ, நாம் இருந்திருப்போமாயின், நமது வாழ்வை சரிசெய்துகொள்ள இன்றைய நாளில் இறைவன் நம்மை அழைக்கிறார்.

 இந்த மண்ணின் புனிதையான அன்னை தெரசா அவர்கள், மிகவும் அழகாகக் கூறுவார்,  இந்த உலகத்தில் ஒரு மனிதன் உணவின்றி இறக்கிறான் என்றால், 
கடவுள் அவனை பராமரிக்கவில்லை என்பது அர்த்தம் அல்ல. மாறாக உன்னையும் என்னையும் போன்றவர்கள் அவனைப் பராமரிக்கவில்லை என்பதனால் என்று கூறுவார். இன்றைய நாளில், நமது அறச்செயல்களால்,  நம்முடைய ஆறுதலான வார்த்தைகளால், துன்புறுவோருக்கு ஆறுதலையும்,  தேவையில் இருப்போரின் தேவைகளை நிவர்த்தி செய்ய நம்மிடம் இருப்பதை அவர்களோடு பகிர்ந்து கொண்டு வாழவும், இன்றைய நாளில் உறுதி ஏற்போம் இவ்வாறு நாம் வாழும்போது அரசராகிய இயேசுகிறிஸ்து ஆட்சியுரிமையோடு வரும் பொழுது கண்டிப்பாக நம்மை அவர் இரக்கத்தோடு கண்ணோக்குவார். கடவுளின் இரக்கத்தைப் பெற வேண்டும் என்பதற்காக உதவ வேண்டாம். மனிதனை மனிதன் மதிக்க வேண்டும். மனிதன் ஒவ்வொருவரும் கடவுளின் சாயல். கண்ணால் காணக்கூடிய ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கக்கூடிய கடவுள் தன்மையை கண்டுகொள்வோம். அந்த கடவுள் தன்மையை, கண்டு கொள்ளக்கூடிய எண்ணத்தோடு, கண்ணில் காணும் மனிதர்களிடம் இருக்கக்கூடிய கடவுள் தன்மையை கண்டுகொள்வோம். 
இறுதிநாளில் நம்முடைய செயல்களால் நாம் அன்று தீர்ப்பிடப்படுவோம். நமது செயல்கள் நமக்கு நல்ல தீர்ப்பைத் தருமா? நமது செயல்கள் இறைவனது இரக்கத்தை நமக்குப் பெற்றுத் தருமா? தராதா? என்ற கேள்வி உங்கள் முன் இருக்கிறது. இக்கேள்விகளுக்கு விடை உங்கள் செயல்களில் தான் அமைந்திருக்கிறது. உங்கள் செயல்களால் உங்களுடைய பதில் எது என்பதை தேர்வு செய்து கொள்ள இன்றைய நாளில் உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

1 கருத்து:

  1. நமது அன்பு செயல்களால் அனைவரையும் அரவணைப்போம்! கிறிஸ்து அரசரின் மாட்சியிலும் பங்கு பெறுவோம்! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...