சனி, 28 ஆகஸ்ட், 2021

இறைவார்த்தை செயலாற்றுவது எப்போது? (29.8.2021)

இறைவார்த்தை செயலாற்றுவது எப்போது? 

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
 நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் இன்று பேசுபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.  ஆனால் கேட்பவர்களின் எண்ணிக்கை தான் மிகவும் குறைவு.  கேட்பதை விட பலர் பேசவே விருப்பம் கொள்கின்றனர். இன்று நான் சொல்வதை மற்றவர் கேட்பதில்லை என்பது தான் பல குடும்பங்களிலும்,  பல அலுவலகங்களிலும், பல உறவுகளிடமும் இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கின்றது.  இஸ்ரயேல் மக்கள் பேசியதில் கடவுள் பலவற்றை கேட்டார்.  எனவேதான் எகிப்தில் அவர்கள் அடிமையாக துன்பத்தில் வாடிய போது, கடவுளிடம் முறையிட்டு அழுதார்கள். 

கடவுள் அவர்களின் குரலை, அதாவது அவர்கள் பேசியதை செவி கொடுத்துக் கேட்டார்.  எனவே தான் விடுதலை பயணப் புத்தகம் ஒன்பதாம் அதிகாரம் மூன்றாம் வசனத்தில் கடவுள் மோசேயிடம் கூறினார், இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது.  எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கின்ற துன்பத்தை நான் கண்டேன்.  நீ போய் அவர்களை மீட்டு வா என்று மோசேயை அனுப்பி வைக்கிறார். 

         ஆனால், இது போன்று பல வேளைகளில் இஸ்ரயேல் மக்கள் பேசியதை கடவுள் காது கொடுத்துக் கேட்டார்.  எகிப்தியர் தங்களை கொல்ல நெருங்கி வந்த சூழ்நிலையில், செங்கடலை பிரித்து அவர்களுக்கு பாதை அமைத்துக்கொடுத்த போதும் சரி,  உணவு இல்லை எங்களுக்கு என்று அவர்கள் வேண்டிய நேரத்திலும் சரி,  தண்ணீர் இல்லை என கடவுளுக்கு எதிராக முறுமுறுத்த நேரங்களிலும் சரி,  உரிமை நாட்டை அவர்களுக்கு வழங்கிட, மற்றவரோடு போரிட்ட நேரங்களிலும் சரி,  உரிமையாக்கிக் கொண்ட நாட்டை பகுதிகளாகப் பிரித்துக் கொண்டிருந்த நேரத்திலும் சரி,  இன்னும் பல சூழ்நிலைகளில் பல வேளைகளில் இஸ்ரயேல் மக்கள் பேசுவதை கடவுள் கேட்டார். 

     விவிலியத்தில் காணுகின்ற கடவுள் வெறும் பேசும் கடவுள் அல்ல, கேட்கும் கடவுள்.  இஸ்ரயேல் மக்கள் பேசுவதைக் கேட்டு,  அதற்கு பதில் தருகின்ற கடவுளாக இருந்தார்.  அந்தக் கடவுள்  இன்று  மோசே வழியாக பேசுவதைத் தான் இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்க கேட்டோம். விவிலியத்தில் 120 முறை "கேளுங்கள்" என்ற வார்த்தை இடம் பெறுகிறது. கேளுங்கள் என்பது தான் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பலவற்றை இந்த மக்களோடு பேசியதற்கான அடையாளமாகிறது.  கடவுள் குலமுதுவர்கள் வழியாக,  நீதித்தலைவர்கள் வழியாக, அரசர்கள் வழியாக, இறைவாக்கினர்கள் வழியாக, பலவற்றை இந்த சமூகத்தில் பேசினார்.  அவர் பேசியது எதுவும் அவருக்கானது அல்ல.  அவர் பேசியது நமக்கானது. 

       நாம் எப்படி வாழ வேண்டும்?  நாம் என்ன செய்யவேண்டும்?  எப்படிப்பட்ட மக்களாக இருக்க வேண்டும்?  என்பதைத் தான் அவர், குலமுதுவர்கள், நீதித்தலைவர்கள், அரசர்கள்,  இறைவாக்கினர்கள் வழியாக பேசினார். இன்று மோசே வழியாக அவர் அதைத் தான் நமக்கு முதல் வாசகத்தில் கற்பிக்கின்றார்.  எப்படிப்பட்ட மக்களாக வாழவேண்டும் என்பதை சொல்லித் தருகின்றார். 
      ஆனால்,  பல நேரங்களில் கடவுள் பேசியதை பலர் கேட்டார்கள். ஆனால் அவர்களெல்லாம் இன்றைய இரண்டாம் வாசகத்தில் யாக்கோபு எழுதிய கடிதம் முதல் அதிகாரம் இருபத்து இரண்டாம் வசனம் கூறுவது போல, "இறைவார்த்தையை கேட்பவர்களாக மட்டுமல்ல,  அதன்படி நடப்பவர்களாகவும் இருங்கள்"  என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளாதவர்களாகத் தான் இருந்தார்கள்.  பல நேரங்களில் பலர் நாம் பேசுவதை கவனிக்க வேண்டும் என எண்ணுகிறோம். ஆனால் பலர் பேசுவதை நாம் கவனிப்பதில்லை. கவனித்தாலும் அதனை நாம் செயல்களில் வெளிப்படுத்துவதில்லை. 

