வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

குழந்தைகளைப் போல மனம்...(14.8.2021)

குழந்தைகளைப் போல மனம்..

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே!
இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
      சிறு குழந்தைகளைப் போல மனம் படைத்தவர்களாக இருப்பதற்கு இறைவன் இன்றைய நாளில் நம்மை அழைக்கின்றார்.  அத்தகைய இதயத்தை தான் இறைவன் இயேசுவும் கொண்டிருந்தார்.  எனவேதான், தான் வாழ்ந்த இந்த மண்ணிலே மக்கள் எவ்வாறாக இருந்தாலும், அனைவரையும் ஏற்றுக் கொண்டு, அனைவரோடும் உறவு பாராட்டக் கூடியவராக இயேசு இந்த மண்ணில் வாழ்ந்தார்.  தந்தையின் உள்ளமும் இதே சிறுகுழந்தை உள்ளத்தைக் கொண்டதாகவே இருந்தது. எனவேதான் இஸ்ரயேல் மக்கள், தாங்கள் ஆண்டவரை விட்டு பிரிய மாட்டோம், அவருக்கு எதிராகச் செல்லமாட்டோம் என்று கூறினாலும்,  தங்கள் சொல்லை அவர்கள் செயலாக்காமல் தங்கள் வாழ்வில் ஆண்டவருக்கு எதிரான காரியங்களில் அவர்கள் ஈடுபட்ட நேரங்களில் எல்லாம், ஆண்டவர் அவர்களை மன்னித்து, சிறு குழந்தை மனம் கொண்டவராய் அவர்களை ஏற்றுக் கொண்டு,  அவர்களோடு உறவைப் புதுப்பித்துக் கொண்டு மீண்டும் அவர்களோடு உறவோடு வழிநடத்தினார். 
         இன்று நாம் வாழுகின்ற இந்த உலகத்தில், பல நேரங்களில் நாம் கடின உள்ளம் கொண்டவர்களாக, சிறு குழந்தை உள்ளம் இல்லாதவர்களாகவும் இருக்கின்றோம்.  இந்த கடின உள்ளத்தின் காரணமாக பல நேரங்களில் நாம் அடுத்தவரோடு உள்ள உறவை துண்டித்துக் கொள்ள விரும்புகிறோம்.  எப்படி இயேசுவிடம் வர நினைத்தவர்களை பலர் தடுத்தார்களோ, அது போல பல நேரங்களிலும் நாமும் தடுக்கக் கூடியவர்களாகத் தான் இருக்கிறோமே ஒழிய, இணைந்து இன்புற்று  வாழாதவர்களாக பல நேரங்களில் நாம் செயல்படுகிறோம். அத்தகைய நிலையில் இருந்து கடந்து,  அனைவரையும் இன்முகத்தோடு ஏற்றுக் கொண்டு,  ஒருவர் மற்றவரோடு இணைந்து வாழ சிறு குழந்தை உள்ளம் கொண்டு நாம் இவ்வுலகத்தில் பயணிக்க இறைவன் அழைப்பு தருகின்றார். அழைக்கும் இறைவனின் குரலுக்கு செவி கொடுத்தவர்களாய்,  வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு, நமது உள்ளத்தை புதுப்பித்துக்கொண்டு,  சிறு குழந்தைகளைப் போல உள்ளம் படைத்தவர்களாகிட இறையருளை இன்றைய நாளில் வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...