புதன், 11 ஆகஸ்ட், 2021

இறைவனை முன்னிறுத்துவோம்...(12.08.2021)

இறைவனை முன்னிறுத்துவோம்.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! இன்றைய நாள் இறைவார்த்தையின் அடிப்படையில் என் சிந்தனைகளை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். 
   இன்றைய நாளில் வாசிக்கப்பட்ட வாசகங்கள் அனைத்தும் நமது வாழ்வில் இறைவனை முன்னிறுத்தி, அவரைப் பின்பற்றி, அவரைப் போல இந்த சமூகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட  நமக்கு அழைப்புத் தருகின்றன.  தொடக்க நூல் 1ம் அதிகாரம் 28ஆம் வசனம் கூறுகிறது, கடவுள் மனிதரைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்தார் என்று.  கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டுள்ள நாம் அவரை இந்த சமூகத்தில் பிரதிபலிக்கக் கூடியவர்களாக மாறிட வேண்டும். 

 இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து அழைத்து வந்த இறைவனை எல்லாச் சூழ்நிலையிலும் முன்னிறுத்த வேண்டும் என்ற செய்தியினை, இறைவாக்கினர்கள் வலியுறுத்துகிறார்கள். 

 எனவேதான்  ஆண்டவரின் பேழையை முதலில் சுமந்து கொண்டு, மக்களுக்கு முன்பாக ஆண்டவரின் பேழை செல்ல,  அதனைப் பின்செல்லக் கூடியவர்களாக அவர்கள் எப்போதும் இருக்கின்றார்கள்.  ஆண்டவரின் பேழை என்பது அவர்களுக்கு ஆண்டவரின் உடன் இருப்பை உணர்த்துவதாகவும்,  அவரே தங்களை முன் நின்று நடத்துவதாகவும் கண்டார்கள்.  நமது வாழ்வில் நாமும் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவரை முன்னிறுத்தவும் அவரே நம்மை முன்னின்று வழி நடத்துகிறார் என்பதை கண்டு கொள்ளவும் நாம் அழைக்கப்படுகின்றோம். 

        பொதுவாகவே நாம் வாழுகின்ற இந்த உலகத்தில்,  ஆண்டவரை முன்னிறுத்துவது என்பது,  நல்ல காரியங்களில் நமக்கு நாமே மார்தட்டிக் கொண்டும் ஏதேனும் ஒரு துயரம் வருகின்றபோது ஆண்டவரை முன்னிறுத்தக்கூடிய பணியையும் தான் அறிந்தும் அறியாமலும் பலர் பல இடங்களில் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் எல்லாச் சூழ்நிலையிலும் ஆண்டவரை முன்னிறுத்த நாம் அழைக்கப்படுகின்றோம்.  ஆண்டவரை முன்னிறுத்துகிறோம் என்றால்,  அது நமது  சொல்லிலும் செயலிலும் வெளிப்பட வேண்டும்.  ஆண்டவர் இயேசு கிறிஸ்து இந்த மண்ணுலகில் வாழ்ந்த போது தன்னை  மரணத்திற்கு கையளித்தவர்களையும்,  தன்னை குற்றுயிரும் குலை உயிருமாக சிலுவையில் தொங்க விட்டு எள்ளி நகையாடிக் கொண்டிருந்தவர்களையும்  ஒன்று எனக் கருதினார்.  அனைவரையும் மன்னித்தார். அனைவரையும் ஏற்றுக் கொண்டார்.  அவர்களின் குற்றங்களுக்காக இறைவனிடத்தில்  பரிந்து பேசி மன்றாடினார். 

       அந்த இயேசு கிறிஸ்துவை நமது வாழ்வில் நமது சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்தும் போது தான் உண்மையாகவே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கக் கூடிய மக்களாக இந்த சமூகத்தில் நாம் வலம் வர முடியும். 

 ஒருவர் எத்தனை முறை மன்னிக்க வேண்டும் என்ற கேள்விக்கு எல்லை கடந்த அளவில் மன்னிக்க வேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்பிக்கின்றார்.  கற்பித்ததை தன் வாழ்வில் செயலாக்கப்படுத்தி காண்பித்தவர் இந்த இயேசு கிறிஸ்து.  இந்த இயேசுவை பின்பற்றுகின்ற நீங்களும் நானும், இவரிடம் காணப்பட்ட பண்புகளை நமது நற்பண்புகளாக மாற்ற வேண்டும்.  வெறும் வாய் வார்த்தையாக சொல்லி விட்டு நகர்ந்து விடாது, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை உண்மையாகவே சொல்லிலும் செயலிலும் இந்த சமூகத்தில் பிரதிபலித்து,  எல்லாச் சூழ்நிலைகளிலும்  அவரை முன்னிறுத்தி பயணிக்கக் கூடியவர்களாக இந்த சமூகத்தில் நாம் உருவாகிட இன்றைய நாளில் இறையருளை வேண்டுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...