வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

அன்புப் பணியாற்ற...(28.08.2021)

 அன்புப் பணியாற்ற...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 28 சனி; கிழமை

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



இன்று நாம் தாய்த் திருஅவையாக இணைந்து புனித அகுஸ்தினாரை நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.  புனித அகுஸ்தினார் மிகப்பெரிய இறையியலாளர்.  ஆனால் இவரது இளமைப் பருவம் என்று பார்க்கின்ற போது, சமூகத்தில் தீயதெனப் படக்கூடிய அனைத்து விதமான தீமைகளின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தவர் அகுஸ்தினார்.  ஆனால் ஆண்டவரின் வார்த்தைகளை அவர் கேட்டபோது உள்ளத்தில் மாற்றம் அடைந்தவராய் இறைவார்த்தையை எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.  அன்பே அனைத்திற்கும் ஆணிவேர் என்பதை கண்டு கொண்டவராய்,  ஆண்டவர் இயேசுவின் மீது அதீத அன்பு கொண்டு, இந்த சமூகத்தில் அன்புப் பணியாற்றத் தொடங்கியவர்.  அறநெறிக்கு புறம்பாக வாழ்ந்த தன் வாழ்வை மாற்றிக் கொண்டு அறநெறியோடு ஆண்டவரின் வார்த்தைகளை மனதில் இருத்தி, இந்த சமூகத்தில் அன்பை விதைக்கும் மகத்துவமான பணியில் ஈடுபட்டவர் புனித அகுஸ்தினார் அவர்கள்.  

இந்த அன்பைக் குறித்தே இன்றைய முதல் வாசகத்தில், பவுல் தெசலோனிக்க நகர மக்களுக்கு கூறுகிறார். கடவுள் நம்மை அன்பு செய்வது போல நாமும் அடுத்தவரை அன்பு செய்ய வேண்டும் என அனைவருக்கும் அன்பை கற்பிக்கின்றார் புனித பவுல். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட ஒருவர் தன் பணியாளர்களை அழைத்து ஒவ்வொருவருக்கும் அவரவர் திறமைக்கு ஏற்ற வகையில் சில தாலந்துகளை கொடுத்து சில நாள் கழித்து அவற்றை திரும்பக் கேட்கின்றார். கொடுத்ததை இருமடங்காக மாற்றியவரை பாராட்டுகின்றார்.  ஆனால் கொடுத்ததை அப்படியே புதைத்து வைத்து அதை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கக் கூடியவரை சாடக் கூடியவராகவும், தண்டிக்கக் கூடிய நபருமாக அவர் இருக்கின்றார்.  

இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இறைவன் ஒருவர் மற்றவரை அன்பு செய்ய நம்மை அறிவுறுத்துகின்றார். அவரது வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு இந்த சமூகத்தில் அனைவரையும் அன்பு செய்யக் கூடியவர்களாக, அரவணைக்கக் கூடியவர்களாக நாம் மாறுகின்ற போது,  இறைவன் நம்மைப் பார்த்து பெருமிதம் கொள்பவராகவும், நம் மீது அதீத அன்பைப் பொழியக் கூடியவராகவும் இருக்கின்றார். ஆனால் இறைவன் உணர்த்துவதை உணர்ந்து கொள்ளாது,  சக மனிதனை ஏற்றுக்கொள்ளாமல்,  சாதி, மதம், இனம், மொழி என பல பாகுபாடுகளை முன்னிறுத்தி, அடுத்தவரை புறக்கணித்து, இறைவன் விதைத்த அன்பை வெறும் வார்த்தையாக மட்டும்  வைத்துக்கொண்டு பயணிப்பவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.



எப்படி ஒரு பணியாளன் கொடுத்த தாலந்தை  நிலத்தில் மறைத்து வைத்து, அதைக் கொண்டு போய் மீண்டும் அவரிடத்திலேயே கொடுக்கக் கூடியவனாக இருந்தானோ அவனைப் போல, இறைவன் கொடுக்கின்ற அன்பை அடுத்தவரோடு பகிர்ந்து கொள்ளாது, சாதி, மத, இன, மொழி பாகுபாடுகளை முன்னிறுத்தி பயணிக்க கூடியவர்களாய் நாம் இருப்போமாயின், இறைவன் நம்மையும்  புறம்தள்ளக் கூடியவராக மாறுவார் என்பதை உணர்ந்து கொண்டவர்களாய்,  இந்த மண்ணிலே வாழும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவரை அன்பு செய்யவும், ஒருவர் மற்றவர் நலனில் அக்கறை கொள்ளக் கூடியவர்களாகவும் மாறுவோம். 

எப்படி தவறான பாதையில் வழி நடந்த புனித அகுஸ்தினார் தன் வாழ்வில் மாற்றம் அடைந்த பிறகு பலரும் ஆண்டவரின் அன்பை அறிந்து கொள்ளவும்  உணர்ந்து கொள்ளவும் ஊன்றுகோலாய் மாறியது போல,  நாமும் நமது வாழ்வில் இறைவனை மற்றவர் அறிந்து கொள்ள, அன்பின் வழி பாதையை உருவாக்குவோம்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புனித மார்த்தா விழா! ( 29-7-2024)

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!  இன்றைய நாள் இறை வார்த்தையின் அடிப்படையில் உங்களோடு இணைந்து சிந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! ...