புதன், 4 ஆகஸ்ட், 2021

வாதாடுவதை விட உரையாடுவது சிறந்தது... (5.8.2021)

 வாதாடுவதை விட உரையாடுவது சிறந்தது.

இறைவன் இயேசுவில் அன்புக்குரியவர்களே! 



இன்றைய முதல் வாசகத்தில் கடவுளோடு இஸ்ரயேல் மக்கள் வாதாடுகிறார்கள். கடவுள் செய்த அனைத்து விதமான அரும் அடையாளங்களையும் மறந்து போனவர்களாய்,  கடவுளுக்கு எதிராக மோசேயோடும்  ஆரோனுடனும் வாதாடக் கூடிய நிகழ்வை நாம் வாசிக்க கேட்டோம்.  வாதாடும் மக்களோடு இறைவன் வாதாட விரும்பவில்லை.  மாறாக தன்னுடைய அரும் அடையாளங்கள் வழியாக உரையாட விரும்பியவராய்,  எனவே பாறையிலிருந்து தண்ணீரை வரச் செய்தார் கடவுள். 

இந்த உலகத்தில் பல நேரங்களில் நாம் மற்றவரோடு உரையாடுவதை விட, வாதாடத் தான் அதிக நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.  இன்றைய நற்செய்தி வாசகத்தில் கூட,  இயேசு தன்னுடைய சீடர்களோடு உரையாடுகிறார்.  தன்னை யார் எனக் கேட்கிறார். ஒவ்வொருவரும் மக்கள் அவரை எவ்வாறு கூறுகிறார்கள் என்பதை அறிவித்த போதும் கூட,  நீங்கள் என்னை எவ்வாறு புரிந்து கொண்டீர்கள்? என்று கேள்வி எழுப்பிய போது சீமோன் பேதுரு அவரை மெசியா என அறிவிக்கின்றார் பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு இயேசு அவரிடத்தில், திருஅவையைக் நிறுவுவதை உறுதிப்படுத்துகின்றார்.  அதே இயேசு தன் வாழ்வில் துன்பங்களை  சந்திக்க வேண்டும் என்று கூறும்போது, அதை வேண்டாமென்று மறுக்க கூடியவராக, மனித இயல்புக்கு உரியவராக பேதுரு செயல்படுகிறார். எனவே பேதுருவை கடிந்தும் கொள்கிறார். 

கடவுள் இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரோடும் உரையாட விரும்புகிறார். ஆனால் பலர் பல நேரங்களில் கடவுளோடு உரையாட விரும்புவது இல்லை. மனித இயல்புக்குரிய நோக்கோடு, பல நேரங்களில் நாம் வாதாடவே முயலுகிறோம். ஆனால் ஆண்டவர் இயேசு மனித இயல்புக்கு ஏற்ற வகையில் செயல்படாது, கடவுளுக்கு ஏற்ற வகையில் செயல்பட அழைப்பு தருகின்றார்.  

இன்று நம்மிள் பலருக்கு வாதாட தெரிகிறது. ஆனால் சிலருக்கே உரையாட தெரிகிறது. நமது உரையாடல் ஒருவர் மற்றவரை உயர்த்துவதாகவும், ஒருவர் மற்றவருடைய துன்பத்தில் பங்கெடுப்பதாகவும்,  ஒருவர் மற்றவருடைய வாழ்வுக்கு வழி காட்டுவதாகவும் இருக்க வேண்டும்.  இயேசுவும் அப்படிப்பட்ட உரையாடலைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கின்hர். வாழ்வில் துன்பங்கள் வருகிறது என்றால், அந்த துன்பங்களில் இருந்து நாம் வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொண்டு, மனித இயல்பில் இருந்து களைந்து,  கடவுளுக்குரிய இயல்பைப் பெற்றவர்களாய்,  கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவர்களாய், அவரது உரையாடலை உணர்ந்து கொண்டு இச்சமூகத்தில் உரையாடக் கூடியவர்களாய் இந்த சமூகத்தில் பயணிக்க இணைந்து இறையருளை வேண்டுவோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...