புதன், 18 ஆகஸ்ட், 2021

எண்ணிப் பாராமல் எதையும் செய்யாதே!(19.08.2021)

எண்ணிப் பாராமல் எதையும் செய்யாதே!

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
  கடவுளின் முன்பு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்.  கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பதைவிட வாக்கு கொடுக்காமல் இருப்பதே நலம் என்கிறது சபை உரையாளர் புத்தகம். 

கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.
சபை உரையாளர் 5:5


கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்,  நாம் மண்ணுலகில் இருக்கிறோம்.  எனவே, கடவுளின் முன் வாக்கு கொடுப்பதற்கு முன்பு எண்ணிப் பாராமல் செயல்படாதே  என்கிறது சபை உரையாளர் புத்தகம்.

கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே; எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்; நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்; எனவே, மிகச்சில சொற்களே சொல்.
சபை உரையாளர் 5:2


கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.
சபை உரையாளர் 5:4



                    இன்றைய நாள் வாசகங்களுக்கும் இவ்வார்த்தைகளுக்கும் இன்று நெருங்கிய தொடர்பு இருப்பதை உணர முடிகிறது. இன்றைய முதல் வாசகத்தில் இப்தா வெற்றிக்கு முன்பாகவே ஆண்டவரிடத்தில் வாக்கு கொடுக்கிறார்.  வெற்றி பெற்றால் நான் முதலில் ஊருக்குள் நுழையும் போது நான் யாரை பார்க்கிறேனோ,  என்னை வரவேற்க யார் ஓடி வருகிறாரோ அவரை பலியிடுகிறேன் எனக் கூறுகிறார்.  அதற்கு ஏற்ற வகையில் அவர் வெற்றியை பெற்றுவிட்டு வரும்போது தனது ஒரே மகளான தனது அன்பு மகள் அவரை எதிர்கொண்டு வருவதை காண்கின்றார்.  உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும்,   கடவுளுக்கு கொடுத்து விட்டோமே வாக்கை,  எனவே அந்த வாக்கை நிறைவேற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார். 

        அக்காலத்தில் மனித பலி என்பது இருந்த சமயம். அதனை இன்றைய காலகட்டத்தோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது,  எண்ணிப் பாராமல் எதையும் செய்யக் கூடாது என்பதை இன்றைய வாசகம் நமக்கு உணர்த்துகிறது. 

            இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட,  கடவுள் திருமண விருந்துக்கு பலருக்கு அழைப்பு தருகிறார். அழைக்கப்பட்ட பலர் அவரது அழைப்பை உதாசீனப்படுத்துகிறார்கள். ஆனால், அதன் பிறகு இறைவன், வீதியில் செல்லக் கூடிய
அனைவரையும் அழைக்கின்றார்.  அப்படி வருபவர்கள்,  அழைக்கப்பட்ட திருமண விருந்துக்கு ஏற்ற வகையில் தகுதி உள்ளவர்களாக தங்களை மாற்றிக் கொள்ளாதிருப்பதை இறைவன் சாடுவதாக இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்க கேட்டோம். 

      இறைவன் நமக்கும் பலவிதமான வாய்ப்புகளை இந்த சமூகத்தில் தருகிறார்.  அவர் தருகின்ற வாய்ப்புகளை பல நேரங்களில் நாம் உதாசீனப்படுத்திவிட்டுச் செல்பவர்களாக இருக்கிறோம்.  பல நேரங்களில் வாய்ப்புகளை உதாசீனப்படுத்துபவர்களை விட்டுவிட்டு,  எந்தவித எதிர்பார்ப்புமின்றி இறைவன் நமக்கு பலவிதமான வாய்ப்புகளை எப்படி சாலையில் போவோர் வருவோரை திருமண விருந்துக்கு அழைத்தாரோ அது போல,  நமக்கு வாய்ப்புகளை வழங்குகிறார்.  அவர் தருகின்ற அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு இந்த சமூகத்தில் பயணம் செய்ய நாம் அழைக்கப்படுகிறோம்.  ஆனால் பல நேரங்களில் கடவுள் தருகின்ற வாய்ப்புகளை புரிந்து கொள்ளாது உதாசீனப் படுத்துபவர்களாகவும், ஒரு வேளை வாய்ப்பை பயன்படுத்தினாலும் கூட,  அதற்கேற்ற வகையில் நம்மை தகுதிப்படுத்திக் கொள்ளாதவர்களாகவுமே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். 

    நாம் வாழும் இந்த உலகத்தில் நமது செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க இன்றைய நாளில்  அழைப்பு தரப்படுகிறது.  எதையும் செய்வதற்கு முன்பாக எண்ணிப் பாராது, என்ன நடக்கும், இனி என்ன செய்வது என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாது நாம் செய்யக்கூடிய செயலால்,  இந்த சமூகத்தில் பலவிதமான அநீதிகள் உதயமாகின்றன.  அதுபோலத் தான் நமக்கு கொடுக்க கூடிய வாய்ப்புகளை நாம் உதாசீனப்படுத்தும் போதும்,  அல்லது அதற்கேற்ற வகையில் தகுதிப்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் போதும் இறைவனின் அன்பிலிருந்து விலகி நிற்கக் கூடியவர்களாக நாம் வாழுகின்றோம்.  நாம் வாழ்கின்ற இந்த உலகத்தில் நமது செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்த்து, நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு,  ஆண்டவர் தருகின்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தவும், எதையும் எண்ணிப் பார்த்து செயல்படவும் இன்றைய நாளில் இறையருளை  இணைந்து வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...