சனி, 7 ஆகஸ்ட், 2021

நன்மைகள் செய்து பரிவு காட்டிட...(8.7.2021)

நன்மைகள் செய்து பரிவு காட்டிட,  நிரந்தரமற்றவைகளைக் கொண்டு நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள,  இன்றைய நாளில் நாம் அனைவரும் அழைக்கப்படுகின்றோம். 
 இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

 இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட முதல் வாசகத்தில் எலியா இறைவாக்கினர் நெடும்பயணம் மேற்கொண்டு, உண்ண உணவும் குடிக்க நீருமின்றி தவித்த வேளையில்,  இனி வாழ்வது சாத்தியம் அல்ல என எண்ணியவராய், "நான் வாழ விரும்பவில்லை, மரிக்கவே விரும்புகிறேன்" என்று எண்ணியவராய் ஒரு சூரைச் செடியின் அடியில் படுத்து உறங்கினார். உறங்கிய அவரைத் தட்டி எழுப்பி ஆண்டவரின் தூதர் அவருக்குக் உண்ண உணவும் குடிக்க நீரும் தந்தார்.

 துன்புறும் நேரத்தில் யாருமே நம்மை கவனிக்கவில்லை, நமக்கென யாரும் இல்லை என எண்ணக்கூடிய நேரங்களில், நம்மோடு உடன் இருப்பவர் இறைவன் ஒருவரே. இதனை நாம் இயேசுவின் வாழ்வில் இருந்து உணர முடியும். இந்த மண்ணில் மனிதனாகப் பிறந்து, இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்வால் வெளிக்காட்டியவர் இந்த இயேசு கிறிஸ்து. மற்றவர்களை போல எப்படி இருக்க வேண்டும் என்பதை கற்பித்து விட்டு நகர்ந்தவரல்ல. தான் எதையெல்லாம் கற்பித்தாரோ, அதையெல்லாம் தன் வாழ்வாக மாற்றியவர்.  இந்த சமூகத்தில் மனிதனை மனிதன் தொட மறுத்து ஒதுக்கி,  நோய்வாய்ப்பட்டு இருக்கக்கூடிய ஒருவன் நோய்வாய்ப்பட்டதன் காரணம், அவன் முன்னோர் செய்த பாவம்,  அவன் செய்த பாவம் எனக் குற்றம் சாட்டி,  மனிதனை மனிதன் அந்நியப்படுத்திய போது அந்நியப்படுத்துதல் கூடாது எனக் கூறியவராய், அனைவரையும் அரவணைத்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  எப்போது இவன் மீது குற்றம் சாட்டலாம் என்ற எண்ணத்தோடு அவருடன் நடந்து கொண்டிருந்த பல சூழ்ச்சி செய்யக்கூடிய மனிதர்களுக்கு மத்தியில், அவர்களும் இறையாட்சிக்கு உட்பட வேண்டும் என எண்ணியவராய், எப்படி இந்த சமூகத்தில் வாழ வேண்டும் என்பதை தன் போதனைகள் வழியாக வெளிக் காட்டியவர் இந்த இயேசு கிறிஸ்து.

        வாழ்வில் நம்பிக்கை இழந்து இனி எல்லாம் முடிந்து விட்டது என எண்ணியவர்களாய் இந்த சமூகத்தில் உடல் ஊனமுற்றும்,  கண் தெரியாமலும்,  காது கேட்காமலும்,  வாய் பேச முடியாமலும் தவித்த பலருக்கு வாழ்வை தந்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  நம்பிக்கையை மையமாகக் கொண்டு,  இந்த சமூகத்தில் வலம் வந்தவர் இந்த இயேசு கிறிஸ்து. இவரின் மீது நம்பிக்கை கொண்டு தான், இன்று நாமும் இச்சமூகத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.  இவரின் மீது நம்பிக்கை கொண்ட நாம் அனைவரும் நாம் இவரின் சீடர்கள்,  இவரை பின்பற்றுபவர்கள் என சொல்லிக் கொண்டு மட்டும் வாழ்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை. நமது  சொல் நமது வாழ்வில் செயலாக்கப்படவேண்டும். 

     இயேசு கிறிஸ்து தன்னை துன்புறுத்தியவர்களையும் நேசித்தார். தன்னை வெறுத்தவர்களையும் அன்பு செய்தார்.  எந்த மக்களுக்காக இவர் அனைத்தையும் செய்தாரோ, அந்த மக்களால் கைவிடப்பட்ட நிலையில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, சிலுவை மரணத்திற்கு கையளிக்கப்பட்டார். சிலுவையில் தொங்கும் வேளையில் கூட, பலர் அவரை எள்ளி நகையாடிய போது, அதனை கண்டு மனம் தளராது அந்த நேரத்திலும் கூட, அவர் அனைவரையும் ஏற்றுக் கொண்டவராய், உணர்வுகளையும் உணர்ந்தவராய், தந்தையினிடத்தில், இவர்கள் செய்வதை அறியாமல் செய்கிறார்கள் என நமக்காக மன்றாடி,  தன்னுயிரைத் தியாகம் செய்தார்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து எல்லாச் சூழ்நிலையிலும் நன்மை செய்யக் கூடியவராகவும், பரிவு கொள்ளக் கூடியவராகவும் இருந்தார்.  அவரிடத்தில் எந்தவித வேறுபாடும் இல்லை.  அவர் செய்த நன்மையில் பாகுபாடு என்பதில்லை.  அனைவரிடத்திலும் ஒரே மாதிரியாக ஒரே குணம் கொண்டவராக, அனைவரையும் அரவணைத்துச் செல்லக் கூடியவராக, இந்த இயேசு கிறிஸ்து வாழ்ந்தார். 

        இவரை பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் பரிவு கொண்டு, 
அடுத்தவரை அன்பு செய்யவும், நன்மைகள் செய்யவும், அழைக்கப்படுகின்றோம். இன்றைய நாளில் நாம் வாசிக்கக் கேட்ட இரண்டாம் வாசகம் இதைத் தான் வலியுறுத்துகிறது. நன்மைகள் செய்து பரிவு காட்டிட நம்மை அழைக்கின்றது.  இந்த இயேசு எப்படி மண்ணில் வாழ்ந்த போது எல்லோருக்கும் நன்மைகள் செய்து பரிவு காட்டக் கூடியவராக இருந்தாரோ,  அவரைப்போல நாமும் அடுத்தவர் மீது பரிவு காட்டவும் அடுத்தவருக்கு நன்மை செய்யவும் அழைக்கப்படுகின்றோம். 


          நம்மை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கலாம், அல்லது ஏற்காதவர்களாக இருக்கலாம், நம்மை குறை கூறுபவர்களாக இருக்கலாம், அல்லது நமது வீழ்ச்சியில் மகிழக் கூடியவர்களாக இருக்கலாம். அனைவரையும் நாம் அன்பு செய்ய வேண்டும். அனைவர் மீதும் பரிவு கொள்ள வேண்டும். அனைவர் மீதும் நாம் இரக்கம் காண்பித்து அவர்களுக்கு நன்மைகளை செய்ய வேண்டும்.  இதுவே இன்றைய நாளில் இறைவன் நமக்குத் தருகின்ற செய்தியாக உள்ளது.

 பரிவு காட்டுவோம். பரிவு காட்டுவதன் வழியாக நன்மைகள் பல செய்வோம்.  நம்மை நம்பியவர்கள் நல்வாழ்வு பெறவும், நம்மை ஏற்றுக் கொள்பவர்களும், ஏற்றுக் கொள்ளாதவர்களும், நம்மிடமிருந்து நன்மைகளை பெற்றுக் கொள்ள இன்றைய நாளில் உள்ளத்தில் உறுதி ஏற்றுக் கொள்வோம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து நானே வானிலிருந்து இறங்கி வந்த நிலையான உணவு என்கிறார்.  அந்த நிலையான உணவை உட்கொள்ளுகின்ற அனைவரும் நிலை வாழ்வை பெறுவார்கள்.   ஆண்டவர் இயேசுவைப் பின்பற்றுகின்ற நாமும் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள வேண்டும் என்றால், நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்தையும் எவ்வித பாகுபாடும் இன்றி,  அனைவருக்கும் நன்மைகளை செய்து, அனைவர் மீதும் பரிவு காட்டக் கூடியவர்களாக மாறி, நிலையற்ற பலவற்றைக் கொண்டு, நிரந்தரமான நிலை வாழ்வை நாம் உரிமையாக்கிக் கொள்ள வேண்டும்.  இயேசுவைப் பின்பற்றும் நாம் இன்றைய நாளிலிருந்து, இனி வருகின்ற ஒவ்வொரு நாளும் அடுத்தவருக்கு நன்மை செய்பவர்களாகவும், அடுத்தவருக்கு பரிவு காட்டக் கூடியவர்களாகவும் மாறிட இறையருளை இன்றைய நாளில் இணைந்து வேண்டுவோம் இந்த திருப்பலி வழியாக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...