     இன்று கேட்பதை செயலாக்கப்படுத்த நமது செயல்கள் மூலம் வெளிப்படுத்த இறைவன் அழைப்பு தருகின்றார். 

         இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட பழைய சட்டங்களை கூறி,  இயேசுவையும் அவரது சீடர்களையும் குற்றம் சாட்ட முயலுகின்ற யூதர்களிடம் சட்டங்களை மீறியவர்களுக்கு வக்காலத்து வாங்குபவராக இயேசு செயல்படவில்லை.  மாறாக சட்டத்தின் உண்மைத் தன்மையை கற்பிக்கின்றவராக,  சொல்வதைக் கேட்டு விட்டு நகரும் வெளிப்புற மனிதராக அல்ல, உள்ளார்ந்த மாற்றத்திற்கு வித்திட கூடிய ஒரு புதிய மனிதராக வாழ இறைவன் அழைப்பு தருகின்றார். 

     இன்றும் நாட்டில் பலவிதமான சட்டங்கள் அரங்கேறுகின்றன. ஆனால் அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை தொடர்கிறது.  உரிமையைக் கேட்டுப் போராடக் கூடாது.  மீறி போராட முயன்றால், தண்டனை, எனப் பல சட்டங்கள் நாளுக்கு நாள் உதயமாகின்றன.  ஏன் இவையெல்லாம்?  இச்சட்டங்கள் அன்றைய யூத மனநிலையை இன்று பிரதிபலிப்பது போல உள்ளன.  

           சட்டம்  என்பது மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக என்கிறார்கள்.  நாடு என்பது மக்களை உள்ளடக்கியது.  மக்களின் மனங்கள் ஏற்க மறுக்கும் போது, நான் பேசுவதை நீ கேள் என்று அன்று இஸ்ராயேல் மக்கள் எவ்வாறு தங்களுடைய விருப்பத்தை மட்டும் முன்னிறுத்தி இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தார்களோ அந்த மனநிலையை இன்றும் தொடர்கின்ற ஒரு சூழ்நிலையை தான் இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில் நம்மால் பார்க்க முடிகிறது.  

                  ஆனால்,  ஆண்டவர் இயேசு கிறிஸ்து, நாம் பேசியதைக் கேட்டு புரிந்து கொண்டு நம் தேவையை நிறைவு செய்தார்.  அதுபோல இறைவன் பேசுவதையும் கேட்டு புரிந்து கொண்டு,  நாம் அதனை நமது செயலில்  வெளிக்காட்ட வேண்டும்.  ஒரு நாட்டிலும் ஒரு சட்டம் என்பது பலரின் கருத்துக்கு உட்பட்டு,  அது நல்லதா? கெட்டதா என்பதை ஆராய்ந்து, அது மக்களுக்கு ஏற்றதா? இல்லையா? என்பதை மக்களிடத்தில் கேட்டு தெளிவு பெற்று, அதனை சட்டமாக்கிட வேண்டும்.  ஆனால் இந்நிலை இன்று தொடர்கிறதா என்றால் பெரும்பான்மையான அமைச்சர்கள் இருந்தால் போதும், ஒரு சட்டத்தை அரங்கேற்றி விடலாம் என்ற சூழல்தான் இங்கு நிலவிக் கொண்டிருக்கிறது.  இச்சூழலில் இயேசுவின் மனநிலை நம்மில்  பிரதிபலிக்க வேண்டும். 


               பவுல் பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 2ம்  அதிகாரம் , 5 இறை வசனம் கூறுவதுபோல, 


கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!
பிலிப்பியர் 2:5


       கிறிஸ்து கொண்டிருந்த மனநிலை உங்களிலும் இருக்கட்டும் என்ற வார்த்தைகளுக்கு ஏற்ப நமது உள்ளம் இயேசுவின் மனநிலையை, கடவுளின் மனநிலையை பிரதிபலிக்க வேண்டும். அப்போது தான் நாம் கடவுளைப் போல எல்லா சூழ்நிலையிலும் பேசுபவர்களாக மட்டுமல்லாது, கேட்பவர்களாகவும் இருந்து, அன்று இஸ்ரயேல் மக்களின் துயரத்தை துடைத்த இறைவனை நாம் நமது செயல்களின் மூலம் வெளிக்காட்டிட முடியும்.  கேட்பவராக மட்டும் கடந்து செல்லாது, செயலில், நமது நடத்தையில், இறைவார்த்தைக்கு உயிர் தருபவர்களாக மாறிட முயலுவோம்.  இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...