நேர்மையோடும் உண்மையோடும் வாழ ...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று நாம் தாய் திருஅவையாக இணைந்து புனித அருளானந்தரின் திருநாளை சிறப்பிக்க திருஅவை நமக்கு அழைப்பு தருகிறது.
ஜான் என்னும் பெயர் கொடுக்கப்பட்டதால் என்னவோ, திருமுழுக்கு யோவான் போலவே வாழவும் இறக்கவும் செய்கின்றார்.
1693 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் அருளானந்தர் கொலை களமாகிய ஒரியூரை நோக்கி குதிரைவண்டியில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டார். அவருடைய உடலெங்கும் காயங்கள் ஏற்பட்டு, இரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்தது. அப்போது அவர் புல்லூர் என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, அருளானந்தரின் நிலைகண்டு அவர்மீது பரிதாபப்பட்ட ஓர் இந்துப் பெண்மணி தன்னுடைய வீட்டிலிருந்து கொஞ்சம் மோர் கொண்டு வந்து, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார். அதை அன்போடு பருகிய அருளானந்தர் அந்தப் பெண்மணியிடம், “இந்த ஊரின் பெயர் என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “புல்லூர்” என்றார். அருளானந்தர் அவரிடம், “இனிமேல் இந்த புல்லூர் என அழைக்கப்படாது, மாறாக நெல்லூர் என அழைக்கப்படும்” என்று ஆசிர்வதித்து சென்றார்.
அவர் ஆசிர்வதித்தனால், இன்றைக்கு அந்த ஊர் நெல் விளையும் ஊராக விளங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வூரைச் சுற்றியுள்ள ஊர்கள் அனைத்தும் வறண்டு கிடக்கும்போது இந்த ஊர்மட்டும் வளம்கொழிக்கும் ஊராக இருப்பதைப் இன்றும் காண முடிகிறது.
உண்மையைச் சொல்லும் போதும், நன்மையை செய்யும்போதும், இன்னல்களை சந்திக்க வேண்டும் என்பது இயல்பான ஒன்று. இன்னல்களை சந்திக்கின்ற நேரங்களில் நாம் நமது சுய இயல்பை மாற்றிக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை, இன்றைய நாள் வாசகங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
உயிர் போகும் என தெரிந்திருந்தும், திருமுழுக்கு யோவான் அரசனின் குற்றத்தை சுட்டிக் காட்டினார். அரசனது தவறை சுட்டிக் காட்டுவதால் தண்டனைக்கும் அவரது கோபத்திற்கும் உள்ளாக நேரிடும் என அறிந்திருந்தும் தன்னுடைய இயல்பை மாற்றிக் கொள்ளாது, இறையாட்சியின் மதிப்பீடுகளை தன் வாழ்வில் வெளிப்படுத்திக் கொண்டிருந்த திருமுழுக்கு யோவான் அநீதியை, தீமையை சுட்டிக்காட்டுகிறார். நாம் வாழுகின்ற இந்த சமூகத்தில், இடத்திற்கு ஏற்றார் போல நிறத்தை மாற்றும் பச்சோந்தியாய் மாறிக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களுக்கு மத்தியில் நாம், திருமுழுக்கு யோவானைப் போல, நேர்மையோடும் உண்மையோடும் வாழ இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக