உண்மைச் சீடர்களாக...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் வாசகங்கள் வழியாக இறைவன் தன்னுடைய பணிக்கு நம்மை அழைக்கின்றார். அவரது பணிக்கு அழைக்கப்படும் போது பல நேரங்களில், அவரது அழைப்பை நாம் உணர்ந்து கொள்வது இல்லை. காரணம், நாம் பாவிகளாக இவ்வுலகத்தில் வாழ்கின்றோம் என நாம் எண்ணிக் கொண்டிருப்பது அதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இத்தகைய எண்ணத்தோடு இருந்தவர்தான் எசாயா. ஆனால் எசாயாவின் பாவங்களை இறைவன் மன்னித்து, அவரை தன் பணிக்கு தகுதி உள்ளவராக மாற்றுகிறார். நம்மையும் அவ்வாறு அவர் தகுதி உள்ளவராக மாற்றுகிறார்.
அவரது பணியைச் செய்ய நம்மை அழைக்கின்றார். அவரது பணியை செய்ய நம்மிடம் திறந்த மனதும் ஆழமான நம்பிக்கையும் அவசியம் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக உணர்த்துகின்றார். பலநேரங்களில் நம்மை எல்லாம் இறைவன் அழைப்பாரா? என்று எண்ணி நாம் ஆண்டவரை புறம் தள்ளுகிறோம். ஆனால் கடைநிலையில் இருந்த என்னையும் ஆண்டவர் அழைத்தார் என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு ஏற்ப, கடவுள் நம்மை அழைக்கின்றார். நம்மை அவரது பணிக்காக அழைக்கின்றார். அவரது அழைப்பை உணர்ந்து கொண்டு, அவர் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, எப்படி பேதுரு அவர் மீது நம்பிக்கை கொண்டு கடலில் வலையை வீசி மீன்களைப் பிடித்தாரோ அதுபோல, நாமும் அந்த ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பேதுரு, தான் கொண்டிருந்த நம்பிக்கையில் தன் வாழ்வின் இறுதிவரை நிலைத்திருந்தார். அவரைப் போல நிலைத்திருந்து நாமும் இறையாட்சியின் பணியினை இவ்வுலகத்தில் செய்திட இறைவன் அழைக்கின்றார். நாம் அவரது அழைப்புக்கு செவி கொடுத்து அவரது உண்மைச் சீடர்களாக முயலுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக