புதன், 25 ஆகஸ்ட், 2021

விழிப்போடு இருக்க வேண்டும்... (26.08.2021)

 விழிப்போடு இருக்க வேண்டும்...

பொதுக்காலம் 21ஆம் வாரம் ஆகஸ்ட் 26 வியாழக் கிழமை

இயேசுவின் தோழர்களே!






ஒரு ஆசிரியர் தன்னிடம் படித்த ஒரு  மாணவன் நல்ல நிலையில் இருப்பதை கண்டு மகிழ்வது போல,  இன்றைய நாள் முதல் வாசகத்தில் தான் நற்செய்தி அறிவித்த தெசலோனிக்க நகர் பகுதியைப் பற்றி அறிகின்ற பவுல்,  அந்த பகுதி மக்கள் ஆண்டவர் இயேசுவின் மீது அதீத நம்பிக்கை கொண்டு அர்த்தம் உள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ்வதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தவராய் அவர்களைப் பாராட்டுகிறார்.  அவர்கள் ஆண்டவரோடு உறவில் நிலைத்திருப்பதை கண்டு அவர் மகிழ்கின்றார்.  அவர்களது மகிழ்ச்சி தனக்கு  பெருமகிழ்ச்சியாக மாறியது எனக் கூறுகின்றார்.  அவர்களுடைய அத்தகைய நல்வாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறக் கூடியவராக இருக்கிறார். 

இறைவன் படைத்த இவ்வுலகில் நம்மிடமிருந்து கற்றுக் கொண்டதை மற்றவர்கள் வாழ்வில் செயலாக்கப்படுத்துகிறார்கள் என்பதை கண்ணால் காணும் பொழுது,  நமது உள்ளம் எவ்வாறு மகிழ்வாக இருக்கின்றதோ அது போலவே, பவுலின் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை இன்றைய முதல் வாசகம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. 

ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விழிப்பாய்  இருப்பதற்கு நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஒரு உண்மையான கிறிஸ்தவன் இந்த சமூகத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை  நமது பெற்றோர்,  ஞானப்பெற்றோர், பங்குத்தந்தை, அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், நண்பர்கள். உறவுகள் என நாம் காணக்கூடிய பல நல்ல மனிதர்கள் நமக்கு ஒவ்வொரு நாளும் கற்றுக் கொடுக்கிறார்கள்.  கற்றுக் கொடுத்தவற்றை எல்லாம் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டுவிட்டுச் செல்லக் கூடியவர்களாக நாம் இருப்போமாயின் அது அர்த்தமற்றதாக மாறிவிடுகிறது.  மாறாக கற்றுக்கொடுத்த அனைத்தையும் மனதில் இருத்தி அவற்றை நமது வாழ்வில் நாம் செயலாக்கப்படுத்தும் போது தான் இறைவன் விரும்பக்கூடிய நல்ல பணியாளர்களாக நாம் இச்சமூகத்தில் வலம் வர முடியும்.  அதற்கு நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.   பிறர் நம்மை கவனிக்கிறார்கள் என்பதற்காக நாம் நல்லவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்ல.  நாம் எப்போதும் எல்லா சூழ்நிலையிலும் எல்லா நேரத்திலும் நாம் ஆண்டவர் இயேசு விரும்பக்கூடிய நல்ல மனிதர்களாக இச்சமூகத்தில் விழிப்போடு இருக்க வேண்டும். மேலும் எதிர்பாராத நேரத்திலும் நாம்  நமது கடமைகளை சரியாக செய்து கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பயணிக்கின்ற போது நாம் எதிர்பாராத நேரத்தில் நமது வாழ்வுக்கான பரிசினை இறைவன் கண்டிப்பாக வழங்குவார். பரிசை எதிர்நோக்கி அல்ல,  மாறாக இந்த சமூகத்தில் வழிப்போடு பயணித்து ஆண்டவர் இயேசுவின் உண்மை சீடர்களாக நாம் மாறிடுவோம். இதுவே இறையரசை இம்மண்ணில் நிலைநாட்டுவதற்கான வழியாகும்.  நாம் நமது செயல் வழியாக இம்மண்ணில் இறையரசை நிலைநாட்டிட துவக்கப் புள்ளியாக மாறிட, இன்றைய நாளில் இறையருளை  இணைந்து வேண்டுவோம்.

இறைவன் நம்மை ஆசீர்வதிப்பார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Photography Topics with Pictures...

Photography Topics: 1. Street Photography:  2. Candid Photography: 3. Minimalist Photography: 4. Silhoue...