இறைவனுக்கு அர்ப்பணமாக்க...
இயேசுவில் அன்புக்குரியவர்களே!
ஆண்டவர் இயேசுவை கோவிலில் அர்ப்பணித்ததை இன்றைய நாளில் நாம் நினைவு கூருகிறோம். கோவிலில் இயேசுவை அர்ப்பணிப்பது அக்காலத்தில் நிலவிய யூதச் சடங்கு முறைகளுள் ஒன்றாக இருந்தது. இன்றைய காலகட்டத்தில் நாமும் ஆலயத்திற்கு செல்கிறோம். பலவற்றை காணிக்கையாக ஒப்புக் கொடுக்கிறோம் கடவுளுக்கு. ஆனால் நாம் ஒப்புக் கொடுக்கக்கூடிய அனைத்துமே அவரால் உண்டாக்கப்பட்டவை. அவரால் உண்டாக்கப்பட்டதை அவரிடமே நாம் காணிக்கையாக தருகின்றோம். நாம் இந்த காணிக்கையை வழங்கும் போது எத்தகைய மனநிலையோடு இருக்கிறோம்? என்பதை சிந்திக்க இன்றைய நாளில் அழைக்கப்படுகிறோம். ஏதோ கடமை இருக்கிறது, காணிக்கை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் நாம் காணிக்கையை கொடுக்கின்றோமா? இன்று பல இடங்களில் ஆடம்பர காணிக்கை கொடுக்க கூடிய நிகழ்வானது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதிகமான காணிக்கையை ஒரு குடும்பம் தரவேண்டும் என எண்ணுவது, அது பலரின் மத்தியில் அவர்களுக்கு கவுரவத்தை தரும் என்ற மனப்பான்மையோடு அவர்களை அச்செயலில் ஈடுபட வைக்கிறது.
நாம் அனுதினமும் ஆலயத்திற்கு செல்கிறோம். ஆண்டவரிடத்தில் எதை காணிக்கையாக்குகிறோம் என்பதை விட, எந்த மனநிலையோடு காணிக்கையை தருகிறோம் என்ற கேள்வியை உள்ளத்தில் எழுப்பி பார்ப்போம். கடமைக்காகவும், வீண் பெருமைக்காகவும், சுற்றத்தாரின் பார்வையையும் மனதில் கொண்டு நாம் காணிக்கைகளை ஆண்டவரிடத்தில் கொடுப்போமாயின், அது ஆண்டவருக்கு உகந்தது அல்ல. மாறாக, முழு மனதோடு எல்லாம் வல்ல இறைவனை மனதில் இருத்தி, நாம் செய்கின்ற அறச்செயல்கள் தான் இறைவன் விரும்புகின்ற காணிக்கை. கடவுள் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறார். இரக்கத்தை காணிக்கையாக இறைவனிடத்தில் சமர்ப்பிப்போம். ஆடம்பரங்களை தவிர்த்து, அமைதியான வழியில் வாழ்வை நடத்துவோம். அந்த வாழ்வை இறைவனுக்கு அர்ப்பணமாக்க இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக