சொல்வதை செயலாக்கிட...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
உலக நாட்டத்தின்படி வாழாமல் ஆண்டவர் இயேசுவுக்கு உகந்த வாழ்வை வாழ இன்றைய வாசகங்கள் அழைப்பு தருகின்றன. அக்காலத்திலே இயேசு இந்த மண்ணில் வாழ்ந்த போது யூதர்களும், பரிசேயர்களும், சதுசேயர்களும் எத்தகைய மனம் படைத்தவர்களாக இருந்தார்கள் என்பதை இன்றைய நாள் நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். அவர்கள் வெளிப்படையாக ஆடம்பரங்களையும், முதன்மையான இடங்களையும் விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். ஆனால் ஆண்டவரை நம்பி அவரது பணியைச் செய்ய வருகிறவர்கள் எல்லாம் முதன்மையான இடத்தை அல்ல, உலகம் விரும்பக்கூடியவற்றை அல்ல, மாறாக இறைவன் விரும்பக்கூடியவற்றையே முன்னிறுத்தி, அதனை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்தக் கூடியவர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம்.
இன்று நாம் வாழுகின்ற உலகத்தில் பெரும்பாலும் பிறர் இப்படி இருக்க வேண்டும்! இப்படி வாழ வேண்டும் என பலவற்றை கற்பிக்கின்றோம். ஆனால் நாம் அவ்வாறு இருக்கின்றோமா? நாம் கற்பிப்பதை நமது வாழ்வில் நாம் செயல்படுகின்றோமா? என்ற கேள்வியை எழுப்பி பார்க்க இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார். பரிசேயரும் சதுசேயரும் மக்களை பல விதமான சட்ட திட்டங்களை முன்னிறுத்தி, அவர்கள் இதெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அவர்கள் போதித்ததை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை. அதை ஆண்டவர் இயேசு கிறிஸ்து சுட்டிக் காட்டக் கூடியவராக இன்றைய வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். நமது வாழ்வில் நாம் வாய் வழியாக மற்றவருக்கு போதிப்பதை விட நமது செயல் வழியாக மற்றவர்கள் நம்மிடம் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொள்வதற்கு இறைவன் இன்றைய நாளில் அழைப்பு தருகிறார். நாம் சொல்வதை விட செயலில் ஈடுபடுபவர்களாக இருக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு தருகின்றது.
இறைவன் தருகின்ற அழைப்பை உணர்ந்து கொண்டு, வாழ்வில்
சொல்வதை செயலாக்கிட இறையருளை வேண்டுவோம் இன்றைய நாளில். இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக