திங்கள், 30 ஆகஸ்ட், 2021

இரவா....? பகலா....?(31.8.2021)

 இரவா....? பகலா....?

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
 இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
       ஒரு ஊரில் ஒருவன் இரண்டு நாய்களை வைத்து இருந்தான். வெள்ளை நிற நாய், கருப்பு நிற நாய். அவ்வப்போது இரண்டு நாய்களுக்கும் இடையே போட்டிகள் நடக்கும். சில நாட்கள், சில நேரங்களில், வெள்ளை நிற நாயானது வெற்றி பெறும். சில நேரங்களில் கருப்பு நிற நாயானது வெற்றிபெறும். இரண்டு நாய்களும் சண்டையிடும் பொழுது நாயின் உரிமையாளர் ஒரு குறிப்பிட்ட நாயின் மீது பந்தயத்தை கட்டுவார். அது எப்படி என தெரியவில்லை, அவர் எந்த நாயின் மீது பணத்தை கட்டுகிறாரோ, அந்த நாய்தான் வெற்றி பெறக் கூடியதாக இருந்திருக்கிறது. எப்படி இது சாத்தியமானது என்று கேள்வி எழுப்பிய போது, அவர் கூறினாராம், எந்த நாய்க்கு ஒரு வாரம் நான் உணவிட்டேனோ, அந்த நாயின் மீது தான் பந்தயம் கட்டுவேன் என்று கூறினாராம். 

               நம்மிடையே காணப்படும் இரவு பகல் என்ற இரண்டும் மனித வாழ்வில் இன்றியமையாததாக உள்ளது. இந்த இரவு பகலில் நாம் எதை சார்ந்த பணிகளை செய்து கொண்டிருக்கிறோம்? என்பது நம் ஒவ்வொருவரையும் பொறுத்தது. நாம் பகலுக்குரிய மக்களாகவா? அல்லது இருளுக்குரிய மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்க இன்றைய நாள் வாசகங்கள் அழைப்பு தருகின்றன.  



 பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே உருவாகிறது, இரவு பகல். நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றுதான், இந்த இரவும் பகலும்.  இரவும் நிரந்தரமல்ல, பகலும் நிரந்தரமல்ல. இரண்டும் மாறி மாறி வந்துகொண்டே தான் இருக்கின்றது.  

       பகலில் ஒரு செயலை செய்வதற்கு தெளிவாக நமக்கு கண் தெரியும்.  பகலில்  செய்யக் கூடிய செயலை பலரும் உற்று நோக்குவார்கள். ஆனால், இரவு எப்போதுமே கனவுக்கான இடமாகவே கருதப்படுகிறது.  இரவில் செய்யக்கூடிய செயல்கள் பெரும்பாலும் யாரும் அறியாதவையாகத் தான் இருக்கிறது.  யாரும் அறிய மாட்டார்கள் என்ற எண்ணம்தான், இரவில் பல தவறான செயல்களையும் செய்யத் தூண்டுகிறது.  எனவேதான் திருடுவதற்கு ஏற்ற நேரம் இரவாக இருக்கிறது. 

      நாம் இந்த மண்ணுலகில் இந்த இரவையும் பகலையும் குறித்து சிந்திக்கின்ற பொழுது,  பகலுக்குரிய மக்களாக,  அதாவது ஒளிக்குரிய மக்களாக நாம் வாழ இறைவன் அழைக்கின்றார்.  இருளுக்குரிய மக்களாக நாம் வாழ்வதை விட்டுவிட்டு,  பகலுக்குரிய, பலரும் பார்க்கும் வகையில், பல விதமான நல்ல செயல்களை செய்யக் கூடிய நல்லதொரு வாழ்வினை நாம் வாழ இறைவன் அழைக்கின்றார். 

அத்தகைய வாழ்வை நாம் மேற்கொள்ளும் பொழுது, இயேசுவிடம் காணப்பட்ட அதிகார போதனையானது நம்மிடமும் வெளிப்படும். நாம்  பகலில் பலரும் பார்க்கும் வண்ணம் பல நல்ல செயல்களைத் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.  நாம் செய்கின்ற நல்ல செயல்களை பார்ப்போர், தங்கள் வாழ்விலும் அந்த நற்செயலை செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். பகலுக்கு உரிய மக்களாக, ஒளிக்குரிய மக்களாக, நாம் இந்த சமூகத்தில் பயணிக்கின்ற போது, இயேசுவைப் போல யாருக்கும் அஞ்சாது துணிவோடு இந்த சமூகத்திலே பலவிதமான நற்செயல்களை செய்து கொண்டே, இயேசுவைப் போல பயணம் செய்ய முடியும்.

      நற்செயல்கள் செய்வதால் பலர் நம்மை சூழ்ச்சிக்கு உள்ளாக்கி, நம்மை நிலைகுலைய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படலாம்.  ஆனால் மனதில் நிறுத்துங்கள்! நாம் ஒளிக்குரிய மக்களாக, பகலுக்கு உரிய மக்களாக, ஒளியைச் சார்ந்தவர்களாக, நாம் ஆண்டவர் இயேசுவின் பணியினை மேற்கொண்டு இருக்கிறோம்.  

               நாம் இரவைச் சார்ந்தவர்களாக, யாரும் அறியாத செயல்களைச் செய்பவர்களாக இல்லாது, ஒளிக்குரிய மக்களாக இருக்கின்ற பொழுது,  உண்மையான உலகின் ஒளியான இறைவன், நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தி காத்தருள்வார்.


 இன்றைய வாசகங்களும், நாம் ஒளிக்குரிய மக்களாக இச்சமூகத்தில் பயணம் செய்ய அழைப்பு தருகின்றது. ஒளிக்குரிய மக்களாக பயணம் செய்கின்றபோது,  உண்மையை அதிகாரத்தோடு உரக்கச் சொல்வோம்.  அப்போது தீயது எண்ணக்கூடிய ஒவ்வொருவருமே நம்மை கண்டு அஞ்சுவார்கள்.  எப்படி அன்று  ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை கண்டு தீய ஆவிகள் அஞ்சியதோ, அது போல, தீமை நம்மைக் கண்டு அஞ்சும், நாம் ஒளிக்குரிய மக்களாக வாழும் போது. ஒளிக்குரிய மக்களாக வாழ்ந்திட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...