ஞாயிறு, 20 பிப்ரவரி, 2022

நமது வாழ்வில் செபமும் நோன்பும்....(21.02.2022)

 நமது வாழ்வில் செபமும் நோன்பும்....




    ஞானி என்பவன் அனைவரிடமிருந்தும் கற்பவன் என்பார்கள். ஒரு குரு தன்னுடைய மாணவர்கள் தன்னிடம் இருந்த அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள். அந்த அடிப்படையில்தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும், தன்னிடமிருந்த அனைத்தையும் தன்னுடைய சீடர்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார். 

    ஆனால் முழுமையாக அதனை அவர்கள் செய்யவில்லை. அதனால்தான் தீய ஆவிகளை ஓட்டுகின்ற அதிகாரத்தை ஆண்டவர் இயேசுவிடம் இருந்து பெற்றிருந்த நிலையிலும்,  அவர்களால் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்ய முடியாமல் போகிறது. அந்நேரங்களில் அவர்கள் தடுமாறுகின்ற போது இயேசு அவர்களிடத்தில், உரிமையோடு கடிந்து கொள்கிறார். இன்னும் எத்தனை காலம் நீங்கள் முழுமையாக கற்றுக் கொள்ளாமல் இருப்பீர்கள்? கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, தீய ஆவியை ஓட்டுகிறார். அதேசமயம் சீடர்களுக்கு பாடத்தையும் கற்பிக்கின்றார். நோன்பும் செபமும் மிகவும் அவசியமான ஒன்று என்பதை அவர்களுக்கு கற்பிக்கின்றார். 

    நமது வாழ்வில் நாம் பலவிதமான அற்புதங்களையும் நல்ல செயல்களையும் செய்யவேண்டும் என்றால், நமது வாழ்வில் அனுதினமும் செபமானது இருத்தல் வேண்டும். அவ்வப்போது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் படிப்பினைகளின் அடிப்படையில்,  நோன்பு இருத்தலையும் நாம் கடைபிடிக்க வேண்டும். இந்த செபமும் நோன்பும் வாழ்வில் பலவற்றை நமக்கு கற்பிக்கிறது. 

    செபம் எல்லா செயல்களிலும் ஆண்டவரை முன் நிறுத்த கற்றுக் கொடுக்கின்றது. 

    நோன்பு அடுத்தவரின் பசியை உணர்ந்து கொள்வதற்கு கற்றுக் கொடுக்கிறது. 

    இந்த இரண்டையும் கற்றுக் கொள்கின்ற போது தான், இந்த சமூகத்தில்  எப்போதும் நாம் அடுத்தவரின் நலனை முன்னிறுத்தி, நலமான பணிகளை செய்ய முடியும். இந்தப் பாடத்தை தான் இயேசு தன் சீடர்களுக்கு கற்பிக்கின்றார். இன்று நமக்கும் கற்பிக்கின்றார். கற்றுக்கொள்வோம். அதனை வாழ்வாக்குவோம். நமது வாழ்வில் செபமும் நோன்பும் முக்கிய பங்கு வகிக்க இறையருளை வேண்டுவோம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...