நிறைகளை வாழ்வாக்க...
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்றைய நற்செய்தியில் மூதாதையர் மரபை சீடர்கள் மீறுவதாக இயேசுவிடத்திலே பரிசேயரும், மறைநூல் அறிஞரும் குற்றம் சுமத்துகின்றனர்.
பொதுவாக, யூதர்களுக்கு சட்டம் என்பது, கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகளும், பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து புத்தகங்களும் தான். முதல் ஐந்து புத்தகங்களில் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால், அவற்றிற்கு சரியான புரிதலோ, விளக்கமோ இல்லை. இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக, கி.மு 4 மற்றும் 5 ம் நூற்றாண்டுகளில் மறைநூல் அறிஞர்கள் என்ற ஒரு புதிதாக குழு ஒன்று தோன்றி, அவர்கள் இந்த சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்க ஆரம்பித்தார்கள். இதுதான் மூதாதையர் மரபு அல்லது வாய்மொழிச்சட்டம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 3ம் நூற்றாண்டில், இந்த சட்டங்களுக்கான தொகுப்பும் வழக்கிற்கு வந்தது.
இயேசுவுக்கும், பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஆரம்பித்ததே இதில் தான். இயேசு சட்டங்களுக்கு எதிரானவர் அல்ல. மூதாதையர் மரபுகளையும் இயேசு மதிக்காதவரும் அல்ல. ஆனால், பொருளோ, அர்த்தமோ இல்லாத, காலச்சூழ்நிலையோடு ஒத்துப்போகாத, மக்களுக்கு எந்த பயனும் தராத சட்டங்கள் மாற்றப்பட வேண்டும், என்பது இயேசுவின் கருத்து. ஆனால், பரிசேயர்களுக்கு இத்தகைய மரபுகள் வாழ்வோடு கலந்தவை. அவை எத்தனை தலைமுறைகளானாலும் மதிக்கப்படக்கூடியவை. அவை போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எதிர்ப்பாக யார் வந்தாலும், எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அவற்றைக்கடைப்பிடித்தால், கடவுளை பெருமைப்படுத்துகிறோம், இல்லையென்றால், கடவுளை பழித்துரைக்கிறோம் என்று சொல்லி, கடவுளையும் இவற்றோடு தொடர்புபடுத்தினார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நமது வாழ்வு காண பாடம் :
காரணம் அறியாது எப்போதும் அடுத்தவரை குறை காணும் நோக்கத்தோடு பயணிக்கின்ற நபர்களை, இறைவன் அவ்வாறு பயணித்தல் கூடாது என்ற செய்தியினை இன்றைய நாள் வாசகங்கள் வழியாகத் தருகின்றார்.
இயேசுவின் சீடர்கள் கைகளை கழுவாததைப் பெரிய குற்றமாகக் கருதி, அதனை குறை சொல்லக் கூடிய மனப்பான்மையில் இருக்கின்றவர்களுக்கு ஏன் கைகள் கழுவப்பட வேண்டும் என்பதற்கான விளக்கத்தையும் தந்து, எப்போதும் குற்றம் காணும் மனநிலையோடு பயணிப்பதை விட்டு, நலமான பணிகளை முன்னெடுக்கும் நல்லவர்களாக மாறிட இறைவன் அழைப்பு தருகின்றார். அதே அழைப்பு தான் இன்று நமக்கும் தரப்படுகிறது. நம்மை சுற்றி எப்போதும் நம்மோடு இருப்பவர்களிடம் இருக்கும் குறைகளை மட்டுமே கண்டு கொண்டு வாழ்வை நகர்த்தாது, நிறைகளை கண்டுகொள்ளவும், நிறைகளை வாழ்வாக்கவும், உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
அதேசமயம் சட்டத்திற்காக மனிதன் இல்லை ....மனிதனுக்காக இயற்றப்பட்ட சட்டங்கள் என்பதை மனதில் நிறுத்துவோம் சட்டங்களின் அர்த்தம் அறிந்து அதனை பின்பற்றுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக