வார்த்தை வாழ்வாகட்டும்....
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது.
யோவான் 1:1
வார்த்தையான இறைவன் அனுதினமும் நம்மோடு பல வழிகளில் உரையாடுகிறார்....
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.
எபிரேயர் 4:12 நாம் வாசிக்கிறோம்...
இன்றைய நாள் வாசகங்கள் அனைத்தும் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்தும் நமது உள்ளத்து எண்ணங்களை குறித்தும் சிந்திக்கவும் சீர்தூக்கி பார்க்கும் நமக்கு அழைப்பு விடுக்கின்றன.
U
உள்ளத்தின் நிறைவை வாய் பேசும். (லூக்கா 6:45) என்ற விவிலிய வார்த்தைகளுக்கு ஏற்ப, ஒரு மனிதனின் எண்ணங்களே அந்த மனிதனை இச்சமூகத்தில் எத்தகைய குணம் கொண்ட மனிதன் என்பதைப் பிரதிபலிக்கிறது.
நமது வார்த்தைகளைக் கொண்டே நாம் அறியப்படுவோம் என்பதை இன்றைய முதல் வாசகம் சல்லடையில் சலிக்கின்ற போது தூசி தங்குவது போல நமது சொற்களில் இருக்கும் மாசுக்களும் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் மூலம் வெளிப்படுகின்றன என்பதை நமக்கு எடுத்துரைக்கின்றன.
எலும்பு இல்லாத நாக்கு எப்படி வேண்டுமானாலும் பேசும் என்பதற்கிணங்க நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப மாற்றி மாற்றி பேசக்கூடிய, மாசுபடிந்த வார்த்தைகளை உதிர்க்கும் போக்கானது இன்று மனிதர்கள் மத்தியில் வளர்ந்துக் கொண்டே வருகிறது...
திருவள்ளுவர் குறிப்பிடுவதுபோல ...
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு.
தீயினால் சுட்ட புண் ஆறிவிடும் ஆனால் நாவினால் உண்டாக்கிய வழிகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்பது மறுக்கவியலாத உண்மை.
நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் இந்த சமூகத்தில் வெறும் வார்த்தைகளாக மட்டுமே இருந்து விடுவது அல்ல. நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் இந்த உலகத்தில் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகின்றன. வார்த்தைகளால் நாம் ஒருவரை குணப்படுத்தவும் முடியும் இரணப்படுத்தவும் முடியும் ...
பல நேரங்களில் போர்க்கருவிகள் தருகின்ற வலியை விட வார்த்தைகள் தருகின்ற வலியே தாங்க இயலாத ஒன்றாக உள்ளது.
நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகள் அழிவை உண்டாக்காமல் ஆன்மாவை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும்....என்பதையே இன்றைய வாசகங்கள் நமக்கு வலியுறுத்துகின்ற வாழ்வுக்கான பாடமாக உள்ளது.
நாம் பின்பற்றுகின்ற இந்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வாழ்வு இதைத்தான் நமக்கு வலியுறுத்துகின்றன. இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது அவரது வார்த்தைகள் இந்த மண்ணில் இருந்த பலருக்கு ஆறுதலைத் தந்தது... சமூகத்தால் புறம்தள்ளப்பட்ட அவர்களுக்கு புத்துணர்வைத் தந்தது...பாவி என்று ஓரம் கட்டப் பட்ட மக்களை சமூகத்தோடு ஒன்றிணைக்க செய்தது ... ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளை போலவே நமது வார்த்தைகளும் அனுதினமும் அமைய வேண்டும் ...
ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். (லூக்கா 6:44) இவ்வார்த்தைகளுக்கு ஏற்ப நமது வார்த்தைகளாள் நாம் யாரை இந்த சமூகத்தில் பிரதிபலிக்கிறோம் என்பது அறியப்படுகிறது. நமது வார்த்தைகள் ஆண்டவர் இயேசுவை இந்த சமூகத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் இந்த நாளின் மையச் செய்தியாக உள்ளது....
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போலவே இந்த சமூகத்தில் நாம் நமது வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக பல நேரங்களில் பார்வையற்றவர் பார்வையற்ற இன்னொருவருக்கு வழி காட்டுவது போலவும், தன் கண்ணில் மரக்கட்டையை வைத்துக்கொண்டு அடுத்தவர் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுக்க முயல்பவர் போலவும் தான் பல நேரங்களில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்...
பல நேரங்களில் இறைவனது வார்த்தைகளை நமது வார்த்தைகளாக மாற்றி கொண்டு பயணிப்பது என்பது எளிதான காரியமல்ல என நாம் என்னலாம்....
சுவாமி விவேகானந்தர் கூட தான் இறைவனோடு உரையாடியதாக இவ்வாறு குறிப்பிடுவார்கள்....
நான் இறைவனிடம் எனக்கு வலிமை தாரும் என்று கேட்டேன். ஆனால் அவர் கொடுத்ததோ நெருக்கடியான சூழ்நிலைகள்.
நான் எனக்கு மகிழ்ச்சியைத் தாரும் எனக் கேட்டேன். அவரோ மகிழ்ச்சியற்ற மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
அறிவைத் தாரும் எனக் கேட்டேன். அவரோ வாழ்வின் புதிர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.
எனக்கு நிம்மதியை தாரும் எனக் கேட்டேன். ஆனால் அவரோ பிறருக்கு உதவச் சொன்னார்.
சலுகைகளை தாரும் எனக் கேட்டேன். அவரோ வாய்ப்புகளை வழங்கினார்.
நான் விரும்பியது எதையும் கடவுள் எனக்கு தரவில்லை. ஆனால் எனக்கு தேவையானதை எல்லாம் இறைவன் தந்தார் என்ற விவேகானந்தரின் வார்த்தைகளுக்கு ஏற்ப பல நேரங்களில் நாம் நினைப்பதற்கு மாறாக பலவற்றை இறைவன் நமது வாழ்வில் நமக்கு தரலாம் ஆனால் நாம் எல்லா சூழ்நிலையிலும் இறைவனது வார்த்தைகளை வெளிப்படுத்த மனிதர்களாக இச்சமூகத்தில் விளங்க வேண்டும் ...
எனவே இந்த நல்ல நாளில் நாம் பயன்படுத்துகின்ற வார்த்தைகளை குறித்து சிந்திக்கவும், சீர்தூக்கிப் பார்க்கவும் இந்த நாளில் இறைவன் அழைப்பு தருகிறார் ...என்பதை உணர்ந்து கொள்வோம். இறைவனின் குரலுக்கு செவி கொடுத்து இனிய வார்த்தைகளால் இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவரும் இன்புற்று வாழ இனிய வார்த்தைகளை நமது வார்த்தைகளாகிக்கொண்டு பயணிக்க இறையருள் வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக