இயேசுவைப்போல பயணிப்போம்.
மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் மரணம் என்பதை சந்தித்தே தீர வேண்டும். நாம் பிறந்த நாளில் இருந்து மரணத்தை சந்திக்கும் நாளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மனிதனும் இந்த உலகத்தில் எவ்வாறு வாழ்கிறோம் என்று சிந்திக்கின்ற பொழுது, ஒவ்வொருவரும் தனித்துவமானவர்களாக இருந்தாலும், பலரிடத்திலும் பல விஷயங்கள் பொதுவாக இருக்கின்றன. குறிப்பாக தன்னைவிட அடுத்தவர்கள் குறைவானவர்கள் என்ற எண்ணம். அந்த அடிப்படையில்தான் பல நேரங்களில் பல அறிவுரைகளை வழங்குபவர்களாக இருக்க ஆசைப்படுகிறார்கள். வழங்கும் அறிவுரைகளை அவர்கள் பின்பற்றுகிறார்களா? என்ற கேள்வியை எழுப்பும் பொழுது, இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கப்பட்டது போல, தன்னுடைய கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்காது, அடுத்தவன் கண்ணில் இருக்கக்கூடிய மரக்கட்டையை எடுப்பவர்களாகத் தான் நம்மில் பலர் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் ஆண்டவர் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், இந்த சமூகத்தில் நாம் எதையெல்லாம் விதைக்க விரும்புகிறோமோ, அதை எல்லாம் நாம் முதலில் விதைக்க கூடியவர்களாக இருப்போம். நமது வாழ்வில், நமது சொல்லில், நமது செயலில், அதனை வெளிப்படுத்துவோம். அதன்பிறகு அடுத்தவர் வாழ்விலும் அவை வெளிப்பட வேண்டும் என்பதை நாம் கற்பிக்கலாம். பொதுவாக வார்த்தைகளில் கற்பிப்பதை விட, செயல்களில் ஈடுபடுவது தான் சிறந்தது எனக் கூறுவார்கள். நாம் நேர்மையாளர்களாக இருந்தால், நம்மைப் பார்க்கின்றவர்கள் நேர்மையாளர்களாக உருவாவார்கள். நாம் ஒரு காரியத்தில் நேர்மையானவர்கள் என்ற பெயரைப் பெறும் பொழுது, நம்மை நாடி வருபவர்கள் நம்மிடம் நேர்மையற்ற முறையில் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வரமாட்டார்கள். இவர் நேர்மையானவர். எனவே நாமும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவார்கள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவ்வாறு தான் இந்த உலகத்தில் இருந்தார். தான் எதையெல்லாம் செய்ய வேண்டும்? இந்த உலகம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என அறிவித்தாரோ, அதனை அவர் வெறும் வார்த்தைகளாக அறிவித்து விட்டுச் செல்லவில்லை. அவர் அறிவித்தவைகளை தன் வாழ்வில் கடைப்பிடித்தார். அவர் எதை எல்லாம் கற்பித்தாரோ, அதை எல்லாம் வாழ்வாக வாழ்ந்து காண்பித்தார்.
எனவே தான் அந்த ஆண்டவர் இயேசுவை பலரும் பின்பற்றக் கூடியவர்களாக இன்று மாறி இருக்கிறார்கள். நாமும் ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகிறோம். ஆனால் பல நேரங்களில் நாம் அனைவரும் நம்மிடம் இருக்கும் குறைகளை சரி செய்து கொள்ளாது, நமது குறைகளை மறைத்து, பிறரின் குறைகளை பெரிதுபடுத்தக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோம். அவ்வாறு செயல்படாது, பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த காலங்களிலே, நாம் இந்த சமூகத்தில் நல்ல மனிதர்களாக இயேசுவைப்போல பயணிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக