நலமானதை அடுத்தவருக்கு தர...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார்
மனிதனிடம் இருந்து வெளிவரக்கூடியவை இச்சமூகத்தை தீட்டுப்படுத்தும் என்ற வார்த்தைகள் இன்றைய வாசகங்களில் இடம் பெற்றன. நமது உள்ளத்தில் இருந்து வெளிவரக்கூடிய கோபம், பொறாமை, பகைமை, கசப்பான உணர்வுகள் எல்லாம் அடுத்தவர் வாழ்வில் தீங்கை உருவாக்குகின்றன. அடுத்தவர் இயல்பை மாற்றுகின்றன.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உள்ளிருந்து வருபவற்றில் கவனமாக இருப்பதற்கு இன்றைய நாளில் அழைப்பு தருகின்றார். நாம் ஏதேனும் ஒன்றை செய்யும் போதும், ஏதாவது ஒரு இடத்தில் பேசும்போதும், சிந்தித்து, நிதானத்தோடு ஆண்டவர் இயேசு கூறக்கூடிய வகையில் விவேகத்தோடு செயல்படக் கூடியவர்களாய், கவனத்தோடு இருக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். எனவே, சொல்லிலும் செயலிலும் கவனத்தோடு இருந்து நம்மிடம் இருந்து வெளிவரக்கூடியவை நலமானதை அடுத்தவருக்கு தரவேண்டும் என்பதில் உறுதியோடு இருக்க உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக