இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தை வழியாக என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆசை யாரை விடும்! - அது அனைவர் மனதிலும் வேரை விடும் என்பார்கள். மனிதர்களாகிய நமக்கு பலவற்றின் மீது நாட்டம் இருக்கிறது. ஆனால் நாம் விரும்பக்கூடியதும் நாம் நம்பக் கூடியதும் எது என்பதை உணர்ந்து கொள்ள இன்றைய வாசகங்கள் நமக்கு உதவி செய்கின்றன.
இன்றைய முதல் வாசகத்தில் எரேமியா இறைவாக்கினர் நமது நம்பிக்கை என்பது ஆண்டவரின் மீதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். மனிதர் மீது நம்பிக்கை வைப்பவர் பாலை நிலத்தில் உள்ள புதரைப் போல இருப்பர்.
ஆனால் கடவுள் மீது நம்பிக்கை வைப்பவர், நீரோடையோரம் நடப்பட்ட மரம் போல இருந்து பசுமையாக பருவகாலத்தில் பலன் தரக் கூடியவர்களாக இருப்பர் என எரேமியா இறைவாக்கினர் குறிப்பிடுகிறார். எரேமியா இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு ஏற்ப நாம் நமது வாழ்வில் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இந்த சமூகத்தில் பயணிக்கின்ற போது, நாமும் பலருக்கு பலன் தரக் கூடியவர்களாக விளங்கிட முடியும்.
பழைய ஏற்பாட்டில் நோவா ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் பேரழிவிலிருந்து காப்பாற்றப்பட்டார்.
யாக்கோபு ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருந்ததால் எகிப்து நாட்டின் ஆளுநராக உயர்த்தப்பட்டார்.
சிறுவனாக இருந்த தாவீது ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டதால் கோலியாத்தை வெற்றி கொண்டார்.
எதிரிகளின் சூழ்ச்சியால் இன்னலுற்ற போதும் எஸ்தர் அரசி ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு செயல்பட்டதால், தனது இனம் முழுவதையும் அன்று காப்பாற்றினார்.
இத்தகைய ஒரு வாழ்வை வாழ்ந்தவர்கள் தான் தொடக்க காலத்தில் இருந்த இயேசுவின் சீடர்களும் கிறிஸ்தவர்களும்.
இவர்கள் தங்களிடம் இருந்ததை இல்லாதவரோடு பகிர்ந்தார்கள். பிறரின் துன்பத்தை தனது துன்பம் என எண்ணினார்கள். ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாய் அவருக்காக தங்களின் இன்னுயிரையும் இழக்கத் துணிந்தார்கள். இவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன என சிந்திக்கின்ற போது, அவர்கள் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்ட நீரோடையோரம் நடப்பட்ட மரங்களாக இருந்தார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு கற்பிக்கின்ற பாடமாக உள்ளது. இன்று இத்தகைய பாடத்தையே நாம் நமது வாழ்வுக்கான பாடமாக எடுத்துக்கொள்ள இறைவன் இன்றைய நாளில் நமக்கு அழைப்பு தருகின்றார்.
நாம் நிலையானது என கருதக் கூடிய எதுவும் இந்த உலகத்தில் நிலையானது அல்ல. நிலையானவர் இறைவன் ஒருவரே. இதையே பட்டினத்தார் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"ஊரும் சதமல்ல.
உற்றார் சதமல்ல.
உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல.
பெண்டிர் சதமல்ல.
பிள்ளை சதம் அல்ல.
நின் தேசத்தில் யாதும் சதமல்ல.
நின் தாள் ஒன்றே சதம் கச்சியேகம்பனே".
அதாவது ஊரும் நிரந்தரமல்ல. உற்றுப்பெற்ற பெயரும் நிரந்தரமல்ல.
தேடிய செல்வமும், கட்டிய மனைவியும், கொண்டு வந்த சீரும் பெற்ற பிள்ளையும் எதுவும் நிரந்தரமல்ல இந்த உலகத்தில். நிலையானவர் இறைவன் ஒருவரே. இந்த இறைவனை நாம் பற்றிக் கொள்ளக் கூடிய மனிதர்களாக இன்றைய நாளில் நாம் செயல்பட அழைக்கப்படுகின்றோம்.
இயேசு கிறிஸ்துவை பற்றிக் கொண்ட மனிதர்களாக நாம் மாறிடும் இப்போது அவர் மீது நம்பிக்கை கொண்ட மனிதர்களாக நாம் திகழுகின்ற போது இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கக் கேட்ட வார்த்தைகள் எல்லாம் வாழ்வாக்கப்படுவதை நாம் உணரமுடியும். ஆம்! ஏழைகளின் உள்ளம் மகிழ்வதும் பசியால் வாடுவோர் நிறைவு பெறுவதும், அழுவோர் சிரிப்பதும், நீதியின் பொருட்டு துன்புறுவோர் மகிழ்வதும், எப்போது நடக்குமாயின் நாம் ஆண்டவர் இயேசுவை இறுகப் பிடித்துக் கொண்டு, நமது வாழ்வில் நமது செயல்கள் மூலம், அவரின் இறையாட்சிப் பணிகளை செயல்படுத்தும் போதே இவை அனைத்தும் சாத்தியமாகும். துயருறுவோரின் துயர் துடைப்பதையே இறைவன் தனது பணியாகக் கொண்டிருந்தார். அப்பணியைச் செய்யவே நம்மையும் அழைத்தார்.
அவரை நம்பி அவரை பின்பற்றி அனுதினமும் அவரைத் தேடுகின்ற நமது வாழ்வில், அவர் மீதான நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும்.
பத்தோடு ஒன்று பதினொன்று. அத்தோடு நான் ஒன்று என்று வாழாது நாம் ஆண்டவரை இறுகப் பற்றிப் பிடித்துக் கொண்டவர்களாய் அவரது உயிர்ப்பை எடுத்துரைக்கக் கூடிய உண்மை சீடர்களாக இந்த சமூகத்தில் திகழ வேண்டும்.
தொடக்க கால கிறிஸ்தவர்கள் அப்படித் தான் வாழ்ந்தார்கள். ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பை அறிவித்தார்கள். ஆண்டவர்
இயேசுவின் உயிர்ப்பை அறிவித்த போது பல இன்னல்களை அவர்கள் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இன்னல்களுக்கு மத்தியிலும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பைக் குறித்து ஆழமாக சிந்தித்தார்கள். மாட்சிக்குரிய உடலோடு நாமும் அவரில் உயிர் பெறுவோம் என்பதை வலியுறுத்தினார்கள். அந்த ஆண்டவரின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராய் அவருக்காக தங்கள் இன்னுயிரையும் இழக்கத் துணிந்த நமது முன்னோர்களை நினைவில் கொண்டு, நாமும் அவர்களைப் போல அறச்செயலை முன்னெடுத்தவர்களாய் இறையாட்சியை இம்மண்ணில் மலரச் செய்யக்கூடிய மகத்துவமான மனிதர்களாக வாழ, நமது நம்பிக்கையை மனிதர் மீது அல்ல, இறைவன் மீது வைக்கக் கூடிய மனிதர்களாக மாறிட இந்த நாள் அழைப்பு தருகிறது. இறைவன் மீது நமது நம்பிக்கையை வைத்து நமது வாழ்நாளை நகர்த்துவோம். நாம் நீரோடையோரம் நடப்பட்ட மரமாக இருந்து பருவ காலத்தில் பலன் தரக் கூடியவர்களாக நம்மை இறைவன் மாற்றுவார் என்ற
நம்பிக்கையோடு தொடர்ந்து இந்த திருப்பலியில் இணைந்து பக்தியோடு ஜெபிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக