உடன் இருப்பவரை உணர்ந்து கொள்ள...
இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றைய வாசகங்கள் உடன் இருப்பவரை உணர்ந்து கொள்வதற்கு நமக்கு அழைப்பு தருகின்றன. ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் பல தடைகளைத் தாண்டி சாதனைகள் புரிய கூடிய மனிதராக மாறி, இந்த உலகிலேயே உயர்ந்த பதவி என கருதப்படுகின்ற அமெரிக்காவின் ஜனாதிபதியாகவும் மாறினார். அப்போது அவருடைய நண்பர் அவரிடம் சொன்னாராம், "கடவுள் உன்னோடு இருக்கிறார். எனவே தான் ஒவ்வொரு நாளும் நீ வளர்ந்து கொண்டே செல்கிறாய்" என்றாராம். அப்போது ஆபிரகாம் லிங்கன் கூறினாராம், கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் நான் கடவுளோடு இருக்கின்றேனா? அந்த கடவுளின் விருப்பத்தின் படி தான் செயல்படுகின்றேனா? அவரை உணர்ந்து இருக்கின்றேனா? என்பதுதான் என் முன்பு இருக்கக்கூடிய கேள்வியாக இருக்கிறது என்று கூறினாராம்.
இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பரபரப்பான இந்த உலகத்தில், பல வேலைகளுக்கு மத்தியில் நம் உடன் இருப்பவர்களை உணர்ந்து கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும், அவர்களோடு நேரம் செலவிடுவதற்கும், நேரமில்லை என்று சொல்லக் கூடியவர்களாகத் தான் நாம் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் மோசேவுக்கு பிறகாக, யோசுவா தலைமைத்துவ பொறுப்பை ஏற்று, இஸ்ரயேல் மக்களை கடவுள் வாக்களித்த கானான் நாட்டிற்கு அழைத்துச் செல்லக் கூடிய மிகப்பெரிய சவாலான பணியினை செய்து முடிக்கிறார். எப்படி யோசுவா இந்த பணியினைச் செய்தார்? என சிந்திக்கின்ற போது விவிலியம் தெளிவாக கூறுகிறது, அவர் தன்னுடன் இருந்த ஆண்டவரை உணர்ந்திருந்தார். அவரது உடனிருப்பை ஒவ்வொரு நாளும் அனுபவித்தார். அவருடைய வார்த்தைகளின் படி தன் வாழ்வை அமைத்துக் கொண்டார். எந்த முடிவை எடுத்தாலும் அதை இறைவனுடைய சித்தத்திற்கு கையளித்தவராய், இறைவனோடு கலந்துரையாடியவராய், இறைவனது விருப்பம் எது என்பதை அறிந்து, அதனைச் செய்யக் கூடிய மனிதராக இந்த உலகத்தில் பயணம் செய்தார். அதன் விளைவு தான் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டுக்குள் இஸ்ரயேல் மக்களை அழைத்துச் செல்லக் கூடிய மிகப்பெரிய மாபெரும் பணியை செய்தவராக யோசுவா திகழ்ந்தார்.
இன்றைய இரண்டாம் வாசகம் கூறுகிறது, கணவன் மனைவி உறவைப்பற்றி. ஏன் கணவன் மனைவி உறவுக்கும் இன்றைய நாளுக்கும் என்ன சம்பந்தம் என சந்திக்கின்ற போது, உடன் இருப்பவரை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றால், திருமணம் என்ற அருள்சாதனத்தின் வழியாக, உனக்கு நான்- எனக்கு நீ! உன்னுடைய இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும், நான் உனக்கு பிரமாணிக்கமாய் இருப்பேன் என, கடவுளின் முன்பாக கொடுக்கப்பட்ட வாக்கினை நிறைவேற்றக் கூடிய தம்பதியர்களாக இன்று ஒவ்வொரு குடும்பத் தலைவரும், தலைவியும் இருக்கிறார்களா? என்ற கேள்வியை சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.
இறைவன் எப்படி நம்மோடு எப்போதும் உடன் இருக்கிறாரோ, அதுபோலத்தான் நம்முடைய இன்ப துன்பங்களில் நமது உறவுகள் உடன் இருக்கின்றன. அது கணவன் மனைவி உறவாக இருக்கலாம், பெற்றோர் பிள்ளை உறவாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம், அல்லது அண்ணன் தம்பிகளாக இருக்கலாம். ஏதோ ஒரு வகையில் யாரோ ஒரு நபர் எப்போதும் நம்மோடு இருக்கின்றார். அவர்களை நாம் எப்படி புரிந்து கொள்கிறோம்? நமது தேவைக்கு பயன்படுத்தக்கூடிய மனிதர்களாக இன்று நாம் இருக்கின்றோமா? அல்லது உண்மையாகவே உடன் இருப்பவரின் அன்பையும் அக்கறையையும் கரிசனையும் புரிந்து கொள்பவர்களாகவும், அதையே அவர்களுக்கு திரும்பி காட்ட கூடியவர்களாகவும் நாம் இச்சமூகத்தில் இருக்கின்றோமா? என்ற கேள்வியை நமக்குள்ளாக எழுப்பிப் பார்த்து, சிந்தித்திட இன்றைய நாள் வாசகம் நமக்கு அழைப்பு தருகிறது.
ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணிலே வாழ்ந்த போது, பலவிதமான அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார். அவருடன் பயணித்தவர்கள் எல்லாம் அவரிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக் கொண்டார்கள். எந்த அளவிற்கு நன்மைகளை மற்றவர்கள் பெற்றுக் கொண்டார்களோ, அதே அளவிற்கு இயேசுவின் மீது அவர்களுக்கு வெறுப்பும் இருந்தது. காரணம் அந்த மக்களின் குறைகளை அவர் சுட்டிக்காட்டினார். அவர்களிடம் இருக்கக்கூடிய தவறான உணர்வுகளை பட்டியலிட்டார். இது தவறு, இது இறை விருப்பத்திற்கு ஏற்றது அல்ல என்பதை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைத்தார். எனவே தான் ஆண்டவர் இயேசுவின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல், அவரை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு பலர் அவரை விட்டு விட்டுச் சென்றார்கள். ஆனால் இயேசு தன்னுடன் இருந்த தனது சீடர்களை நோக்கிக் கேட்டார், நீங்களும் என்னை விட்டுச் செல்ல எண்ணுகிறீர்களா? என்றார்.
அப்போது பேதுரு கூறினார், நாங்கள் யாரிடம் செல்வோம்! நிலை வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே இருக்கின்றன, என்றார். இந்த பேதுருவைப் போல நாம் இந்த உலகத்தில் இருக்க அழைக்கப்படுகின்றோம்.
நம்முடன் இருப்பவர்கள் நமக்கு பல நேரங்களில் அறிவுரை வழங்குகிறார்கள் என்றால், அவர்கள் அறிவாளிகள் என்பதால் நமக்கு அறிவுரை தரவில்லை. அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்பதற்காக அவர்கள் நமக்கு அறிவுரை வழங்குவதில்லை. மாறாக, நமது வாழ்வு நல்ல வாழ்வாக இருக்க வேண்டும்.
நமது வாழ்வில் நாம் மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் அனுபவத்தை நம்மிடையே பகிருகிறார்கள். அதனை உள்வாங்கிக் கொண்டு, அவர்கள் காட்டுகின்ற வழியில் பயணித்தால், நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? என்பதை சிந்தித்தவர்களாய், நாம் நமது வாழ்வில் செயல்பட அழைக்கப்படுகின்றோம்.
இன்று பல நேரங்களில் நம்மை விட மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல, என்ற எண்ணம் தான் நம் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டிருக்கிறது. எனவே தான், பல நேரங்களில் நல்ல வழிகளை நம் உடனிருப்பவர்கள் கற்பித்தாலும், அதைக் கண்டு கொள்ளாதவர்களாகவும் ஏற்றுக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றோம்.
எப்படி இயேசுவைப் புறக்கணித்துச் சென்றார்களோ, அவர்களைப் போல பல நேரங்களில் நம்முடன் இருக்கக்கூடிய உறவுகளை நம்முடன் இருக்கக்கூடிய சொந்தங்களை நாம் விட்டு விலகக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம். ஆனால் விலகிச் செல்வதில் அல்ல இன்பம், உடனிருப்பதில், இணைந்திருப்பதில் தான் இன்பம் அடங்கி இருக்கிறது. நீங்கள் இனி, இருவரல்ல, ஒருவர் என்ற வார்த்தைகளை இறைவன், திருமணம் என்ற அருட்சாதனத்தில் வழங்குவது போல, நாம் இந்த உலகத்தில் இணைந்திருப்பதற்காகவே இறைவன் நம்மை அழைக்கின்றார். கடவுளோடும், சமூகத்தோடும், இயற்கையோடும், உறவுகளோடும், நாம் இணைந்து இன்புற்று இச்சமூகத்தில் வாழ வேண்டும். அவ்வாறு வாழுகின்ற போது, இறைவன் விரும்பக் கூடிய மக்களாக நாம் இம்மண்ணிலே வலம் வர முடியும். அதற்கு நாம் முதலில் நம்மிடம் இருப்பவர்களை, நம் அருகில் உள்ளவர்களை உணர்ந்துகொள்ளவேண்டும். உடன் இருப்பவர்களைக் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் நன்மைக்கு நம்மாலான உதவிகளை செய்யவேண்டும். நாமும் நமது நன்மைக்காக, நம்முடன் இருப்பவர்கள் தருகின்ற அறிவுரைகளை நமது வாழ்வில் சீர்தூக்கிப் பார்த்து அதனை செயலாக்கப்படுத்த வேண்டும். உடனிருக்கும் இறைவனையும், இயற்கையையும், உறவுகளையும், அறிந்து கொள்கின்ற போது தான், இந்த மண்ணிலே நாம் ஆண்டவர் இயேசுவின் உண்மைச் சீடர்களாக, பேதுருவைப் போல நிலை வாழ்வைத் தருகின்ற இறைவனை நோக்கி
பின் செல்லக் கூடியவர்களாக மாறிட முடியும். அவ்வாறு மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக